டெங்கு பாதிப்பில் தமிழகம் சிக்கித் தவிக்க இதுதான் காரணமா?!Sponsored"இந்திய ஜனநாயகம் என்பது மத்தியில் அமர்ந்திருக்கும் 20 பேரால் கட்டமைக்கப்படுவது அல்ல... கிராமப் பஞ்சாயத்துகளைக் கட்டமைப்பதில் இருந்துதான் தொடங்குகிறது'' என்றார் மகாத்மா காந்தி. அப்படி ஜனநாயகத்தின் வேர்களாக இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உயிர்பலிகளை வாங்கிக் கொண்டிருப்பதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். உள்ளாட்சி அமைப்புகள் சீர்கெட்டு இருப்பதாலேயே தமிழகத்தில் டெங்கு தீவிரமடையக் காரணம் என்கிறார்கள் அவர்கள். 

டெங்கு பலிக்குக் காரணமா? 

Sponsored


தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்படி அறிவிக்கப்பட்ட அரசாணையில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றவில்லை என்று தி.மு.க வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்ததோடு... கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்திமுடிக்குமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கைத் விசாரித்த நீதிமன்றம் வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்திமுடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதே தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைய காரணம் எனக் குற்றம்சாட்டுகிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம். 

Sponsored


கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 2,531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் கூறுகிறது சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கம். நடப்பாண்டில் 60-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பலியாகி உள்ளதாகவும், சுமார் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. டெங்குக் காய்ச்சல் குறித்தோ அல்லது இறப்பு குறித்தோ முழுமையான புள்ளி விபரங்களைத் தமிழக அரசு வெளியிடாமல் மூடி மறைப்பதாகக் குற்றம்சாட்டுகிறது அந்தச் சங்கம். ஆனால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமோ கடந்த ஆண்டில் மட்டும் 2,531 பேர் டெங்குக் காயச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கிறது. நடப்பாண்டில் 6,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை ஒருவர் மட்டுமே இறந்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் மேலும் விவரங்களை வெளியிட்டுள்ளது. இவ்வாறு டெங்கு பலி அதிகரிக்க ஒட்டுமொத்த கிராமப் பஞ்சாயத்து அமைப்புகளும் செயலிழந்துவிட்டதே காரணம் என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சி.வ.இளங்கோ. 

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, "உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் மத்திய அரசு நிதி அளித்துவருகிறது. 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,528 கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,000 கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் போன காரணத்தால், நிதியைத் தரக்கோரி மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இத்தொகையைத் தர மறுக்கிறது. பதவியைக் காப்பாற்றுவதற்காகப் பலமுறை டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த நிதியைக் கேட்காமல் வருவது கேலிக்கூத்தாக உள்ளது.

 இழப்புக்கு யார் பொறுப்பு?

இந்நிதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய 60 கோடி ரூபாய் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிதியை 

ஒதுக்காத காரணத்தால், அங்கு 500 துப்பரவுப் பணியாளர்களுக்குச் சம்பளம் தர முடியாமல் மாநராட்சி நாறிக்கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குழப்பத்தால் அதன் அமைப்புகளில் இருந்த பணத்தை வாரி இரைத்துவிட்டனர். இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் உள்ள  உள்ளாட்சி  ஊழியர்களுக்குச் சம்பளம்கூடக் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இந்தக் குழப்பத்தால் சென்னை மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்மன்றி, மத்திய தணிக்கைக் குழு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை மாநகராட்சி - சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்க குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத காரணத்தால் 200 கோடி ரூபாய்வரை சென்னை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. அதிகாரப் பகிர்வின்மூலம் உள்ளாட்சி அமைப்புகள் 29 துறைகளைக் கவனித்துக்கொள்ள இந்திய அரசியல் சாசனப் பிரிவு (243 )வழிவகுக்கிறது. அப்படி இருக்கும்போது சுகாதாரத்தைப் பேணிக்காப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணி. தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் நிலையில், குப்பை அள்ளுவதற்கும் சாக்கடைகளைச் சுத்தம் செய்வதற்கும்கூடப் பணம் இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் திண்டாடி வருகின்றன. உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால், குறைந்தபட்ச பணிகளாவது நடந்திருக்கும். ஆனால், உள்ளாட்சிக்குத் தேர்தல் நடத்தாத காரணத்தால் பணிகளைக் கவனிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் கிராம மக்களோடு தொடர்பில்லாமல் உள்ளனர். அதன் காரணமாக, டெங்கு பாதிப்பில் தமிழகம் சிக்கித் தவிக்கிறது. 

 அம்மாவும்  இல்லை இலையும் இல்லை... 

தி.மு.க வழக்குத் தொடுத்து உள்ளாட்சித் தேர்தலைத் தடுத்து நிறுத்தியது என்றால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இரட்டை

இலைச் சின்னம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கத் தயங்குகிறது. அம்மாவும் (ஜெ.-வும்) இல்லாமல், இரட்டை இலையும் இல்லாமல்,தேர்தலைச் சந்தித்தால் தங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்று அமைதி காத்துவருகிறது அ.தி.மு.க. அரசு. 2005-ம் ஆண்டு, குஜராத் மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம், 'எந்தக் காரணத்தைக் கொண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. 73-வது அரசியல் சாசனத் திருத்தத்தின்படி கட்டாயமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இப்படிச் சட்டத்துக்கும் கட்டுப்படாமல், மக்கள் பிரச்னைகளிலும் அக்கறை இல்லாமல், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கும் அஞ்சாமல் பதவி சுகத்துக்காக மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் இளங்கோ.

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள தி.மு.க அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதியிடம் பேசியபோது, "உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டப் பிறகும், அதைத் தமிழக அரசாங்கமும், மாநிலத் தேர்தல் ஆணையமும் மதிக்கவில்லை. இதற்குக் காரணம், இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் தேர்தலில் நின்றால் ஜெயிக்க முடியாது என்பதால்தான். அ.திமு.க தேர்தலை எதிர்கொள்ளத் தயங்குகிறது. தங்களுடைய கட்சி சுயநலத்துக்காக மக்களைப் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு அடிப்படையாக இருக்கிற சுகாதாரக் கட்டமைப்பை உறுதிசெய்வது உள்ளாட்சி அமைப்பு. தற்போது அந்த உள்ளாட்சி அமைப்பே உளுத்துப்போயுள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும்'' என்றார் கவலையுடன். 

அரசாங்கத்தை ஆள்பவர்களே... கொஞ்சம் கிராமப் பஞ்சாயத்துகளின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுங்களேன்.. Trending Articles

Sponsored