மக்களிடம் நெருங்காத அதிகாரிகள்... உள்ளாட்சித் தேர்தல் தாமதத்தால் இன்னலில் தமிழகம்!Sponsoredசாதாரண மனிதர்களும் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காகவும், அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவும் உள்ளாட்சித் தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் தமிழகத்தின் அரசியல் அசாதாரண சூழல் காரணமாகவும், ஆளும் கட்சியின் அலட்சியம் காரணமாகவும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்து மிகச் சரியாக ஓராண்டு ஆன பின்னரும் தேர்தல் நடத்துவதற்கான அறிகுறிகள் மிக நெருக்கத்தில் தென்படவில்லை.  

உள்ளாட்சித் தேர்தல் ஏன் நடத்தப்பட வேண்டும்?

Sponsored


உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் ஒவ்வொரு வார்டுக்கும் கவுன்சிலர் தேர்வு செய்யப்படுவார். வார்டு கவுன்சிலர் என்பவர், மக்களுடன் அதே வார்டில் தங்குபவராக இருப்பார். வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தாலோ அல்லது குழாயில் குடிநீர் வராவிட்டாலோ, தெருவிளக்கு எரியா விட்டாலோ அந்தக் கவுன்சிலரைப் பார்த்து, அந்த வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் முறையிடுவார்கள்.

Sponsored


கடந்த ஒரு வருடமாக தமிழக  முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து என ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறாததால், வார்டு கவுன்சிலர்கள் யாரும் இல்லை. பொதுமக்கள் அதிகாரிகளிடம்தான் முறையிட வேண்டும். அதிகாரிகள் மக்களுடன் பழகுபவர்களாக இருப்பதில்லை. அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு விலகல் தன்மை இருக்கிறது. அதிகாரத் தோரணையில்தான் அவர்கள் மக்களை அணுகுகின்றனர்.

மேலும், பொதுமக்கள் தேடிச் செல்லும்போது அதிகாரிகள் இருப்பார்கள் என்றும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. சாதாரண மக்கள், அதிகாரிகளின் மொபைல் போனில் தொடர்பு கொண்டாலும், அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளைச் செவிமடுப்பது இல்லை  என்பதே உண்மை. நூறில் ஒருவர் அல்லது ஆயிரத்தில் ஒருவர் என்றுதான் அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்பவராக இருக்கிறார்கள். எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்குக்  காலம் கடத்தாமல் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் பொதுமக்களின், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

தாமதத்துக்குக் காரணங்கள்

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ம் தேதியுடன் முடிவைடைந்து விட்டது. கடந்த ஓராண்டாக தமிழகம் எதிர்கொண்ட துயரங்கள் என்ன என்று முன்னாள் சென்னை மேயரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியனிடம் கேட்டோம். "உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததன் விளைவாகச்  சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்புகள் அதிகரித்தன. கவுன்சிலர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இருந்திருந்தால் உள்ளாட்சி அதிகாரிகளுடன் இணைந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.  

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியில் முழுமையாகச் செயல் இழந்திருக்கிறது. இரண்டு லட்சம் அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தி ஆக வேண்டும். தேர்தல் நடத்த ஆளும் கட்சியினர் அச்சப்படுகின்றனர். ஓரிடத்தில் கூட அ.தி.மு.க  வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்திருக்கின்றனர். எனவே, தேர்தல் நடத்த அச்சப்படுகின்றனர். நீதிமன்றத்தில் காலக்கெடுவை நீடிக்கும் படி கேட்கின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுபவர்களுக்கு இட ஒதுக்கீடு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும், அதனால்தான் தாமதம் ஆகிறது என்றும் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்கள். இந்த அறிவிப்பு வெளியானதற்கு அடுத்த நாள், பெண்களுக்கான வார்டு, தலித்களுக்கான வார்டு உள்ளிட்ட இட ஒதுக்கீடு அடிப்படையில் வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க தரப்பில் வெளியிட்டார்கள்.  ஆனால், எந்த வார்டு யாருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் எதிர்கட்சிகளுக்குத் தெரியவில்லை. இது, அ.தி.மு.க-வுக்கு மட்டும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளை இட ஒதுக்கீடின் படி பிரிக்க வேண்டும் என்பதால், தேர்தல் நடத்த தாமதம் ஆகும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. உள்ளாட்சிப் பதவிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிப்பதற்கு பத்து நாள்கள்தான் ஆகும். ஆனால், எடப்பாடி அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததன் காரணமாக, மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கிச் சென்றிருக்கிறது"  என்றார்.

மக்களுக்கு அருகே...

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறாததால், மக்களுக்கான நேரடியான பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகத்திடம் கேட்டோம். “மக்களுக்கு அருகில் அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதுதான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நோக்கம். மக்களுக்குப் பிரச்னை என்றால் அதனை உடனடியாகத் தீர்க்கக் கூடிய வகையில், அவர்களுக்கு அருகில் ஓர் அரசின் பிரதிநிதி இருக்கிறார் என்பதுதான் இதன் முக்கியமான அம்சம்.

‘ஏன் தண்ணீர் வரவில்லை. தெருவில் சாக்கடை அடைத்துக்கொண்டிருக்கிறது' என்று உரிமையோடு கவுன்சிலர்களை அணுகி, ‘எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்' என்று அவர்களிடம் கேட்க முடியும். கிராமங்களில் காலை 5 மணிக்குக் கூட உள்ளாட்சி அமைப்புகளின் பிரிதிநிதிகளின் வீடுகளுக்குச் சென்று கதவு தட்டிக் கேட்பார்கள். இப்போது பொதுமக்கள் யாரிடம் போய் கேட்பார்கள்.

நடவடிக்கை இருக்கும்

உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி ரீதியாகச் செயல்பட்ட போதிலும், மக்களுக்குப் பிரச்னை என்று வந்து  விட்டால் அதைத்தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்க வழி செய்யாவிட்டால், மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். மீண்டும் அதே வார்டில் போட்டியிட முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். மேலும், அதிகாரிகள் ஒரே இடத்தில் பணி செய்ய முடியாது. அடிக்கடி டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவார்கள். இதனால், மக்களின் குறைகளை அவர்களால் களையமுடியாது. கிராம சபை கூட்டங்கள் கண்துடைப்புக்காகத்தான் நடைபெறுகின்றன. அதிகாரிகள் சொல்லும் தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன.

பலமுனைத் தாக்குதல்

மாநில அரசு ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் தவிக்கிறது. கடனில் இருக்கிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை உரிய நேரத்தில் மாநில அரசு கொடுக்கவில்லை. மத்திய அரசும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியைத் தரவில்லை. நிதியை கேட்டுப் பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தேவை. தமிழகம் முழுவதும் கோடைக் காலத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவியது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடினர். உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால், மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இப்போது பருவமழை காலத்தில், உள்ளாட்சி அமைப்புகள் என்னவிதமான நிவாரணப்பணிகளை மேற்கொள்வார்கள் என்பது கேள்விகுறிதான். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறாததால் மக்கள் பல்முனை தாக்குதலுக்கு உட்பட்டிருக்கின்றனர்" என்றார் கோபமாக.Trending Articles

Sponsored