ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுசாமி கமிஷன் ரத்தாகுமா?Sponsored‘மழை நின்றாலும் தூவானம் ஓய்ந்தபாடில்லை' என்று சொல்வார்கள்.... அவ்வாறுதான் உள்ளது ஜெயலலிதாவின் மரணமும் அதைச்சுற்றி நடக்கிற செயல்பாடுகளும். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பலரும் கூறிவந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. தற்போது அந்தக் கமிஷனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். '75 நாள்கள் தொடர் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்' என அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம். இதையடுத்து, ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பலரும் கூறி வந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர் செல்வம் அணியினர் 'ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும்' என குரல்கொடுத்து வந்தனர். அதேபோன்று தி.மு.க உள்ளிட்டஅரசியல் கட்சிகளும், ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரினர். உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், 'எனக்குமே சந்தேகம் உள்ளது' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

Sponsored


இவ்வாறு ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி பலவகையிலும் அழுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தவேளையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற ஆரம்பித்தன. இதில் பன்னீர்செல்வம் தரப்பினர், முதல் கோரிக்கையாக 'விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்' என்றனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்து உத்தரவிட்டார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட இந்தக் கமிஷனின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஆறுமுகசாமி. 

Sponsored


கடந்த 25-ம் தேதி கமிஷன் அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அந்தக் கமிஷனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் விஜயன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக வழக்கறிஞர் விஜயனிடம் பேசியபோது, "ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்ற முடிவுக்கு வந்த பின்னர் சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் இயற்றியிருக்க வேண்டும். தீர்மானம் இயற்றாமல், அரசாணை வெளியிட்டு சட்ட விதிகளை மீறியுள்ளனர். அதனால் இந்த கமிஷனே பொருந்தாத ஒன்றாக உள்ளது.

அதுமட்டுமன்றி இதே விசாரணைக் கமிஷன் அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டபோது, அரசு தரப்பிலிருந்து ஆஜரானவர்கள், 'மறைந்த முதல்வரின் மரணத்தில் சந்தேகப்படும்படியான எந்த விஷயங்களும் இல்லை.' என்றனர். மேலும், ‘அவர் நன்றாக இருந்தார் என்றும் இட்லி, சட்னி சாப்பிட்டார்' என்றும் கூறினார்கள். அவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி வைத்தியநாதன் 'ஜெயலலிதா மரணத்தில் எனக்குமே சந்தேகம் உள்ளது' என்றார். அரசு தரப்பில் நன்றாக இருந்தார் என்றும் அவருடைய மரணத்தை சந்தேகப்படத் தேவையில்லை என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில், தற்போது சந்தேகம் உள்ளதாக விசாரணை கமிஷனையும் அமைத்துள்ளார்கள். இப்படி அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்ட தகவலில் பலவித முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு விதிமுறைகளை மீறியும், பல்வேறு முரண்களோடும் அமைக்கப்பட்ட இந்தக் விசாரணைக் கமிஷனை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளோம் என்று தலைமை நீதிபதியிடம் தெரிவித்தேன், அதை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரினேன். அதற்குத் தலைமை நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில், அரசுத் தரப்பு பலவீனமாக இருப்பதால், கமிஷனுக்கு தடைவிதிக்கவோ அல்லது ரத்து செய்யவோ வாய்ப்புள்ளது." என்றார். 

உண்மைகள் எப்போது வெளிவருமோ?Trending Articles

Sponsored