'10 பர்சென்ட் தான் உயிர் இருக்கு... வேணும்னா தூக்கீட்டு போ...!' இது தான் அரசு மருத்துவமனை நிலை ! - ஒரு நேரடி ரிப்போர்ட் Sponsored
"டெங்குக் காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சலே. டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டாலே இறப்பு நேரிடும் என்பது ஒரு தவறான கருத்தாகும். உரிய நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்கத் தவறிய அசாதாரண ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான நிகழ்வுகளில் மட்டுமே உயிரிழப்பு நேரிட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் காய்ச்சலை கண்டவுடன் எந்தவகை பதற்றமோ, பீதியோ அடையாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி தேவையான சிகிச்சையை உரிய நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம்" - தமிழகம் முழுக்க டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு வரும் அறிவிப்பு இது. 

உண்மையில் அரசு மருத்துவமனைகள் எந்த நிலைமையில் இருக்கிறது?, டெங்கு மற்றும் மற்ற காய்ச்சல் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அறிய முடிவுசெய்து, டெங்கு உயிரிழப்புகள் அதிகளவில் நிகழ்ந்து வரும் சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம்.

Sponsored


தமிழகத்தின் மிக முக்கியமான சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது டெங்கு காய்ச்சல். ஆகஸ்ட் மாதம் வரை 15 பேர் மட்டுமே இறந்ததாக அரசு தரப்பில் சொல்லப்படும் நிலையில், தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த இரு மாதங்களில் மட்டும் 100க்கும் அதிகம் என்கிறது நிஜ நிலவரம். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் நிகழும் பகுதி சேலம். தினமும் ஒன்று அல்லது இரண்டு பேர் என சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். இவர்கள் டெங்குக் காய்ச்சல் பாதிப்பால் தான் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. 

Sponsored


நாம் சேலம் அரசு மருத்துவமனை காய்ச்சல் வார்டுக்கு சென்றிருந்தபோது, அங்கு தனது குழந்தைக்குப் போடப்பட்டிருந்த ட்ரிப்ஸ்-ல் ஊசியை கழற்றிக் கொண்டிருந்தார் குழந்தையின் தந்தை ஒருவர். இதைக்கண்டு அதிர்ந்த நாம், 'இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? டாக்டர், நர்ஸ் வரவில்லையா?' என கேட்டோம். எங்கே சார் நிறைய தடவை போய் கூப்பிட்டோம். வரவே மாட்டேங்குறாங்க. குழந்தை வேற 'வலிக்குது வலிக்குது'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தா. அதுதான் நானே கழட்டீட்டேன்' என்றவர் தொடர்ந்து தன் பிரச்னையை சொன்னார்.

"நான் துப்புரவு தொழிலாளி சார். ஊருக்கு எல்லாம் வேலை செய்யறோம். எங்க வருமானத்துக்கு நான் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குத் தான் வர முடியும். ஆனா இங்கே வந்தா கண்டுக்கவே மாட்டேங்குறாங்க. 'குளுக்கோஸ் முடிஞ்சிடுச்சு.. வந்து பிடுங்கி விடுங்க'ன்னு சொன்னா வரமாட்டேங்குறாங்க. அதுதான் நானே பிடுங்கிவிட்டேன். ஊரை எல்லாம் நாங்கள் சுத்தம் பண்ணீட்டு வர்றோம். எங்க குழந்தையை காப்பாத்த தானே கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி. அதைக்கூட செய்யலைன்னா என்ன அர்த்தம் சார்?," என்றார் துப்புரவுத் தொழிலாளி ஒருவர்.

அங்கிருந்த மற்றவர்களும் இதையே சொன்னார்கள். "அரசு மருத்துவமனையில் முறையான பரிசோதனைகள், சிகிச்சைகள் எதுவுமே நடப்பதில்லை. தினமும் ஒரு குழந்தையாவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறது. சேலம் அரசு மருத்துவமனை நிரம்பி வழிகிறது. ஒரு பெட்டில் இரு நோயாளிகள் படுக்க வைக்கப்படுகிறார்கள். கண்காணிப்பு என்பதே இல்லை. வேறு வழியின்றி இங்கே கிடக்கிறோம்," என்றனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தனது குழந்தையை தன் கண்ணில் காட்டவே இல்லை என்றார் அங்கிருந்த செல்வி என்ற பெண். "என் பையன் சந்தோஷ் இங்கே அட்மிட் பண்ணி இருக்கோம். 10 பர்சென்ட் தான் உயிர் இருக்குதுன்னு சொல்றாங்க. குழந்தையை கூட கண்ணுல காட்ட மாட்டேங்குறாங்க. குழந்தையை பார்க்க விடுங்கன்னு கேட்டா, '10 பர்சென்ட் தான் உயிர் இருக்கு. வேணும்னா தூக்கீட்டு போ. எங்ககிட்ட எதுவும் கேக்காதே'ன்னு சொல்றாங்க" என கதறி அழுதார் செல்வி.

தமிழக அளவில் டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் முக்கிய இடம் சேலத்துக்குத்தான். கடந்த 3 மாதங்களில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 100 பேர் வரை இருக்கும் என்கிறார்கள். இன்று மட்டும் 3 பேர் டெங்குவால் இறந்திருக்கிறார்கள் என நமக்குத் தகவல் சொன்னார்கள் மருத்துவமனையில் இருந்தவர்கள். மருத்துவமனை தரப்பில் தெளிவான விளக்கம் கொடுக்கப்படவில்லை. வயது வித்தியாசம் பாராமல், பலரைத் தாக்கியுள்ளது. குழந்தைகள்தான் டெங்கு பாதிப்பால் முடங்கிப் போய் விடுகிறார்கள். 

டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தால் கூட, டெங்கு பாதிப்பு என வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. மர்ம காய்ச்சல் என்றுதான் சொல்கிறார்கள். சேலம் அரசு மருத்துவமனையிலும் இதை நாம் பார்க்க நேர்ந்தது. தமிழகம் முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வழியின்றி, அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளதாக அரசு சொல்லப்படுவதை நம்பி இங்கு சிகிச்சைக்காக வருபவர்கள் நிலைதான் பரிதாபம்.

இன்னும் மழைக்காலம் துவங்கவில்லை. இப்போதே மிக வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சலும், பிற காய்ச்சல்களும். அரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. காய்ச்சலால் அனுமதிக்கப்படும் நோயாளிகளைக் கவனமாய் பரிசோதிக்கவும், நோய் பரவாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம். டெங்கு பாதிப்பு தமிழகத்தில் அதிகமில்லை என்பதை உருவாக்க திட்டமிட்டு, அதற்கு பிரசாரம் செய்யும் நேரத்தில் டெங்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். 

தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் பேர். கொசுவினால் பரவும் நோய்களுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அப்படியிருக்க கொசுவினால் பரவும் நோய்களைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் முறையான வசதிகளைச் செய்ய வேண்டும். அரசு விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.Trending Articles

Sponsored