“பணமதிப்பிழப்பால் இவர்களுக்குத்தான் பயன்!” கொதிக்கும் வங்கிகள் சங்கம்Sponsoredடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி "500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது" என அறிவித்தார். மத்திய அரசின் இந்த பணநீக்க நடவடிக்கை நாட்டு மக்களின் அன்றாட வாழ்வைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட மறுநாளே வங்கியின் நடவடிக்கைகள் மாற்றியமைக்கப்பட்டன. ரிசர்வ் வங்கியின் விதிமுறை ஒரு பக்கம் என்றால், அதை  நடைமுறைப்படுத்தும் வங்கியின் செயல்பாடுகள் மற்றொரு பக்கம் என போட்டி போட்டு மக்களை வாட்டி வதைத்தன. இப்படியான சிக்கலில் அன்றாடச் செலவுகளுக்குக்கூட காசு எடுக்க முடியாமல் திண்டாடிப் போனார்கள் சாமான்யர்கள்.

அடுத்த வேளை உணவில் தொடங்கி மருத்துவச் செலவு, குடிநீர் கட்டணம் எனப் பல்வேறு பிரச்னைகள் நீண்டுகொண்டே சென்றன. இப்படியான சிக்கல் சுமார்  4 மாத காலம் இருந்த நிலையில், ரிசர்வ் வங்கி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. புதிய நோட்டுகள் புழக்கத்தில் வந்தாலும் மக்களின் பிரச்னைகள் தீர்வு பெறாமலே இருந்தது. 2000 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு சில்லறைக்காக அலையும் வேதனையும் தொடர்ந்துகொண்டிருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், கிட்டத்தட்ட 6 மாதகாலம் மிகுந்த சிரமத்திலிருந்த நிலையில், ஏப்ரல் மாதத்துக்குப் பிறகே நிலைமை சீராகத் தொடங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில், அதன் தாக்கம் இன்னமும் சாமான்யர்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

Sponsored


Sponsored


கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறி வருகிற நிலையில், அரசியல் கட்சிகள்  இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரித்துவருகின்றன. என்ன நோக்கத்துக்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதோ அந்த நோக்கம் நிறைவேறியதா? மத்திய அரசின் இந்த நடவடிக்கைகுறித்து வங்கிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? என இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடுபிரிவு பொதுச்செயலாளர் சி.பி கிருஷ்ணாவிடம் பேசியபோது, "பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் மட்டுமே பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையால், சீன நாட்டு நிறுவனமான அலிபாபா 'பே டிஎம்' நிறுவனம்தான் லாபமடைந்துள்ளது. அந்த  நிறுவனத்துக்காக மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.'வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக' பிரதமர் கூறுகிறார். ஆண்டுதோறும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்பது அனைவருக்குமே தெரியும். இதனைப் பிரதமர் சொல்லத்தேவையில்லை. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக பணமதிப்பிழப்பு செய்ததாக மத்திய அரசு கூறிவருகிறது. ஆனால், அரசின்  விதிகளை மீறி ஒன்றரை லட்சம் வங்கிக் கணக்காளர்கள் லட்சக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். அப்படி செலுத்தியவர்களிடம் என்ன விசாரிக்கப்பட்டது? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதே தெரியவில்லை. அப்படி செலுத்தப்பட்ட மொத்தத் தொகையின் மதிப்பு மட்டும் 4, 89,000 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்படியான நடவடிக்கையால் வங்கிகள் கடுமையான பின்னடைவைச் சந்தித்துவருகின்றன. வங்கிகளிலிருந்து கடன் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால்,  சிறு தொழில் தொடங்க முடியாமல் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு தற்போது ஜி.எஸ்.டி நடவடிக்கையும் சேர்ந்து கொண்டுள்ளதால், சமான்யர்களின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. பணமதிப்பிழப்பு  நடவடிக்கையின் விளைவாக நாடு முழுவதும் சாமான்யர்கள், வங்கி ஊழியர்கள் என 124 பேர் உயிரிழந்தனர். எனவே, இதனை வளர்ச்சிக்கான நடவடிக்கை என்பதைவிட சாமான்யர்களின் உயிரைப் பறித்த  நடவடிக்கை என்றுதான் சொல்லவேண்டும். சுருக்கமாகச்  சொன்னால், மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதைதான் பிரதமரின் நடவடிக்கை" என்றார்.Trending Articles

Sponsored