“தேசிய மனித உரிமை ஆணையம் பல் பிடுங்கப்பட்ட புலியான கதை!” - அ.மார்க்ஸ்Sponsoredச்ச நீதிமன்றத்தில் சமீபத்திய வழக்கொன்றில், ‘தான் ஒரு பல் பிடுங்கப்பட்ட புலி’ என தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிதாபமாக ஒப்புக்  கொண்டுள்ளது. உலகமயம் மற்றும் 'காட் ஒப்பந்தம்' ஆகியவற்றின் ஒரு அங்கமாக ஒவ்வொரு நாட்டிலும் இப்படியான ஒரு மனித உரிமை அமைப்பு உருவாக்குவது நிபந்தனையாக்கப்பட்டது. மற்றெல்லா கொடூரமான நிபந்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டபோது, இதை மட்டும் ஏற்க முடியாதென இரண்டு நாடுகள் தாண்டிக் குதித்தது யாருக்கேனும் நினைவிருக்கலாம். அவை நரசிம்மாராவை அப்போது பிரதமராகக் கொண்டிருந்த இந்தியாவும், துங்கு அப்துல் ரஹ்மானின் மலேசியாவும் தான். ஆனால், இறுதியில் இந்த இருநாடுகளும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. 'இதெல்லாம் சும்மா ஒரு சடங்குதான்' என நிபந்தனை விதித்தவர்களும், நிபந்தனையை எதிர்த்தவர்களும் கண்ணடித்துக் கொண்டதையொட்டி பிரச்னை சுமுகமாக முடிந்தது.

அதன்பின் என்ன நடந்தது? எங்களைப் போன்ற மனித உரிமை அமைப்புகள் உரிமை மீறல்கள் குறித்து ஏதும் இந்த மத்திய, மாநில மனித உரிமை ஆணையங்களிடம் புகார் அளித்தால் ஒரு மூன்று மாதம் கழித்து உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு ஏட்டு தேடி வருவார். “சார், ஏதோ ஒரு தபால் வந்திருக்கு. அதுக்கு வந்து ஒரு பதில் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க..” என்பார். போய்ப் பார்த்தால் ‘தேசிய மனித உரிமை ஆணையம்’ (NHRC) அல்லது மாநில மனித உரிமை ஆணையத்திலிருந்து (SHRC) புகார் அளித்த எங்கள் அமைப்பு உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு கடிதம் வந்திருக்கும். நாங்கள் அந்தப் பிரச்னையின் அன்றைய நிலைகுறித்து ஏதாவது எழுதித் தந்தால், கதை அத்தோடு முடியும். அவ்வளவுதான். 

Sponsored


ஒருமுறை தி.மு.க. ஆட்சியின்போது ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தின்கீழ், அன்றைய சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், சில நடவடிக்கைகளை  மேற்கொண்டார். வீடின்றி இரவில் சென்னையில் பிளாட்ஃபாரங்களிலும், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களிலும் தூங்கிக் கொண்டுள்ள பிச்சைக்காரர்கள், அன்றாடக் கூலிகள் ஆகியோர் காவல்துறையால் பிடித்துச்செல்லப்பட்டு முதலில் ராயப்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அடைக்கப்பட்டனர். பிறகு அவர்களில் பலர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநோய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மிகச் சிலரே மனநோய் அடையாளங்கள் உள்ளவர்கள். பலர் அப்படி எதுவும் இல்லாதவர்கள். மனநோய் இல்லாதவர்களை மன நோயாளிகளுடன் மருத்துவமனையில் அடைப்பது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல, அது அவர்களையும் மனநோயாளிகளாக மாற்றும் கொடுமையில் முடியும். இதைக் கேள்விப்பட்டு, நாங்கள் சென்று ஆராய்ந்தபோது அது உண்மை எனத் தெரிந்தது. எங்களின் அறிக்கை பத்திரிகைகளில் வந்தபோது தேசிய மனித உரிமை ஆணையம், அதை தன்னிச்சையாக எடுத்துக்கொண்டு, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. 

