கமல்ஹாசனும் அரசியலில்! தமிழகத்தில் சினிமா இல்லாத அரசியல் சாத்தியமில்லையா?Sponsoredமுயல், ஆமை ஓட்டப்பந்தயம் நடத்திய கதையை எல்லோருமே நம் சிறுவயதில் கடந்து வந்திருப்போம். எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தை, தற்போது ரேஸில் முந்திக் கொண்டு களம் இறங்கக் காத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நடிகர்களை அரசியல்வாதிகளாகப் பிரபலப்படுத்துவதன் மூலம் சினிமா எப்போதுமே தமிழக அரசியலில் தனது செல்வாக்கைச் செலுத்தி வந்திருக்கிறது. 1967-ல் முதன்முதலாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது தொடங்கி இன்றுவரை நிலைத்திருக்கும் திராவிடக் கட்சிகளின் வெற்றிக்கு, கட்சிக் கொள்கைகளுக்குச் சரிநிகராக... அதில் இயங்கிய மற்றும் இயக்கிய நடிகர்களின் பங்கு அதிகம். 

மொழியியல், இன, கலாசார அடையாளம் மற்றும் அதை மையமாகக் கொண்டு எழும் மாநிலச் சுயாட்சிக் கோரிக்கை, மற்றொரு பக்கம் சமூக மற்றும் அரசியல் அளவிலான சாதியப் பிரிவினைகள் இதுதான் திராவிட அரசியலின் இயங்குப் புள்ளி. மற்ற எந்த மாநிலங்களைப்போல் இல்லாமல் தமிழகத்தில் இந்த இயங்குபுள்ளிகளைப் பெரிதும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தது ஊடகங்கள். முக்கியமாகச் சினிமா மற்றும் நாடக ஊடகங்கள் அந்தப் பணியைச் செய்தன. 

Sponsored


தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்குமான இணைப்பு இங்கிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். இணைப்பு என்னும் நிலையில், தமிழ் தேசியம் சார்ந்த பதிவுகளை மக்களுக்குக் கடத்த உதவியது. தமிழக அரசியல் மற்றும் சினிமாவின் பிணைப்பைப் பற்றி விவரிக்கும் மானுடவியல் அறிஞர் பெர்னார்ட் பேட் இப்படியாகக் கூறுகிறார், “தமிழ் சினிமா நேரடியாக மக்களிடம் அரசியலைத் திணிக்கவில்லை. மாறாக, அதன் மொழி அழகியல் வழியாக உணர்வுகளைக் கடத்தியது” என்கிறார். 

Sponsored


அண்ணாதுரை... கருணாநிதி... எம்.ஜி.ராமச்சந்திரன்... ஜெ.ஜெயலலிதா!

இதற்கான உதாரணம், தமிழகத்தின் முதல் திராவிடக் கட்சியைச் சேர்ந்த முதல்வரான சி.என்.அண்ணாதுரையும் அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் சினிமா வசனங்களின்மூலம் மக்களிடையே கட்சிக் கொள்கைகளை எடுத்துச் சென்றவர்கள். அதன் பிறகு முதல்வரான எம்.ஜி.ராமச்சந்திரனின் அரசியல் பிம்பத்தை வலுப்படுத்தும் வகையில் அவருக்கான பாடல்களைக் கண்ணதாசனும், வாலியும் எழுதினார்கள். மற்றொரு பக்கம் அவரது படங்களுக்கான கொள்கை விளக்கப் பாடல்களைப் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் எழுதிக் கொடுத்தார். இந்திய நடிகர்களில் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சட்டசபைக்கு வந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்... கட்சி உறுப்பினர்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளாத நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற திராவிடக் கொள்கைவாதிகளும் இவர்களில் அடக்கம்.

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தை இந்தப் பட்டியலில் தனியாகவே குறிப்பிட்டாக வேண்டும். எம்.ஜி.ஆரால் அரசியல் உலகத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயலலிதா, கிட்டத்தட்ட அவரது பாணியையே தன்னை அரசியலில் நிலைப்படுத்திக்கொள்ளவும் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய புதிதில் பெரும்பாலும் தமிழகம் எங்கும் இருந்த அவரது ரசிகர் மன்றங்கள்தான் கட்சிக் கூட்டமைப்பாக மாற வழி செய்தது. மிகவும் இளம்வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்த ஜெயலலிதாவுக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் எண்ணிக்கை இருந்ததுதான் அவரது அரசியல் அடையாளத்தை வேரூன்றிக்கொள்ளவும் வழிசெய்தது.

முன்னாளில் திராவிடக் கட்சிகளுடன் தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசன் பிறகு காங்கிரஸில் இணைந்து, அதன் பிறகு அதிலிருந்தும் விலகி தமிழர் முன்னேற்ற முன்னணி என்கிற தனிக்கட்சி தொடங்கியபோதும் அவருக்குக் கைகொடுத்தது அவரது ரசிகர் மன்றங்களே.  1991 சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட் இழந்து தோற்றபிறகும் அவரது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தது கவனிக்க வேண்டிய ஒன்று. 

தி.மு.க-வில் இணைந்து பணியாற்றிய நடிகர் டி.ராஜேந்தர் பின்னர் லட்சிய தி.மு.க என்று தனிக்கட்சித் தொடங்கியது; பிறகு, அதனை மீண்டும் தி.மு.க-வுடன் இணைத்தது; அதன் பிறகு, பிரிந்தது என்று கட்சிக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடவும், விஜயகாந்த் தே.மு.தி.க என்று கட்சி தொடங்கி 2011 தேர்தலில் சட்டசபையில் முக்கிய எதிர்க் கட்சியாக அமர வழிவகை செய்ததும் மாவட்டவாரியாக அவர்களுக்கு இருந்த ரசிகர்கள் எண்ணிக்கைதான். 

