நிலவேம்புதான் பிரச்னையா? - ’மருத்துவ அரசியல்’ பேசும் டாக்டர்கள்!Sponsoredடெங்கு பாதிப்புகளைப் பற்றிய பேச்சுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இப்போது நிலவேம்புக் குடிநீர் விவகாரம் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. ஆம், இதற்கு முன்னர் டெங்கு பாதிப்பு, உயிரிழப்புகளைப் பற்றிப் பேசிய அமைச்சர்கள், அரசுச் செயலாளர்கள், மருத்துவத் துறை அதிகாரிகள் நிலவேம்புக் குடிநீரைப் பற்றி அதிகமாகப் பேசுவதைக் காணமுடிகிறது. 

இவர்கள் மட்டுமன்றி, நவீன அறிவியல் மருத்துவம் எனக் கூறப்படும் அலோபதி மருத்துவர்களில் ஒரு தரப்பினரும் நிலவேம்புக் குடிநீரை மையமாக வைத்து தீவிரமான விவாதங்களை நடத்திவருகின்றனர். 

Sponsored


இதில், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் முன்வைக்கும் கருத்து, முக்கியமாக கவனத்துக்குரியதாக இருக்கிறது. 

Sponsored


”நிலவேம்புக் குடிநீரில் ஒன்றுமே இல்லை என்று சொல்லவில்லை; அதிலிருக்கும் எந்த மூலக்கூறு டெங்கு வைரஸைக் கொல்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கவேண்டும். இதில் சில ஆபத்துகளும் இருப்பதால் அறிவியல் நிரூபணம் முடியும்வரை பயன்படுத்தக் கூடாது. அனைவருக்கும் உரிய நேரத்தில் நவீன அறிவியல் மருத்துவம் கிடைக்காததே, டெங்கு இறப்பு அதிகரித்ததற்குக் காரணம். தரமான இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்காததாலேயே இறப்புகள் அதிகரிக்கின்றன. இதை மறைக்க அரசுக்கு நிலவேம்புக் கஷாயம் ஒரு கேடயமாக மாறியுள்ளது” எனக் கூறுகிறார் டாக்டர் இரவீந்திரநாத். 

அலோபதி மருத்துவர்கள் மத்தியில் இதற்கு முழு ஆதரவும் இருக்கிறது; ஆதரவும் விமர்சனமும் கலந்த ஒரு கருத்தும் எழுந்துள்ளது. 

நிலவேம்புக் குடிநீர் உட்பட்ட சித்த மருந்துகளை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்பது சரிதான் எனும் இந்த மாறுபட்ட கருத்தாளர்கள், அலோபதி முறையில் வழங்கப்படும் மருந்துகளின் நிரூபணம் குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டும் என்கின்றனர். 

”மருத்துவச் சான்றுகளின் மீது கட்டமைக்கப்பட்டது நவீன மருத்துவம்தான். அதன் கடைக்கால் அசைக்கமுடியாத அறிவியல் ஆராய்ச்சிகளால் போடப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். அந்த அறிவியல் சான்றுகள், ஆராய்ச்சி முடிவுகளை, மருத்துவக் கொள்கைகளை, எதைச் சேர்க்க வேண்டும், ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது யார்? நவீன அறிவியல் மருத்துவம் என்ன எந்தவித அரசியல் தலையீடும் இல்லாத, பரிசுத்தமான ஒரு பொருளா?” எனக் கேட்கிறார்கள், இந்த அலோபதி மருத்துவர்கள். 

“ நவீன மருத்துவத் துறை மருத்துவ ஆராய்ச்சிகளை யார் தீர்மானிப்பது? யார் அதற்கு நிதி ஒதுக்குவது? சி.ஆர்.ஓ. எனப்படும் (contract research organisation) ஒப்பந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நிதியை ஒதுக்கி, தங்களுக்கு வேண்டிய முடிவுகளை எப்படிப் பதிவுசெய்கிறார்கள்? எதிர்மறை முடிவுகளை எப்படி மறைக்கிறார்கள்? ஆராய்ச்சிகளை மருத்துவர்கள் பெயரில் பதிந்தாலும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்னால் இருக்கும் முகமூடி எழுத்தாளர்கள் ( ghost writers)இருக்கிறார்களே, அவர்களைப் பற்றிப் பேசுவது யார்? ஆராய்ச்சிகளைச் செய்யும் மருத்துவர்கள் மருந்து நிறுவனங்களின் பிரதிநிதியாக உள்ளார்களா, இல்லையா? சந்தையில் எந்த மருந்து வரவேண்டும்? காப்புரிமை முடிந்தவுடன் எப்படி மிகச்சிறிய மாற்றங்கள் செய்து சந்தையில் விடுகிறார்கள் என்பவற்றைப் பற்றி நவீன அறிவியல் மருத்துவர்கள் கேள்விகேட்கிறோமா?

