மரியா புயல் தாக்கிய ஒரு மாதத்துக்குப் பின் எப்படியிருக்கிறது புவேர்ட்டோ ரிக்கோ தீவு?Sponsoredலிஃப்ட் வசதி இல்லாததால் 24 மாடிகள் தினமும் ஏறி இறங்கும் குடும்பம். காலவரையின்றி மூடப்பட்டு, இடியும் நிலையில் பள்ளிகள், எண்ணிக்கையில் பாதி மட்டுமே செயல்படும் செல்போன் டவர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் செயல்படும் வங்கிகள், முழுவதும் செயல்படாத ஏ.டி.எம்கள், மருத்துவமனைகள் மற்றும் விமானநிலையத்தில் களவு போன ஜெனெரேட்டர்கள், 80 சதவிகிதம் திரும்பாத, மின்சாரம் இல்லாத இருண்ட நிலை. இதுதான் மரியா என்ற புயல் தாக்கிய ஒரு மாதத்திற்குப் பின் மீதமிருக்கும் புவேர்ட்டோ ரிக்கோ தீவு!

படம்: Associated Press

Sponsored


மரியா புயல் கரிபியன் தீவுகளைக் காவு வாங்காத குறைதான். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் களமிறங்கிய புயல் பல இடங்களை நாசம் செய்தது. அதிகபட்ச உக்கிரத்துடன் அது தாக்கிய இடம் அமெரிக்கா பிராந்தியங்களில் ஒன்றான புவேர்ட்டோ ரிக்கோ தீவு (Puerto Rico) தான். 48 பேர் மரணம், பலர் தங்கள் வாழ்வாதாரங்கள், வீடுகளை இழந்து வாழ வேண்டிய நிலைமை என்று நீங்காத் துயரை ஏற்படுத்திவிட்டது. இழப்பு 85 மில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று சொல்கிறது ஒரு கணக்கு.11 வருடங்கள் பஞ்சத்தில், பொருளாதார பின்னடைவில் இருந்த பிராந்தியம். இப்போது இந்தச் சோகம் வேறு!

Sponsored


இருண்ட தீவான கதை

சரியாக செப்டம்பர் மாதம் 20ம் தேதி தன் பணியை நிறைவு செய்து கொண்டது மரியா. இது நடந்து ஒரு மாதம் ஓடிவிட்டது. ஆனால், இன்றும் புவேர்ட்டோ ரிக்கோவால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. இன்னமும் இருண்டத் தீவாகவே இருக்கிறது. 30 சதவிகித மக்களுக்குத் தண்ணீர் இல்லை. 5000 பேர் ஏதோ ஓர் இடத்தில் கூரை இருக்கிறதே; அது போதும் என்று ஒதுங்கியுள்ளனர். அவர்களுக்கு மழை நீர்தான் குளிக்க, குடிக்க எல்லாவற்றிற்கும். 90 சதவிகித சூப்பர்மார்கெட்கள் திறக்கப்பட்டு விட்டாலும், பெரும்பாலும், காலியாகவே இருக்கின்றன. தண்ணீர், வாழைப்பழங்கள், கேனில் அடைக்கப்பட்ட டூனா மீன்கள் இவை மட்டுமே கிடைக்கின்றன. போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் ஆஸ்த்மா நோயாளிகள் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார்கள். அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் திருட்டுகள் அதிகமாகிவிட்டன. கட்டுப்படுத்த யாருமில்லை.

மக்களின் நிலை என்ன?

படம்: Associated Press

அங்கேயே தொழில் செய்து, மகிழ்ச்சியுடன் இருந்த சேமிப்புடன் வாழ்க்கை நடத்தி வந்த பலர் எல்லாவற்றையும் இழந்து தவிக்கின்றனர். அவர்களில் சிலர் ஊடகங்களுக்குக் கண்ணீருடன் கூறிய வார்த்தைகள் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

42 வயதான மரவேலை செய்பவர் ஒருவர், “வீடுகளை இழந்து விட்டோம், கார்கள் முழுவதும் நொறுங்கிவிட்டது. சென்ற வாரத்தில் இருந்துதான் மீண்டும் வேலை செய்ய தொடங்கியுள்ளேன்” என்கிறார்

அவருடன் வேலை செய்யும் 28 வயதான பராமரிப்புப் பணியாளர், “வெறும் வெள்ளை அரிசியும், பொறித்த முட்டையும்தான் உணவு; அதைக் கொடுக்க ஹெலிகாப்டர் எப்போது வரும் என்று வானத்தையே வெறித்துப் பார்க்கின்றனர் குழந்தைகள். என் மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஒரு சிறிய 13x9 அறையில் தற்போது வசித்து வருகிறேன். மீதி வீடு முழுவதும் புயலில் போயிட்டது. இனி முடியாது. வரும் வாரம் குடும்பத்துடன் மாசசூசெட்ஸ் செல்லவிருக்கிறேன். விருப்பமில்லைதான், இருந்தும் என்ன செய்ய?” என்று வருத்தப்பட்டார்.

பளிங்கு மற்றும் ஜிப்சம் பலகைகள் நிறுவும் ஒருவர், “வாழ்க்கையே திசை மாறிவிட்டது. சொந்தமாகத் தொழில் செய்து வந்தேன். இனி இந்த ஊர் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் நான் இழந்த வாழ்க்கையைப் பெற முடியாது. எனக்கு 50 வயதாகிவிட்டது. வேலை இல்லை. இனி யார் தருவார்கள்? எல்லாம் முடங்கிவிட்டன!” என்று இதயம் நொறுங்கப் பேசினார்.

பள்ளிகள் இல்லாததால் சிறு குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்குக் கூட செல்ல முடியாத நிலை. பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்குமா எனச் சமூக வலைத்தளங்களில் பக்கத்துக்கு ஊர்களைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஒரு சிலர் பேட்டரியில் இயங்கும் ஃபேன்கள் எங்கு கிடைக்கும் என்று கேட்கிறார்கள். துணிகளைக் கைகளில் எப்படி சுலபமாக துவைக்க முடியும் என்றெல்லாம் கூட கேள்விகள் நீள்கின்றன. நிறையப் பதில்களும் வருகின்றன.

படம்: Associated Press

என்ன செய்கிறது அரசு?

அரசு தரப்பில் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிக்காக, புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் வெர்ஜின் தீவுகளுக்கு 36.5 பில்லியன் டாலர்கள் உதவித் தொகையாக அறிவித்துள்ளது. ஒரு சாரர் இதிலிருந்து மீண்டு வரும் வரை வரிகள் எதுவும் விதிக்க வேண்டாம் என்று அரசாங்கத்தைக் கேட்டுள்ளனர். மேலும் சிலர், புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களுக்கு என்னென்ன உதவிகள் அளிக்கப்பட்டதோ, அதையே பாரபட்சமில்லாமல் பிராந்தியங்களுக்கும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த நூற்றாண்டில் இந்தத் தீவை தாக்கிய பெரிய புயல் இது, அதுவும் கேட்டகரி 4 புயல். காலத்தில் பின்னோக்கிச் சென்றுள்ளது புவேர்ட்டோ ரிக்கோ! இந்த நிலை தொடர்ந்தால் அங்கு வசித்த மக்களுக்கு அந்த இடத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை. அதை அவர்களும் அரசாங்கத்திடம் தெரிவித்துவிட்டனர். புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கிய புவேர்ட்டோ ரிக்கோ மீண்டு வர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். ஆனால், எப்போது என்றுதான் தெரியவில்லை!Trending Articles

Sponsored