Sponsored


இதை அறிந்து, நாங்கள் மீண்டும் அன்றைய நிலைமை குறித்து “அப்டேட்” செய்ய ஒரு குழு அமைத்து விசாரித்தபோது மேயர் எங்களைப் பார்த்துச் சீறினார். 'நாங்கள் இன்னும் நிலைமை சீராகவில்லை' என்பது குறித்து அறிக்கை வெளியிட்டோம். ஆணையத்திற்கும் அனுப்பினோம். அரசுத்தரப்பில் வந்த விளக்கத்தை மட்டும் ஏற்று பிரச்னையை சுமுகமாக முடித்துக் கொண்டது தேசிய மனித உரிமை ஆணையம். இப்படி நிறையச் சொல்ல முடியும். பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளான மிகச் சில வழக்குகளில் மட்டும் NHRC சார்பில் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொற்ப அளவு இழப்பீடு அளிக்கப்பட்டதுண்டு. ஆனால் அவை NHRC முன் வந்த புகார்களில் சுமார் ஒரு சதவிகித அளவுகூட இருக்காது என்பது என் கணிப்பு. 

அதோடு, மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் என்பது பிரச்னையின் ஒரு அம்சம் மட்டுமே. மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படுதல் அதன் இன்னொரு பக்கம். அந்த வகையில் NHRC ஒன்றையும் செய்ததில்லை. ஏனெனில், மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான குற்றவாளிகளில் மிகப் பெரும்பான்மையோர் காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர்தான்.

அதுமட்டுமல்ல. ஒரு உரிமை மீறல் நடந்திருக்கும்போது, அது NHRC-யின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அது தன் அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தி, அதைத் தடுக்க முனைந்ததும் இல்லை. நவம்பர் 15, 2017 தேதியிட்ட ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் “மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீதான தாக்குதல்களைக் கவனப்படுத்துவதற்கான அமைப்பு” (Human Rights Defenders Alert – HRDA) என்பதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஹென்றி ஜேக்கப்பின் Human Rights and Wrongs என்னும் கட்டுரை வந்துள்ளது. அதில், " 'ஒரு பல் பிடுங்கப்பட்ட புலி' எனப் பரிதாபமாக NHRC புலம்பியுள்ளதைப் பார்த்து நாம் அனுதாபம் மட்டுமே பட இயலும்" என்கிறார் ஜேக்கப்.

அப்படி அது சிணுங்கியுள்ளது நியாயமாக இருக்கலாம். ஆனால், அதற்கு வழங்கப்பட்டுள்ள அந்தக் குறுகிய அதிகாரத்தைக்கூட, அது எந்த அளவுக்குப் பயன்படுத்தியுள்ளது என வினவுகிறார் அவர். தேசிய அளவிலான மனித உரிமை  அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து மதிப்பிடுவதற்கான ஒரு பன்னாட்டு அமைப்பின் முன் சென்ற வாரம், நமது தேசிய மனித உரிமை ஆணையம் குறித்து முன்வைக்கப்பட்ட உண்மைகள், 'அது எப்படி ஒரு பல்லற்ற புலி எனும் நிலையிலிருந்து ஒரு உயிரற்ற உடலாகச் சீரழிந்துள்ளது' என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளன.

சென்ற ஆண்டு NHRC முன் வந்த வழக்கொன்றில், அது எப்படி நடந்து கொண்டது எனச் சுருக்கமாகப் பார்ப்போம். காஷ்மீரைச் சேர்ந்த ஒரு