அறிவியலைப் பொறுத்தவரையில் ஒரு பிரிவினர் தங்களிடம் டெங்குவிற்கு மருந்து இருக்கிறது என்று சொன்னால் அதை நிரூபிப்பதற்கு, அந்த மருந்து டெங்குவுக்கு வேலைசெய்யாது என்ற கருதுகோள் முன்னிறுத்தி, ஓர் ஆய்வை மேற்கொண்டு, இறுதியில் அந்தக் கருதுகோள் சரியா அல்லது தவறா? தவறு என்றால் மருந்துகளால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று முடிவுக்கு வர வேண்டும். டெங்குவுக்கு நிலவேம்பு கஷாயம் வேலைசெய்கிறது என்று கப்சாவிடுகிறார்கள்; போலி அறிவியல் பேசுகிறார்கள் என எடுத்த மாத்திரத்திலேயா அடித்து நொறுக்குவது அறிவியல் முறை அன்று. 

எது அறிவியல் முறை எது அறிவியல் பூர்வமான விவாதம் என்பதை நவீன அறிவியல் மருத்துவம் சொல்லிக்கொடுப்பதில்லை. அதிகாரப் போக்கும், அறிவுஜீவித்தனத்தின் அரியாசனத்தின் மீது ஏறி உட்கார்ந்ததால் ஏற்படும் மங்கலான பார்வையும் (intellectual blinders ) அமெரிக்க சந்தர்ப்பவாதமும் ( American pragmatism) கிட்டப்பார்வையும் (myopic vision ) இன்றைய நவீன அறிவியலின் சிக்கல்களாக உள்ளன என்று உலகின் தலைசிறந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் லெவின்ஸ் கூறுகிறார். உங்கள் கைகளில் வைத்திருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதல்ல என்று தூக்கிப்போடும் முன், நம் கைகளால் எழுதும் மாத்திரைகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கபட்டதா எனக் கேட்காமல், சிந்திக்காமல் ஒத்துக்கொள்வது, நவீன அறிவியல் மருத்துவரின் நம்பிக்கை சார்ந்த செயல்பாடா?அறிவியல் சார்ந்த செயல்பாடா? 

மேலும் ஒரு நோயாளிக்குக் கிடைக்க வேண்டிய முறையான சிகிச்சை முறை ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியைக் கேட்காமலும், 11 ஆண்டுகளாக இங்கு புழக்கத்தில் அதிகமாக இருக்கும் நிலவேம்பின் மூலக்கூறுகள் என்னென்ன? அது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறதா? வைரஸ் காய்ச்சலுக்கு அது பயன்பாடுள்ளதா? டெங்குக் காய்ச்சலுக்குப் பயன் படுமா? தட்டணுக்களை அது விருத்தியடையச் செய்கிறதா என்பன போன்ற கேள்விகளை முன்னிறுத்தி, சித்த மருத்துவத் துறைக்கான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை என்ற கேள்வி ஏன் எழுப்பவில்லை?

மருத்துவர்களுக்கு என்று எல்லை உண்டு; அது என்னுடைய நோயர் பரிசோதனை அறை; அதற்கு வெளியே நான் செயல்படமாட்டேன். எனக்குக் கொடுக்கப்பட்ட மருத்துவப் புத்தகத்தின் அடிப்படையில், மருந்துகள் இது என்ற வழிகாட்டும் ஏடுகளின் அறிவுரையின்படியே நான் செயல்படுவேன். எதையுமே கேள்விகேட்காமல் விமர்சனச் சிந்தனையை ( critical thinking) மறுத்து , வெள்ளைச்சட்டை தொழில்வினைஞராக ( white collared professional ) நம்மை மாற்றுவது எது? எதையுமே கேள்விக்கு உட்படுத்தாத உளப்பாங்குக் கட்டுப்பாட்டை ( disciplined mind) நமக்குக் கொடுத்தது யார்? கேள்விக்கு உட்படுத்தும் நேரம் வந்துவிட்டது. நவீன அறிவியல் மருத்துவர்கள் தயாரா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளையும் முன்வைத்து, சவாலும் விடுகிறார், சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மனநலக் காப்பகத்தின் முதுநிலை மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார். 

இன்னொரு புறம், ” டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு இன்னும் குறையவில்லை; சென்னை போன்ற இடங்களில் பெரிய மருத்துவமனைகளிலேயே கூட்டம் அலைமோதுகிறது; அவர்களைக் கவனிக்கும் அளவுக்கு உரிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை; தூங்காமல் முழித்தபடி கணிசமான மருத்துவர்கள் கடுமையாக வேலைசெய்கிறார்கள்; டெங்கு நோயாளிகளுக்கான பரிசோதனை வசதி முழுமையாக இல்லை; இதைப் பற்றிப் பேசாமல் நிலவேம்புக் குடிநீரை விநியோகிப்பது, அதைத் தவறு என்பது என யதார்த்தப் பிரச்னையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதாகவே இப்போது வாதப் பிரதிவாதம் நடத்தப்படுகிறது. நோய்த்தடுப்புக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், குடிநீர், பரிசோதனை வசதிகள் உள்ளனவா? துப்புரவு, கழிவகற்றல் பணிகள் செய்யப்படுகின்றனவா? மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை போதுமானதா எனப் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை” என டெங்கு தொடர்புடைய பல பிரச்னைகளை அடுக்குகிறார்கள், அரசு டாக்டர்கள் தரப்பில்! 

நிலவேம்புக் குடிநீரை மட்டும் பேசுவதைவிட்டு வேறு பக்கம் பார்வையைத் திருப்பி, டெங்குவால் உண்டாகும் உயிரிழப்பைத் தடுப்பதில் இறங்குவது அவசர அவசியம்!Trending Articles

Sponsored