தமிழகத்துக்கு கை கொடுத்த தென்மேற்கு பருவமழை! இன்னும் எத்தனை நாளைக்கு பெய்யும்?Sponsoredமிழகத்தில் அரசியல் சூடு அதிகரித்திருக்கும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்து மக்களை குளிர்வித்திருக்கிறது வானிலை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை வரும் 30-ம் தேதியுடன் விடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிக அளவு இருக்கவில்லை.
அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்திலும், செப்டம்பர் மாதத்திலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வளவாக மழை இல்லாமல் தவித்த தமிழகத்துக்கு விடிவு பிறந்திருக்கிறது. வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த தமிழகம் ஆறுதல் அடைந்திருக்கிறது.

கோவையில் அதிகம்

Sponsored


மேற்குத் தொடர்ச்சி மலையைச் சுற்றி உள்ள மாவட்டங்களில்தான் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகம் இருந்திருக்கிறது. உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களிலும் வழக்கமான அளவு  பெய்திருக்கிறது. தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில்தான் அதிகம் பெய்திருக்கிறது. இந்த மாவட்டத்தில் 501.8 மி.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 191 சதவிகிதம் அதிகமாகும்.
இதற்கு அடுத்ததாக, தேனி மாவட்டத்தில் 353.9 மி.மீ பெய்துள்ளது. இங்கு வழக்கத்தை விட 149 சதவிகிதம் அதிகமாகும்.  இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் 310.4 மி.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 126 சதவிகிதம் அதிகமாகும்.

Sponsored


டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை

வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சூழலில் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 453.4 மி.மீ பெய்திருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் 273.6 மி.மீ., நாகை மாவட்டத்தில் 259.8 மி.மீ மழையும் பெய்திருக்கிறது. 

குமரியில் மழை குறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 382.5 மி.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 15 சதவிகிதம் குறைவாகும். தர்மபுரி மாவட்டத்தில் 340.1 மி.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 7 சதவிகிதம் குறைவாகும்.

சென்னை நிலவரம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்வதைப் பொறுத்துத்தான் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர்மட்டம் உயரும். தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை சென்னை மாவட்டத்தில் 439.5 மி.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட ஆறு சதவிகிதம் அதிகம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 472 .8 மி.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட மூன்று சதவிகிதம் அதிகம். திருவள்ளூர் மாவட்டத்தில் 480 மி.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 14 சதவிகிதம் அதிகம். மூன்று மாவட்டங்களிலும் வழக்கத்தை விட அதிகம் பெய்திருப்பதால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் ஆறுதல் தரும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.

பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் சேர்த்து 376 மி.கன அடி நீர் இருக்கிறது. இதை வைத்து சென்னையின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளித்து வருகின்றனர். குடிநீர் குழாய்களில் தினமும் 470 மி.லிட்டர் தண்ணீரை சென்னை குடிநீர் நிறுவனம் விநியோகம் செய்து வருகிறது.  குடிநீர் குழாய்களில் தண்ணீர் விடப்படுவதால், இப்போது லாரிகளின் மூலம் தண்ணீர் விநியோகிக்கும் டிரிப் அளவு, 8,100 என்பதில் இருந்து 7900 டிரிப் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

31 சதவிகிதம் அதிகம்

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரனிடம் கேட்டோம், "தமிழகத்தில் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இப்போது மத்திய மேற்கு வங்கக் கடற்பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இப்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு வடமாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும். 28-ம் தேதி முதல் படிப்படியாகக் குறையும்.
வரும் 30-ம் தேதியுடன்  தென்மேற்குப் பருவமழை முடிவடைகிறது. இந்தத் தென்மேற்குப் பருவமழை காலத்தில் தமிழகத்தில் 39 செ.மீ பெய்திருக்கிறது. இது வழக்கத்தை விட 31 சதவிகிதம் அதிகம். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொதுவாக அக்டோபர் 20- ம் தேதி தொடங்கும். இந்த முறையும் வழக்கமாக அதே நாளில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.Trending Articles

Sponsored