குழந்தையைக் காப்பாற்றிய விஜய்!Sponsoredமெர்சலுக்கு முன், மெர்சலுக்குப் பின் எனுமளவுக்கு நடிகர் விஜய்யைச் சுற்றியே 'அரசியல்' வட்டமடிக்கின்றன. "அரசியலுக்குள் வருவதற்காகவே மெர்சல் படத்தில், பி.ஜே.பி ஆட்சியின் திட்டங்கள் பற்றி அவதூறு பரப்பியிருக்கிறார் விஜய்" என பி.ஜே.பி-யின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்தாலும் மௌனமாகவே இருக்கிறார் விஜய். அதேநேரம் தனது நற்பணி மன்றங்களின் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார். விஜய் மனதில் என்னதான் இருக்கிறது? ஒரு நடிகரின் எண்ணங்களை அவரின் ரசிகர் மன்றத்தினர் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒருவகையில் நடிகரின் மனசாட்சியாக வெளிப்படுவது அவர்களின் மன்றங்களே. இதன்பொருட்டு விஜயோடு அவ்வப்போது வெள்ளைச் சட்டை, வெள்ளை பேன்ட்டில் வலம் வரும் அவரை நேரில் சந்தித்தோம். பொதுவாக லைம்லைட்டில் வெளிவராத அவர் விகடனுக்காகப் பேசினார். அவர், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் நற்பணி மன்றத்தின் அகில இந்தியத் தலைவரான புஸ்ஸி ஆனந்த்! அவரிடம் நமது நேர்காணலைத் தொடங்கினோம். 

“மெர்சல் திரைப்படம் இந்தளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தும் என்று, படம் வருவதற்கு முன்பே எதிர்பார்த்தீர்களா?''

Sponsored


''ஒரு படத்தில் என்ன இருக்கும், இருக்க வேண்டும் என்று விஜய் சாருக்கு மட்டுமே தெரியும். நாங்க மன்றத்தினர்தான். ஆனால், அவரின் ரசிகனா சொல்லணும்னா அவர் படங்கள் எல்லாவற்றிலுமே மக்களுக்குப் பயன்தரக்கூடிய கருத்துகள் இடம் பெற்றிருக்கும். எனவே, நல்ல படமாக மெர்சல் இருக்கும் என்று எதிர்பார்த்தே இருந்தோம். மெர்சல் படத்திலும் நல்ல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அவரின் அனைத்துப் படங்களையும் கொண்டாடுவோம். மெர்சலைக் கூடுதலாகவே கொண்டாடுகிறோம்.''

Sponsored


“மெர்சல் படத்தில் இடம் பெற்ற ஜி.எஸ்.டி, டிஜிட்டல் பேங்கிங் விமர்சன வசனங்களுக்கு பி.ஜே.பி தரப்பிலிருந்து கடும் எதிர்வினைகள் எழுகிறதே....?''

''மக்கள் மனதில் உள்ள கருத்துகளைத்தான் மெர்சல் படத்தில் விஜய் பிரதிபலித்தார். அந்த வசனங்களுக்கு எழும் கரவொலிகள் அதற்கு சாட்சி. மக்களின் ஆதரவால், இன்றுவரை அரங்கு நிறைந்த காட்சிகளாக மெர்சல் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றபடி தனிப்பட்ட வகையில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்க விஜய்க்கு என்றுமே இருந்ததில்லை.''

''கட் -அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என ரசிகர்களை தம்முடைய சுயநலத்துக்காக விஜய் பயன்படுத்திக்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுகிறதே...?''

''கட் -அவுட்டுக்கு கெட் -அவுட் சொல்பவர் எங்க தளபதி. 'குழந்தைங்க பசிக்கு உதவுற பாலை, கட் -அவுட்டுக்கு ஊத்துறீங்களே... இது தவறு'னு எங்க விஜய் சார் சொல்வார். கடன் வாங்கி மன்ற வேலைகள் செய்வதையும் விரும்பமாட்டார். 'மொதல்ல உன் தொழிலைப் பாரு, உன் குடும்பத்தைப் பாரு, அதன் பிறகு உனக்கு நேரமிருக்கும்போது மன்றப் பணிகளைப் பாரு' என்றுதான் கூறுவார். தளபதியோட தீவிர ரசிகரொருவர், அவரைப் பார்க்கும்போது  ஆர்வக்கோளாறில், கையில் பிளேடை எடுத்துத் தன்னைத்தானே கிழித்துக்கொண்டார். 'இதெல்லாம் கண்டிக்கமாட்டீங்களா?' என என்னிடம் சத்தம் போட்ட விஜய், 'ரசிகர்கள் அப்படித்தான் இருப்பாங்க. அவங்கள சரியான வழியில் கொண்டுசெல்வது நம்ம கடமை' என அறிவுரை செய்தார்.''

