பொது சுகாதாரம் அடிப்படை உரிமை! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம் -2Sponsoredஇந்த தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..

கியூபா நாட்டின் மருத்துவக் கட்டமைப்பானது உலக அளவில் குறைந்த செலவிலும் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் 2014-ல் ஹவானாவுக்குப் பயணம் செய்தபோதுதான், கியூபாவின் மருத்துவ வழிமுறைகளை மற்ற நாடுகள் பின்பற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக அதன் நோய்த்தடுப்பு முறையை உள்ளடக்கிய சிகிச்சைத் திட்டத்தை, தரமான மருத்துவ சேவையை உலக நாடுகள் எல்லாமும் பெறவேண்டும் என்ற அவாவை முன்வைத்தார். அவரின் இந்தப் பாராட்டு மட்டுமல்ல, அதே ஆண்டில் உலக சுகாதாரப் பேரவையின் 67-வது கூட்டத்தொடரை கியூபாவில் நடத்தியதும் அந்த நாட்டின் மருத்துவத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும். 

Sponsored


இந்த நிலையை மந்திரமாயாஜால வித்தையைப்போல கியூபா ஒரு கணத்தில் அடைந்துவிடவில்லை. அதற்கு உதவிசெய்தது, அமெரிக்க அரசுதான். ஆம், 1959-ல் கியூபாவில் புதிய அரசைப் படைத்த பிடல் காஸ்ட்ரோ-சேகுவேரா கூட்டணியின் கொள்கையால், அமெரிக்க அரசு அதன் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. அறுபது ஆண்டுகளை நெருங்கப்போகும் அந்தத் தடையின் காரணமாக கியூபா அரசும் மக்களும் வேளாண்மை, தொழில், கல்வி ஆகியவற்றுடன் மருத்துவத் துறையிலும் தற்சார்புக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

Sponsored


காஸ்ட்ரோ தலைமையில் 1959 ஜனவரி முதல் தேதியன்று புதிய கியூபா அரசு பதவியேற்பதற்கு முன்னர், அந்நாட்டில் தலைநகர் ஹவானாவில் இருந்த பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு எந்த மருத்துவக் கல்லூரியும் இல்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மொத்தம் சேர்ந்தே 6 ஆயிரம் பேர்தான் இருந்தார்கள். அவர்களில் பாதிப்பேர், பாடிஸ்டா ஆட்சி அகற்றப்பட்டதை அடுத்து, நாட்டைவிட்டு வெளியேறினர். அந்தப் புள்ளியிலிருந்தே அடுத்த புள்ளிக்கு நகரவேண்டிய நிர்ப்பந்தம், கியூபாவுக்கு! 

1960 தொடங்கி பத்தாண்டுகளுக்குள் 4,907 மருத்துவர்கள் உருவாக்கப்பட்டனர். அடுத்த பத்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 9,410. 1980-89 காலத்தில் 22,490 மருத்துவர்கள், 90-99 காலத்தில் 37,841 மருத்துவர்கள் என கியூபாவில் படிப்பை முடித்தவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போனது. இதில் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, உலகெங்குமிருந்து மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடக்கம். 

ஒரு கட்டத்தில் கியூபா மக்களின் தேவைக்கு அதிகமான அளவில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி கியூபாவின் மருத்துவப் பட்டதாரிகள் எண்ணிக்கை 75 ஆயிரம். இவர்களில் 20% பேர் உலகம் முழுவதுமுள்ள 70 நாடுகளில் மருத்துவப் பணி செய்துவருகின்றனர். 

1997-ல் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளைக் கடுமையாக பாதித்த சூறாவளியை அடுத்து, வெளிநாட்டு மாணவர்களுக்காகவே தனியாக, புதிதாக இலத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளி உருவாக்கப்பட்டது. இதன்மூலம் மூன்றாம் உலக நாடுகளுக்கு மருத்துவர்களை கியூபா உருவாக்கித்தருகிறது. இதுவரை 20 ஆயிரம் மருத்துவர்கள் இதன்மூலம் உலகின் பல திசைகளிலும் கியூப மருத்துவ சிகிச்சையை அளித்துவருகின்றனர். 

