மருத்துவ சேவையை நிர்ணயிக்கும் இன்னொரு தேர்வு...கிராமப்புற மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த செக்!Sponsoredநாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் கூட ப்ளஸ் டூ முடித்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால்தான் எம்.பி,பி.எஸ் படிப்பில் சேரமுடியும் என்ற நடைமுறை திணிக்கப்பட்டிருக்கிறது. இதுபோல எம்.பி.பி.எஸ் முடித்து வெளியேறும் மாணவர்களின் மருத்துவத் திறனை சோதிப்பதற்காக எக்சிட் தேர்வு என்றும் நடைமுறையை அமல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. National Medical Commission Bill, 2017 மசோதாவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து விட்டது. வரும் கூட்டத்தொடரில் இது நிறைவேற்றப்பட்டால் எம்.பி.பி.எஸ் முடித்து வெளியேறுபவர்கள் இந்த தேர்வு எழுதினால் மட்டுமே எம்.பி.பி.எஸ் என்று போட்டுக்கொள்ள முடியும் என்று சொல்கின்றனர்.

"எங்கோ வலிக்கப்போகிறது? யாருக்கோ முள் குத்தப்போகிறது எனக்கென்ன?” என நினைத்துக்கொள்வது உங்கள் விருப்பம்.  அப்போது எனக்குப் பத்து வயது இருக்கும். நானும், என் அப்பாவும் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தோம். மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு இடத்தில் நிறுத்தி, அங்கே சாலையில் கிடந்த முள்ளை எடுத்து சாலையோரத்தில் போடச்சொன்னார். நான் நினைத்ததுவோ வேறு, “நாமதான் பார்த்துட்டோமே, இதுல சைக்கிள விடாம நகர்ந்து போயிடலாம். நாம் ஏன் எடுத்துப் போட வேண்டும்?” என்றேன். 

Sponsored


"நாம முள்ளைப் பார்த்துட்டோம்தான். ஆனா, வேற யாராவது பார்க்காமல் சைக்கிளை அதில் விட்டுவிட்டால், அவர்கள் வண்டி பஞ்சர் ஆகாதா?” என்று கேட்டார். “யாருக்கோ தானே ஆகப்போகுது, நமக்கென்ன?” என்றேன். சிறுபிள்ளைத்தனமாக நான் “யாருக்கோ, நமக்கென்ன” என்று சொன்னபோது அதை மாற்றி சரிசெய்துவிட்டார் என் அப்பா. யாருக்கோ என ஒட்டுமொத்த சமுதாயமும் நினைக்கும்போது என்ன சொல்வது? யாரோ மருத்துவம் படிப்பவர்களுக்குத்தானே என வெளியேறும் தேர்வு (Exit test) என்று கருதி அந்தத் தேர்வை யாரும் கண்டுகொள்வதேயில்லை. விட்டுவிட்ட முள் திரும்பி வருகையில் நம்மையேகூட காயப்படுத்தலாம். இது உங்கள் அனைவரையும் காயப்படுத்தக் காத்திருக்கிறது.

Sponsored


மருத்துவம் படித்து முடிப்பவர்கள் இந்தத் தேர்வைக் கட்டாயம் எழுத வேண்டும். இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டே மேல்நிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். தேர்வில் தோல்வியடைபவர்களுக்கு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் உரிமம் வழங்கப்படாது. இதன்மூலம் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கலாம் எனக் கனவு வேண்டுமானால் காண முடியும். தேர்வினால் ஒருவரின் மருத்துவம் செய்யும் திறனை மேம்படுத்த முடியாது. உண்மையில் தேவையான, தரமான மருத்துவ வசதிகளை செய்துதராமல், தரமான மருத்துவர்களை உருவாக்குகிறோம் என அதிலிருந்து உங்களைத் திசைதிருப்புகிறார்கள்.

