சோனியா காந்திக்கு என்னவாயிற்று ? தொடர் சிகிச்சை ஏன் ?Sponsoredகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாகத்  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் ஃபுட் பாய்ஷன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் சோனியா காந்தி. இந்த நிலையில், அவர் வயிற்றுப்போக்கு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உடல்நிலை காரணமாகப் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்துவந்தார் சோனியா காந்தி. இந்த நிலையில், முன்னாள்  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோதும் அவர் மேடையில் ஏறவுமில்லை; எதுவும் பேசவுமில்லை. அதன் பின்னர் கடந்த சில நாள்களுக்குப்  பின்பு சிம்லா சென்ற சோனியா காந்திக்கு, அங்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் டெல்லியில் உள்ள காங்கா ராம் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை  5 மணிக்கு வயிற்றுப்போக்குக் காரணமாகச் சோனியா காந்தி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தீவிரக் கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் மருத்துவமனையின் தலைவர் ஆர்.எஸ்.ரமணா தெரிவித்துள்ளார்.

Sponsored


கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே சோனியா காந்தியின் உடல் நிலையில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தேர்தல் பிரசாரம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது அதேபோல் உடல்நலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Sponsored


 உடல்நலக் குறைவு  ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாவின்  உடல்நிலைகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ''சிம்லா சென்ற அம்மாவுக்கு  உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்பைவிட அம்மா தற்போது நலமாக இருக்கிறார். அவரைப் பற்றிக் கவலைகொள்ளத் தேவையில்லை ('Ma is much better, nothing to worry')'' என்று அதில் தெரிவித்துள்ளார்.

தொடர் சிகிச்சை ஏன் ? 

கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சோனியா காந்தி, அங்குள்ள நியூயார்க் மெமோரியல் சோலையன் கெட்டிரிங் கேன்சர் இன்ஸ்டியூட்டில் ( New York’s Memorial Sloan Kettering Cancer Center) அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 5 வாரங்கள் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து உடல்நலம் பெற்றதைத் தொடர்ந்து அவர் இந்தியா திரும்பினார். தொடர்ந்து சோனியா காந்தி அமெரிக்காவுக்குச் சென்று வழக்கமாகப் பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வட மாநில மலைப் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்றிருந்தார் சோனியா காந்தி. அப்போது, அவருக்குத் திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக டெல்லி கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கேயே தங்கி சில நாள்கள் சிகிச்சை பெற்றுவந்தார். பிறகு, ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி சோனியா காந்திக்கு மீண்டும் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு, தோள்பட்டை காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் அவரை மருத்துவர்கள் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதன்பின்னர் கடந்த மே மாதம்

குடியரசுத் தலைவர் தேர்தல்குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் சந்திப்பு நடைபெற இருந்தது. அப்போதும் சோனியா காந்திக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதன் காரணமாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பும் தள்ளிப்போனது. அவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசினார் .

இந்த நிலையில்தான் மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பலமுறை சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுவரும் நிலையில், அதற்கான  காரணம் என்ன என்பது குறித்து இதுவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தெளிவான தகவலை வெளியிட்டதில்லை. சோனியாவின் உடல்நிலைகுறித்து தமிழகக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரிடம் பேசியபோது, ''உடல்நலக் குறைவு காரணமாகச் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து டெல்லி மேலிடத்தில் பேசினேன். டாக்டர்கள்  அளித்துவரும் சிகிச்சை  காரணமாகத் தற்போது அவர்  நலமுடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.சிகிச்சை முடிந்து விரைவில் வீடு விரும்புவார்'' என்று முடித்துக்கொண்டார்.

சோனியாவுக்கு உடல்நிலை அவ்வப்போது  பாதிக்கப்படுவதால்தான் என்னவோ தெரியவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ராகுல் காந்தி  நியமிக்கப்படலாம் என முன்பே சோனியா காந்தி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored