"15 லட்சம் கணக்கில் வரும் என மோடி எப்போது சொன்னார்?” தமிழிசை தடாலடி!Sponsored''வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்பட்டு இந்திய மக்களுக்கு வழங்கப்படும்'' என பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தெரிவித்திருந்தார் எனத் தகவல்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளைக் கடந்திருக்கும் வேளையில், அது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பத்தொடங்கியுள்ளன. 

மத்திய அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்த எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், ''வங்கிக் கணக்கில் இந்திய மக்களுக்குப் பணம் போடுவதாக மோடி சொல்லவே இல்லை'' என்று தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை  சவுந்திரராஜன் பேசியுள்ள விவகாரம், அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. குறிப்பாகத் தி.மு.க இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து பேசிவருகிறது. தி.மு.க-வின் இந்தக் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் தமிழிசை சவுந்திரராஜன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் பதிவில், ''ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக மோடிசொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் போடும் அளவுக்கு வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது என்றே மோடி பேசினார்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Sponsored


Sponsored


அவர் சொன்ன அந்தக் கருத்தைத்தான்  இப்படித் திரித்துக் கூறிவிட்டார்கள் என்றும் தமிழிசை சவுந்திராஜன் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தக் கருத்துக் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ''15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என யாராவது பேசுவார்களா? லாஜிக் இல்லாமல் சொல்கிறார்கள். அது தவறான கருத்து. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில்  15 லட்சம் ரூபாய் போடுவதாகப் பிரதமர்  சொன்னதாகக் குற்றச்சாட்டுபவர்களும், விமர்சனமும் வைப்பவர்களும் அதனை ஆதாரத்துடன் வெளியிட்டு நிரூபியுங்கள். அதன்பின்னர், நான் சொன்ன  கருத்துக்குப்  பதில் தருகிறேன்'' என்றவரிடம், ''பல இடங்களில் அவ்வாறு மோடி பேசியதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, 'இல்லை' என்று நீங்கள் சொல்வது சரியானதா'' என்ற கேள்விக்கு, "அவ்வாறு அவர் கூறவில்லை

. 'ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடும் அளவுக்கு வெளிநாடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளது' என்று மட்டுமே அவர் பேசினார். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், 'ஒவ்வொரு தனிமனிதனின்  15 லட்ச ரூபாய் மதிப்புள்ள   நலத்திட்டத்துக்காகச் செலவு செய்கிற தொகை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது' என்றுதான் பேசினார். தி.மு.க-வினர்தான் இவ்வாறு பேசி வருகின்றனர். பி.ஜே.பி-யின்மீது குற்றச்சாட்டுக் கூறுவதற்கு வேறு  எந்த விவகாரமும் அவர்களிடம் எதுவுமில்லை என்பதாலேயே இவ்வாறு பேசி வருகின்றனர். அதேபோன்று, தொலைக்காட்சிகளில் பேசுபவர்களும் ஒரு சார்பாகவே  கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். '10 கோடி ரூபாய்க்குக் கோட் போடுகிறார் மோடி' என்று பேசுகிறார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நல்ல மனிதர். கட்சிக்காக உழைக்கிற மனிதர்... நாட்டு மக்கள் நலன் கருதி  ஊழல், லஞ்சத்துக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கை எடுத்துவருகிறார். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்கிறார்கள். விமர்சனம் செய்யுங்கள்... அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், தவறாக விமர்சனம் செய்யக்ககூடாது என்பதே என்னுடைய கருத்து. இதில் கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியவர்களே இவ்வாறு பேசி வருகிறார்கள் என்பதுதான் மிகவும் வேடிக்கையான விஷயம்" என்றார்.   Trending Articles

Sponsored