''விளம்பரத்துக்காக வசனம் பேசுபவர் விஜய் என்றும் விமர்சனங்கள் எழுகின்றதே...?''

''எதையும் விளம்பரம் செய்துகொள்ளாதவர் அவர். இந்தக் கேள்வி கேட்டதுக்காக நீண்ட நாள்களுக்கு முன்பு  நடந்த ஒரு உண்மை சம்பவத்தைச் சொல்கிறேன். ஒரு சாதாரண கூலித் தொழிலாளியோட குழந்தைக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டது. இது விஜய் சாரோட கவனத்துக்கு வந்தது. என்னைக் கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னார். நான் அந்த ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரித்தேன். 'பெரிய ஆஸ்பத்திரியில எப்படிச் சேர்த்தீங்க?'னு குழந்தையோட அப்பாகிட்ட கேட்டேன். அவசரத்துக்கு பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரின்னு சேர்த்துட்டேன் 'ன்னு சொன்னாரு. அவங்க உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு விஜய் சார்கிட்ட சொன்னேன். ஒரு பெரிய தொகையை நிரப்பி செக் எழுதிக்கொடுத்தாரு. 'நீங்களே வந்து கொடுத்தா நல்லாருக்குமே'னு சொன்னேன். 'யார் கொடுக்குறாங்கன்னு முக்கியமில்லை. உயிரக் காப்பாத்துறதுதான் முக்கியம்'னு சொன்னாரு. அவங்களுக்கு அந்த செக்கை நான் போய் கொடுத்தேன். நள்ளிரவு ஒன்னரை மணியிருக்கும், எனக்கு கால் செஞ்ச விஜய் சார், 'குழந்தை எப்படி இருக்கு? வேற என்ன உதவி வேணும்னு கேளு. கூட இருந்து பார்த்துக்கோ'னு சொன்னார். இன்னைக்கு அந்தக் குழந்தை நல்லாருக்கு. இதுதான் விஜய் சாரின் இயல்பான குணம். அவர்கிட்ட இருப்பது உணர்வு, விளம்பரமல்ல.''

''உங்க மன்றங்கள், மக்கள் இயக்கமாக மாறிய நோக்கமென்ன?''

''மக்களுக்கு எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கம்தான். அதிகாரப்பூர்வமாக 60 ஆயிரம் மன்றங்களும், பதிவு செய்யாமல் பல்லாயிரம் மன்றங்களும் உள்ளன. கடந்த காலங்களில் ஏரி தூர்வாருதல், கோயில்கள் முன்பு மண்டிக்கிடந்த முட்புதர்களைச் சுத்தம் செய்தல், பழுதடைந்த கோயில்களுக்குச் சுண்ணாம்பு அடித்துப் பராமரித்தல் போன்ற பணிகளில் எங்கள் மக்கள் இயக்கத்தினர் ஈடுபட்டனர். தற்போது டெங்கு பிரச்னையாக இருப்பதால், அரசு சுட்டிக்காட்டிய அளவின்படி நிலவேம்புக் குடிநீர் வழங்கும் இயக்கத்தை நடத்தினோம்.''

''இவையனைத்தும் விஜய் கொடுத்த அரசியல் அசைன்மென்ட்டா?''

''இப்படியெல்லாம் கேள்வி கேட்டா எப்படி?(சிரிக்கிறார் ) அவரைப் பொறுத்தவரை மக்களுக்கு உபயோகமான வழியில் மன்றத்தினர் இருக்க வேண்டும். மன்ற உயர்மட்ட நிர்வாகிகள் தொட்டு கிளை உறுப்பினர் வரை போட்டிப் போட்டுக்கொண்டு மக்களுக்கான நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்றுதான் வலியுறுத்துவார். அதையே எங்க மந்திரமாக எடுத்துக்கொண்டு நாங்கள் உழைக்கிறோம்.''

''ஆளப்போறான் தமிழன் குறியீடு குறித்து?''

''அவர் மனசுல உள்ளது அவருக்குத்தான் தெரியும். அவர் சொல்வதை செய்யவே நாங்கள் இருக்கிறோம்" 

- என்கிறார் புன்னகையோடு.Trending Articles

Sponsored