சர்ச்சை நாயகர் வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்!Sponsoredந்த ஒருவருட காலத்தில் சென்னைக்கும், மும்பைக்கும் விமானத்தில் அதிகமுறை பயணம் செய்தவர் இவராகத்தான் இருக்க முடியும். அவர், வேறு யாருமல்ல... தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகப் பதவியேற்று, தற்போது அந்தப் பதவியிலிருந்து விடைபெற்றிருக்கும் வித்யாசாகர் ராவ்தான். 2011-ம் ஆண்டு மத்தியில் இருந்த அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசால் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் கே.ரோசய்யா. ஐந்தாண்டுகள் தன் பதவிக்காலத்தை ரோசய்யா நிறைவுசெய்ததையடுத்து, “மகாராஷ்டிர மாநில கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் கவர்னராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார்” என்று அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பேற்ற ஒரு மாதத்துக்குள்ளாகவே முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், தமிழகத்தின் ஆட்சிப் பணிகளில் தனது பங்களிப்பை வித்யாசாகர் ராவ் கூடுதலாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

“பெரிய மாநிலமான தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும்'' என தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், மத்திய அரசு அதைச் செவிமடுக்கவில்லை. இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இதையடுத்து வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து விடைபெற்றார். 

Sponsored


யார் இந்த வித்யாசாகர் ராவ்? 

Sponsored


தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் வித்யாசாகர் ராவ். மிகவும் பிரபலமான உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த இவர், படிக்கும்போதே மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் ஜன சங்கத்தில் உறுப்பினராக இருந்த அவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, 1985-ல் இருந்து 1998 வரை மேட்பள்ளி தொகுதியில் இருந்து ஆந்திர சட்டசபைக்குப் பி.ஜே.பி சார்பில் வெற்றிபெற்று, சட்டமன்ற உறுப்பினராகப் பதவிவகித்தார். பின்னர், பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை இணையமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவரது சகோதரர் ராஜசேகர ராவ், ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவராக இருந்தவர். மற்றொரு சகோதரர் ஹனுமந்த ராவ், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பி.ஜே.பி. வெற்றிபெற்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றதும், மகாராஷ்டிர மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்ததும், தமிழக ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிக்க நியமிக்கப்பட்டார்.

''தமிழக மக்களுக்கு நன்றி!''

தற்போது, தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து விடைபெற்றிருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''தமிழக மக்கள் என்மீது அன்போடும், பாசத்தோடும் இருந்தார்கள். ஜெயலலிதா மறைவு, ஜல்லிக்கட்டு விவகாரம், வர்தா புயல் பாதிப்பு போன்ற தருணங்களில், மக்கள் மிகவும் அமைதியாகவும், ஒழுக்கத்துடனும் நடந்துகொண்டார்கள். தொழில்நுட்பம், சுகாதாரத் துறை ஆகியவற்றில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. மகிழ்ச்சி, அமைதி, வளர்ச்சியுடன் தமிழக மக்கள் செழித்தோங்க வாழ்த்துகிறேன். முதல்வர், அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி'' என்று அதில் தெரிவித்துள்ளார். 

முக்கிய நிகழ்வுகள்!

பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் பதவி வகித்த காலகட்டத்தில் எண்ணற்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவை தொடங்கும் முதல் நாளன்று ஆளுநர் உரையாற்றுவது மரபு. அதன்படி, கடந்த ஜனவரி 23-ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு, கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா மையத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் அவர் கலந்துகொண்டார். 

பல்கலைக்கழகங்களின் வேந்தரான வித்யாசாகர் ராவ் பதவிக்காலத்தில்தான், தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறைகளில் காலஅளவு நிர்ணயிக்கப்பட்டு, மாற்றம் கொண்டுவரப்பட்டது. மேலும், துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவோருக்கும், அவர்களைத் தெரிவுசெய்வதற்காக அமைக்கப்படும் குழுவுக்கும் உரிய தகுதிகள் வரையறுக்கப்பட்டன. உயர்கல்வியின் தரமானது மேம்படுத்தப்பட்டதுடன், கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்கள் தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிப்பதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டன.  