கமல்ஹாசன் - பினராயி விஜயன் உரையாடல்

அண்மையில், கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துவிட்டு வந்தார் நடிகர் கமல்ஹாசன். அவர்களிடையேயான உரையாடல் அங்கிருக்கும் பிரபல மலையாள தொலைக்காட்சிச் சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. அதில், பினராயி விஜயன் மற்றும் கமலிடையேயான உரையாடல் இப்படியாகப் போகிறது. 

(மலையாளத்தில் இருந்த அந்த உரையாடலின் தமிழ் சாராம்சம்)

கமல்ஹாசன்: ''மக்கள், ஜனநாயகத்தின்மீது அக்கறை இல்லாமல் இருப்பதுதான் பிரச்னையாக இருந்தது. தனிப்பட்ட அளவில் என்னுடைய ரசிகர் மன்றமும் நற்பணி இயக்கமாக 37 வருடங்களாக இயங்கிவருகிறது. சுமார் ஐந்து லட்சம் பேர் அதில் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் நோக்கத்துடன் அது தொடங்கப்படவில்லை. சில பத்து வருடங்கள் அதன் வழியாக இயங்கிவந்தபோதும் அரசியல் பிரச்னைகள் அதிலும் உருவானதால், வெறும் கலைஞனாக மட்டுமே இயங்கலாம் என்று முடிவுசெய்து ஒதுங்கி இருந்துவிட்டேன். ஆனால், தனிமனிதனுக்குச் சமூக அக்கறையும் அரசியலும் வேண்டும் என்று உணர்வதற்கு எனக்கு 60 வயதுவரை தேவைப்பட்டிருக்கிறது''.

(இடைமறித்து பினராயி விஜயன் தொடருகிறார்.) 

பினராயி விஜயன்: ''ஆக, நீங்கள் தற்போது சிறிதாக அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கத் தயாராகிவிட்டீர்கள் என்று தெரிகிறது. ஐந்து லட்சம் பேர் என்பது சிறிய எண் இல்லை. அதுவும் 37 வருடங்களாக அந்த ஐந்து லட்சம் பேரைத் தக்கவைத்துக் கொள்வது சாதாரண காரியமில்லை. இவர்களில் எத்தனை பேருக்கு அரசியல் சிந்தனையும், இங்கிருக்கும் சமூக அரசியல் சிக்கல்களைப் பற்றியும் பெண்களுக்குத் தரப்பட வேண்டிய பாதுகாப்பான சூழல் பற்றியதுமான விழிப்புஉணர்வு இருக்கிறது என்பதை அறிய வேண்டியது அவசியம்''.

கமல்ஹாசன்: ''இவர்கள் யாரும் இடதுசாரிக் கொள்கைவாதிகள் இல்லை. ஆனால், இவர்களுக்கென்று தனிமனித அறம் இருக்கிறது. இருப்பதாகவே நம்புகிறேன். கூடவே, ஒரு செயலைச் செய்ய வேண்டாம். அது, ஆகக் கூடிய காரியமில்லை என்று நாம் யோசித்தால் அதனைச் செய்துமுடித்துவிட்டு வரும் திறனும் அவர்களுக்கு இருக்கிறது''.

இருவருக்கும் இடையேயான பேட்டியை அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் இன்னும் முழுமையாக இணையத்தில் வெளியிடவில்லை. ஆனால், தான் அரசியலில் முன்வைத்த காலை இனி பின்வைக்கப்போவதில்லை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார் கமல்ஹாசன். ஆனால், கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு ஒரு கம்யூனிஸ்ட் தலைவருடன் உரையாடிய கமல்ஹாசனுக்கு  அது பெரியார், அண்ணா வழியிலான திராவிடக் கொள்கைகளோடு இருக்குமா அல்லது கம்யூனிசப் பாதையிலேயே இருக்குமா... இல்லை, "அரசியலில் தீண்டாமை என்ற ஒன்று கிடையாது. மக்களுக்கு நன்மை உண்டாகும் என்றால், நான் பி.ஜே.பி-யுடன்கூடக் கைகோக்கத் தயார்” என்று ஒரு பத்திரிகை பேட்டியில் அவர் அறிவித்தபடி இருக்குமா? 

எதுவாக இருப்பினும் தமிழக அரசியலின் இத்தனை ஆண்டுக்கால வரலாற்றில் சினிமா இல்லாத அரசியல் சாத்தியமற்றதாகவே இருந்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் ஒரு தேர்தல் சமயத்தில், “நடிகர்கள் இல்லாமல் திராவிட அரசியல் எப்படி” என்று நகைச்சுவையாகக் கூறினார். திராவிட அரசியல் என்று  இல்லாமல் பொதுவாகவே இங்கு அரசியலில் அவரது நகைச்சுவைதான் நிதர்சனம். கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் ஒன்று அது எம்.ஜி.ராமச்சந்திரனின் பாதையாக இருக்கலாம் அல்லது சிவாஜி கணேசனின் பாதையாக இருக்கலாம். காலம் மட்டுமே பதில் சொல்லும்.Trending Articles

Sponsored