முதல் காரணம், பொது சுகாதாரம் என்பது கியூப மக்களின் அடிப்படை உரிமையாக ‘புரட்சி’ அரசாங்கத்தின் புதிய அரசியல்சாசனத்தில் வைக்கப்பட்டது. எழுத்தில் மட்டுமில்லாமல் அதைச் செயல்படுத்தியும் காட்டியது, அமெரிக்காவால் ரெட் கார்ட் போடப்பட்ட கியூப அரசாங்கம். 

1960-ல் ஊரக சுகாதார சேவைப் பணி தொடங்கப்பட்டது. அடுத்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான மருத்துவப் பட்டதாரிகள் ஊரக சுகாதார சேவையில் அமர்த்தப்பட்டனர். ஊரக மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு மகப்பேறு, குழந்தைநலம், பெண்கள் மருத்துவம், பல் மருத்துவம் உட்பட்ட சிகிச்சைகளை அளிக்கும் பாலிகிளினிக்குகள் அதிக அளவில் அமைக்கப்பட்டன. அவரவர் வசிக்கும்பகுதியிலேயே உரிய சிகிச்சை பெறுவதை நோக்கமாகக் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனைப் பகுதியில் உள்ள மக்களுடன் கலந்துரையாடுவதைக் கட்டாயமாக ஆக்கும்வகையில் சுகாதார சேவை முறை மாற்றியமைக்கப்பட்டது. 

மருத்துவக்கல்வி முறையானது முன்பிருந்தபடி புத்தகங்களை மையப்படுத்தியதாக இல்லாமல், மருத்துவப் பணிகளை அங்கமாகக் கொண்டதாக மாற்றப்பட்டது. இதன்மூலம் சுகாதாரப் பிரச்னைகள் தொடர்பாக மட்டுமின்றி அதோடு தொடர்புடைய சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும்படி ஆனது. வளரும்நிலையில் இருந்த கியூப தேசிய சுகாதாரக் கட்டமைப்பின் முதுகெலும்பாக ஆரம்ப சுகாதார மையங்கள் உருவெடுத்தன. இந்த முயற்சிகளின் மூலம் மகப்பேறு மற்றும் குழந்தைநலம், தொற்றுநோய்கள், நாள்பட்ட தொற்றாநோய்கள், முதியோர் மருத்துவம் ஆகியவற்றில் தேசிய அளவிலான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தமுடிந்தது. 

அடுத்த பத்தாண்டுகளில் பிரதேசரீதியாக மருத்துவசேவையை மேம்பாட்டுக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 55 பிரிவுகளில் தேசிய அளவிலான சிறப்பு மையங்களாக அவை உயர்த்தப்பட்டன. 1976-ல் மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சி வழங்கலானது புதிதாக அமைக்கப்பட்ட பொதுசுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. நாட்டின் தலைநகரில் பணியாற்றுவதைவிட அவரவர் பயிற்சிபெறும் மாகாணங்களிலேயே பணியாற்றுவதை ஊக்கப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவ்வாறாக வளர்த்தெடுக்கப்பட்ட கியூப மருத்துவத் துறையானது, நாட்டையே மாற்றியமைத்த தேசிய சுகாதாரத் திட்டத்தின் அடிப்படையாக அமைந்தது என்பது மிகவும் பொருத்தமானது. 

அடுத்தகட்டமாக, உலகத்தையே உற்றுகவனிக்கக்கூடியவகையில் உருவாக்கப்பட்ட தனிச் சிறப்பான  திட்டமான ‘குடும்ப மருத்துவர்- செவிலியர்’ முறை கொண்டுவரப்பட்டது.

அது என்ன?.... 

இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..Trending Articles

Sponsored