இதுதவிர, கிண்டி ஆளுநர் மாளிகையில் குறிப்பிடத்தக்க வேறு பல நிகழ்வுகளும் நடைபெற்றன. நவம்பர் 10-ம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள மரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி தொடங்கிவைக்கப்பட்டது. ஏப்ரல் 21-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பேட்டரி கார் மூலம் ஆளுநர் மாளிகையைப் பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. ஜூன் 18-ம் தேதி ஆளுநர் மாளிகை வளாகத்தில் திருவள்ளுவர் சிலையையும், ஜூலை 14-ம் தேதி அவ்வையார் சிலையையும் வித்யாசாகர் ராவ் திறந்துவைத்தார். ஆளுநர் மாளிகையில் தூய்மை இயக்க விழாவைக் கொண்டாடிய அவர், தன்னுடைய மனைவி மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் கவர்னர் வளாகத் தோட்டத்தில் பூச்செடிகளை நட்டுவைத்தார். தூய்மை இயக்கம் குறித்து அவர் பேசுகையில், ''காலம் மாறிவிட்டது. இயந்திர மயமான இன்றைய வாழ்க்கையில், சுற்றுப்புறம் அசுத்தப்பட்டு வருகிறது. அதைக் களைந்து, வசிக்கும் இடம், வேலை பார்க்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதத்தில் தூய்மை இயக்கம் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் கவர்னர் மாளிகை வளாகத்தில் தூய்மை இயக்க விழா கொண்டாடப்படுகிறது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அப்போதுதான் ஒட்டுமொத்த நாடே தூய்மையடையும்'' என்றார்.  

அசெளகர்ய சம்பவங்கள்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியது; தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது; தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு; அ.தி.மு.க-வில் பிளவு, எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதால், பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் என தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலான அசெளகர்ய சம்பவங்களும் அரங்கேறின.

முதல்வர்களும்... பதவிப் பிரமாணங்களும்!

உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்ததையடுத்து, அதேநாள் நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தமிழக முதல்வராக வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், ஓ.பி.எஸ். ராஜினாமாவைத் தொடர்ந்து, எடப்பாடி கே.பழனிசாமி அ.தி.மு.க சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட, அவருக்கு பிப்ரவரி 16-ம் தேதி முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் வித்யாசாகர் ராவ். இதுதவிர, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஆளுநர் மாளிகையில் மீண்டும் ஒரு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தனி அணியாகச் செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி அணியோடு சேர்ந்ததன் விளைவாக ஓ.பி.எஸ். துணை முதல்வராகவும், க.பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றனர். இருவருக்கும் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

வித்யாசாகர் ராவும்... விமர்சனங்களும்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் மாற்றம் கண்டபோது... வித்யாசாகர் ராவுக்கு எதிராகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததையடுத்து, அ.தி.மு.க-வின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக வி.கே.சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு சசிகலா, ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினார். எனினும், அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும்வரை காலதாமதம் செய்ததாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து, அ.தி.மு.க-வில் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டுவரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, ''முதல்வர் பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை'' என்று தெரிவித்துக் கடிதம் கொடுத்தனர். இதனால், ''பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்'' என்று அந்த எம்.எல்.ஏ-க்களும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். அப்போதும் ஆளுநர் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் காலதாமதம் செய்ததாக வித்யாசாகர் ராவ் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டதாகக் கூறி ஆளும் கட்சி கொறடா அளித்த புகாரின் அடிப்படையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் வித்யாசாகர் ராவ், அரசியல் சாசனச் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை உரிய காலத்தில் எடுக்காததாலேயே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் அவர்மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்தது. 

கொடியேற்றாத ஆளுநர்!

மகாராஷ்டிர மாநிலத்தின் நிரந்தர கவர்னராகவும், தமிழகத்துக்குக் கூடுதல் கவர்னராகவும் வித்யாசாகர் ராவ் பதவி வகித்ததால், 2017 ஜனவரி மாதம் குடியரசுத் தினத்தன்று அவரால் சென்னையில் தேசியக் கொடியேற்ற முடியவில்லை. இதையடுத்து, தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் குடியரசுத் தினத்தன்று அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றினார்.

''எந்தவித அழுத்தத்துக்கும் ஆட்படாமல் நடுநிலையோடு செயல்படுபவர் வித்யாசாகர் ராவ்'' என்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் புகழ்மொழிக்கு ஏற்ப, தமிழக ஆளுநர் பதவியிலிருந்து அவர் விடைபெற்றிருந்தாலும், பல்வேறு விமர்சனங்களுக்குப் பலிகடா ஆகியிருக்கிறார் வித்யாசர் ராவ் என்பதுதான் நிதர்சனம்.Trending Articles

Sponsored