மனித உரிமைப் போராளி குர்ரம் பர்வேஸ். செப்டம்பர் 14, 2016-ல், அவர் ஜெனிவா செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது, அவர் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அவையின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திற்குச் செல்ல இருந்தார். அதுமட்டுமல்ல; அவர் காஷ்மீருக்குத் திரும்பிச் சென்றபோது, ஶ்ரீநகரில் அவர் கைது செய்யப்பட்டர். காஷ்மீரின் கொடிய ஆள்தூக்கிச் சட்டமான Public Safety Act (PSA) அவர் மீது பிரயோகிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்படித் தன்னார்வ அமைப்பினர் மற்றும் மனித உரிமைப் போராளிகள், உலக அளவிலான மாநாடுகளில் கலந்து கொள்ளச் செல்வதை அரசு தடுப்பதைக் கண்டித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 1915-ல் ‘கிரீன் பீஸ்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பாக, பிரியா பிள்ளை என்பவர் லண்டனில் நடக்க இருந்த ஒரு மனித உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி விமான நிலையத்திற்குச் சென்றபோது, அங்கு அவர் தடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக நீதி கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தை அவர் அணுகியபோது நீதிபதி ராஜீவ் ஷக்தேர், “பேச்சுரிமை என்பது விமர்சனத்தையும் உள்ளடக்கியது. அரசால் அதைச் செரிக்க இயலாமல் இருக்கலாம். அதற்காக மாற்றுக் கருத்துக்களை நசுக்க முடியாது” எனக் கண்டித்ததோடு, அவரது பாஸ்போர்ட்டில் எழுதியிருந்த குறிப்புகளை அழிக்கச் சொல்லியும், அரசின் பதிவுகளில் பிரியா பற்றிய குறிப்புகளை நீக்கச் சொல்லியும், அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை சிறிதும் கண்டுகொள்ளாமல், இப்போது மீண்டும் குர்ரம் பர்வேஸ் விமான நிலையத்தில் தடுக்கப்பட்டது மட்டுமின்றி, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். 

அடுத்தநாள் (செப்டம்பர் 16, 2016) மேலே குறிப்பிட்ட HRDA அமைப்பு தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி, இப்பிரச்சினையில் தலையிட்டு நீதியை நிலைநாட்டுமாறு வேண்டிக் கொண்டது. தேசிய மனித உரிமை ஆணையமும் ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறைத் தலைவர் மற்றும் டெல்லியில் உள்ள ‘அயல்நாட்டவருக்கான பிராந்தியப் பதிவு அலுவலர்’ (Foreigners’ Regional Registration Office) ஆகியோரிடம் நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோரியது. எனினும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அயலகப் பயணம் தொடர்பான அலுவலகத்திடம் (Bureau of Immigration) எந்த விளக்கத்தையும் ஆணையம் கோரவில்லை. 

மூன்று மாதங்களுக்குப் பின்பே NHRC-யின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. அதுவும் யாரிடம் கேள்வி கேட்கப்பட்டதோ அவர்கள் பதிலளிக்கவில்லை. உளவுத்துறையின் (IB) துணை அதிகாரி ஒருவரிடமிருந்துதான் பதில் வந்தது. அதில் வழக்கம்போல குர்ரம் பர்வேஸ், பிரிவினைவாதிகளுடன் தொடர்புள்ளவர் என்றும், வெளிநாடு செல்ல அவர் அனுமதிக்கப்பட்டால் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் உலக அரங்கில் பேசுவார் எனவும், அவர் மீது நான்கு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பதில் சொல்லப்பட்டது. மனித உரிமை ஆணையம், இந்தப் பதிலை ‘ரகசியம்’ எனச் சொல்லி, புகார் அளித்த HRDA நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளாததோடு, ஏப்ரல் 19, 2016 அன்று அந்தக் கோப்பை அத்தோடு மூடி கிடப்பில் போட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகவே என்ன நடந்தது என்பது பின்னர் தெரியவந்தது.

குர்ரம் பர்வேசை முடக்கிச் சிறையில் அடைப்பதற்காகப் போடப்பட்ட அந்த நான்கு கிரிமினல் வழக்குகளும் “சட்ட விரோதமானவை” எனவும், “ஆதாரமற்றவை” எனவும் கடந்த டிசம்பரில், ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் சென்ற செப்டம்பர் 16, 2016 அன்று ஐ.நா. அவையால் அனுப்பப்பட்ட இரண்டு சிறப்பு நடவடிக்கைகள், குர்ரம் மீதான இந்த நடவடிக்கைக்காக இந்திய அரசிடம் தன் கவலையைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதான் இன்று இந்தியாவில் கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றின் நிலை. தேசிய மனித உரிமை ஆணையம் என்பது அரசின் இந்த மீறல்களை நியாயப்படுத்திக் கொள்ளும் ஒரு கருவியாகத்தான் உள்ளனவே ஒழிய, அவற்றால் எந்த உருப்படியான பயன்களும் கிடையாது. இதற்குத் தோதாகத்தான் இந்தப் பெரும் பொறுப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமிப்பது என்பதை அரசு விதியாக வைத்துள்ளது.Trending Articles

Sponsored