மூழ்கிய மெரினா... பரிதவிக்கும் தொழிலாளர்கள்... அரசின் கவனத்துக்கு! #ChennaiRain #VikatanExclusive



சென்னை மெரினா கடற்கரை மழை பாதிப்பினால், கரைக்கு இந்தப் புறமும் அந்தப் புறமுமாக இரண்டு கடலாகக் கிடக்கும் காட்சியை இந்நேரம் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீர்கள். அண்ணா சமாதி தொடங்கி லைட் ஹவுஸ் வரை மொத்தம் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இதே மெரினா கடற்கரையில் குதிரை ராட்டினம், மீன் வறுவல், பலூன் - துப்பாக்கி, குளிர்பானம், ஐஸ்கிரீம், சாட் உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மெரினா அருகேயுள்ள நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இரவோடு இரவாகப் பெய்த பேய்மழையில் நேற்று மெரினா வெள்ளக்காடு ஆனதை அடுத்து அங்கிருக்கும் அத்தனை கடைகளும் நீரில் மூழ்கின. இரண்டு பெண்கள், தங்களது மீன் வறுவல் கடையில் இருந்த பொருள்களைத் தண்ணீரில் தத்தளித்துத் தேடி எடுத்துக்கொண்டிருந்தார்கள். ஐஸ்கிரீம் கடை பாதி நீரில் மூழ்கி காற்றில் ஆடிக்கொண்டிருப்பதை மேட்டில் நின்றுகொண்டு கவலையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் கடைக்காரர் ஒருவர்.

Sponsored


மெரினாவில் குதிரை ராட்டினம் வைத்துப் பிழைப்பு நடத்தி வரும் வேலு, தண்ணீரில் அடித்துச் சென்று ஒதுங்கிய தனது ராட்டினக் குதிரைகளைத் தேடி எடுத்துக்கொண்டிருந்தார். மரக்குதிரை என்பதால் அவற்றில் சில, நீரில் ஊறிப்போய் கால்கள் உடைந்து கிடந்தன. சிலவற்றை சிறுவர்கள் எடுத்துச்சென்று விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலர் அவரது ராட்டினத்தின் குடைமீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை இறங்கும்படி கெஞ்சிக்கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம். “கடற்கரை மணலிலும், ரோட்டிலுமாக இங்கே மொத்தம் இருநூறு கடைகள்வரை இருக்கு. ஆனால், ஒரே இரவில் பெய்த மொத்த மழை நீரும் அப்படியே கடற்கரையில் தேங்கியதால், இங்கிருந்த அனைத்துக் கடைகளும் நீரில் மூழ்கிவிட்டன. மெரினா கடற்கரையின் ஒரு பகுதி ஓடை போல இருக்கும். ஒவ்வொரு வருடமும் அரசு, அந்த இடத்தில் மணலைச் சமன்படுத்தி நீர் கடலில் சென்று சேர்வதற்குத் தகுந்தாற்போல் வழிவகை செய்யும். 

Sponsored


Sponsored


ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அதற்கான நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. அதனால், இங்கே இருக்கும் அத்தனை கடைகளும் இப்போது தண்ணீரில் மூழ்கிவிட்டன. சாட் கடைகள் எல்லாம் நேற்று இரவே பாலித்தீன் உரைகள் கொண்டு மூடிவிட்டார்கள். அதனால், அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை. ஐஸ்கிரீம் வண்டிகள் மற்றும் குளிர்பான வண்டிகளின் உள்ளே தண்ணீர் புகுந்துவிட்டன. என்னைப் போன்ற ராட்டினம் வைத்திருப்பவர்களுக்கு ராட்டினம் சுற்றும் கம்பிகள் மட்டும்தான் மிச்சமாக எஞ்சியிருக்கின்றன. ராட்டினத்தில் இருக்கும் குதிரைகள், நாற்காலிகள் என அத்தனையும் மழையில் அடித்துச் சென்று எங்கேயோ விழுந்துவிட்டன. காலையிலிருந்து தேடித் தேடி இப்போதுதான் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். இதைச் சரிசெய்ய எப்படியும் 4,000 ரூபாய்வரை செலவாகும். இந்த இடத்தை அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சரி செய்திருந்தால் ஒருவேளை இந்தப் பிரச்னை வந்திருக்காது. இந்த இடத்தில் நீர் வடிந்து மீண்டும் நாங்கள் பழைய நிலையைப்போல தொழில்தொடங்க இன்னும் ஒருவார காலம் ஆகும். எங்களுக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது என்பதால், அடுத்த ஒருவார காலத்துக்கு எங்களின் வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை” என்று முகத்தில் கவலையுடன் தன் மரக் குதிரைகளை மீண்டும் தேடத் தொடங்கினார்.

மக்கள் அஞ்சுவதுபோல, 2015-ம் ஆண்டு மழைபோல இந்த மழையால் பெரிய பாதிப்புகள் இல்லை. ஆனால், மனிதர்கள் உருவாக்கிவைத்த சிக்கல்களால் இப்படி ஆங்காங்கே தண்ணீர் பெரிய அளவில் தேங்கியிருப்பது எளிய மக்கள் பலரின் பிழைப்பைப் பெரியளவில் பாதித்துள்ளது.

அரசு கவனிக்குமா?



Trending Articles

Sponsored