'இந்தியாவின் சிறந்த மருத்துவக் கட்டமைப்பு' எனப் புகழப்படும் தமிழகத்தின் நிலை என்ன தெரியுமா? 30,000 மக்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம்கூட இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளொன்றுக்கு வருகைதரும் 300 நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய இரண்டே மருத்துவர்கள்தான் உள்ளனர். அவர்களின் பணி நேரத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு நோயாளியைக் கூட கவனிக்க இயலாது. இந்த இடங்களில் வேலைசெய்யப்போகும் மருத்துவருக்குத் தேர்வு வைத்து வீட்டுக்கு அனுப்புவது எவ்வளவு மடத்தனம். ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைமையை எடுத்துக்கொண்டால் (அரசு மற்றும் தனியார் சேர்த்து) பத்தாயிரம் நபர்களுக்கு ஒரு மருத்துவர்கூட இல்லை. ரஷ்யாவில் இருநூறு நபர்களுக்கு ஒரு மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் கூட இதுபோன்ற தேர்வுகளை நடத்துவதில்லை. இதுபோன்றத் தேர்வுகளை எழுதி, மேல்படிப்பு முடித்த மருத்துவர் அருகிலுள்ள சிறிய நகரத்திற்குப் போகவே ஒரு மணிநேரம் ஆகும் கிராமங்களில் புறநோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பாரா என்ன? 

இந்தியாவில் மின்சாரமே இல்லாத கிராமங்கள் இருக்கின்றன எனச் சொல்லும் பிரதமர் மோடி, மருத்துவர்களையும், மருத்துவ வசதிகளையும் எப்படிக் கொண்டுபோய் சேர்ப்பார்? இந்தத் தேர்வின் மூலமாகவா? உயர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு பெருநகரங்களுக்குச் செல்லலாம். ஆனால், அடிப்படை மருத்துவ சிகிச்சை பெறுவதற்கே அருகில் உள்ள பெரிய நகரங்களை நாடவேண்டிய நிலை வருங்காலத்தில் உருவாகலாம். 

முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த மருத்துவர்கள் எல்லாம் பெரிய நகரங்களில் வேலை செய்கின்றனர், ஏனெனில் அங்கேதான் அதிகமான பணம் சம்பாதிக்க முடியும். பெருநகரங்களை நோக்கி மக்கள் நகர்கின்றனர். ஏனெனில் அங்கேதான் தரமான மருத்துவம், தரமான கல்வி கிடைக்கும். இப்படியான நகர்வுகளால்தான் பெருநகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து, வேலைவாய்ப்பற்ற, விலைவாசி உச்சத்தில் ஏறிய மாநகரங்களாக மாறியுள்ளன. நகரங்களிலும் ஆக்ஸிஜன் வழங்குவது கிடையாது. நல்ல தரமான மருந்துகளை வழங்குவது கிடையாது. இனிவரும் காலங்களில் மருத்துவர்களும் இல்லாத நிலை உருவாகும். போகிற போக்கைப்பார்த்தால் அரசு மருத்துவமனைகள் சரியில்லை எனத் தனியாரிடம் ஒப்படைத்துவிட பரிந்துரை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

மருத்துவர் வெளியேறுவதற்கான தேர்வில் தொடங்கி நகரமயமாக்கல், தனியார்மயமாக்கல் வரை தெரிவிக்கிறோமே என்று கருதக்கூடும். தேவையில்லாமல் ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்கிறீர்களா? உடலில் மொட்டைத்தலையானாலும், முழங்கால் ஆனாலும், எங்கு அடித்தாலும் நமக்கு வலிக்கும் அல்லவா? "எங்கோ வலிக்கப்போகிறது, யாருக்கோ முள் குத்தப்போகிறது எனக்கென்ன?” என நினைத்துக்கொள்வது உங்கள் விருப்பம். 

ஆனால், இன்று நீட் தேர்வு விலக்கு கிடைக்காததால், தமிழகத்தில் ஓர் உயிரைப் பலி கொடுத்து விட்டோம். நீட்-க்கு எதிராகப் போராடுபவர்கள், எதிர்காலத்தில் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள், டாக்டர்கள் ஆவதற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டுதான். அதேபோன்று, எம்.பி.பி.எஸ். முடிப்பவர்களுக்கான எக்ஸிட் தேர்வால், எதிர்காலத்தில் கிராமப்புற சுகாதாரம் கேள்விக்குறியாகும் என்பது உறுதி. எனவே. இதுபோன்ற நிலையை மாற்றவும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்பதே நம் கருத்து! 

கலைச்செல்வன் ,.

மாணவப் பத்திரிகையாளர்Trending Articles

Sponsored