குஜராத் தேர்தல் விநோதங்கள்... மோடியை காப்பி அடிக்கிறாரா ராகுல்?




ந்திய தேர்தல் வரலாற்றில், புதிய உத்திகளைக் கையாண்டு ஆட்சியைப் பிடித்தவர் நரேந்திரமோடி. அவரது குஜராத் தேர்தல் பிரசார பாணி இந்திய அளவில் பேசப்பட்டது. மோடிக்கு எதிரான தலைவராகக் கருதப்படும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் இப்போது குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரமாகக் கவனம் செலுத்திவருகிறார்.

Sponsored


வழக்கமாக பழங்குடியினர் குடிசைப்பகுதிகளுக்குச் சென்று அவர்களுடன் ராகுல் பேசுவார். சாலை ஓரங்களில் திடீரென காரை நிறுத்தி பொதுமக்களுடன் பேசுவார். ஆனால், இத்தகைய அவரது தேர்தல் பிரசார பாணி கடந்த 2014 லோக்சபா தேர்தலிலும், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் எடுபடவில்லை.

Sponsored


மோடி பாணி

Sponsored


இப்போது குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. மோடியை அவரது சொந்த மாநிலத்தில் தோற்கடித்து விட வேண்டும் என்று ராகுல் காந்தி தீவிரம் காட்டி வருகிறார். எந்தமாநிலங்களை விடவும், குஜராத்தில் அதிக கவனம் செலுத்தி ராகுல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

குஜராத்தில் உள்ள முக்கியமான 15 கோவில்களுக்கு ராகுல் காந்தி விசிட் அடித்துள்ளார். இதுபோன்ற பிரசாரபாணியை எந்த ஒரு மாநிலத்திலும் அவர் மேற்கொண்டதில்லை. அதேபோல வாக்காளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இதுவும் மோடியுடைய பாணி என்கின்றனர்.

அதேபோல, குஜராத் அரசையும், மோடியையும் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, வாக்காளர்களிடம், காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இதுவும் மோடியின் பாணி என்கின்றனர். மக்களுக்காக நான் என்ன செய்யப்போகிறேன் என்ற ரீதியில்தான் மோடி பிரசாரம் செய்வார். அதே பாணியை ராகுல் காப்பி அடிக்கிறார் என்று பி.ஜே.பி தலைவர்கள் சொல்கின்றனர். சூரத் நகரில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "மோடி ஜி-யைப்போல பேசுவதற்கு, எனக்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்" என்று பேசி இருக்கிறார்.

செல்ஃபி ராகுல்

அண்மையில், மூன்று நாள்கள் தொடர்ச்சியாக ராகுல், குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும், இளைஞர்களுடன் கலந்துரையாடுவது, அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வது என்று புதிய பாணியில் ராகுல் அசத்துகிறார்.

சாலை ஓரங்களில் உள்ள தாபாக்களில் சாப்பிடுகிறார். திடீரென காரில் இருந்து இறங்கி, மாணவர்கள், சிறுவர்களுடன் பேசுகிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார். குஜராத் தேர்தலுக்காக சிறப்புக் கவனம் எடுத்து, ராகுலின் ட்விட்டர் பக்கத்தை காங்கிரஸ் கட்சியினர் கையாண்டு வருகின்றனர். அவரது ட்விட்டர் கருத்துகள் வைரல் ஆகின்றன. குஜராத்தில் கவனம் பெறுகின்றன. குஜராத்தின் 22 ஆண்டு பி.ஜே.பி ஆட்சிக்கு எதிரான ராகுலின் விமர்சனங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதெல்லாம் சரி இந்தத் தேர்தல் விநோதங்கள் வாக்குகளாக மாறுமா?

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் டெல்லி மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த ஹர்த்திக் படேல் உள்ளிட்ட சிலருக்கும், சில இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பதால், வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுகிறது என்கிறார்கள்.

தலித் தலைவர்களில் ஒருவரான ஜிக்னேஷ் மேவானி, பி.ஜே.பி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அவர் போட்டியிடவில்லை. ஹர்த்திக் படேலுக்கு எதிராக ஒரு பாலியல் சி.டி-யை பி.ஜே.பி-யினர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து பிரசாரத்தில் பேசும் எதிர்க்கட்சியினர், "வளர்ச்சி பற்றிப் பேசும் பி.ஜே.பி இப்போது பாலியல் சி.டி பற்றித்தான் பேசுகிறது“ என்று சொல்கின்றனர்.



Trending Articles

Sponsored