"செப். 22-ல் போயஸ்கார்டன் சி.சி.டி.வி. செயல்பட்டதா?" - ஆறுமுகசாமி ஆணையத்திடம் அஃபிடவிட் தாக்கல்!Sponsoredமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள்கள் கழித்து, டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களும் தெரிவித்ததைத் தொடர்ந்து, மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனுக்காக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலசமகாலில் அலுவலகம் அமைக்கப்பட்டு, நீதிபதி ஆறுமுகசாமி தன் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

Sponsored


"ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்கள் தெரிந்தோர், பிரமாணப் பத்திரங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யலாம்" என நீதிபதி தெரிவித்ததுடன், அதற்கான அறிவிக்கையும் பத்திரிகைகளில் வெளியானது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரான மாதவன், முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் மற்றும் தி.மு.க மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் டாக்டர் சரவணன் என ஏராளமானோர் அனுப்பிய பிரமாண பத்திரங்களை விசாரணை கமிஷனுக்கு வந்து சேர்ந்தன.

Sponsored


தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரான ஆனூர் ஜெகதீசன் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர் இவர். மூன்று முறை எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளதால், எம்.ஜி.ஆர் பற்றியும், ஜெயலலிதா பற்றியும் அறிந்தவர். அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணபத்திரத்தில், "1980-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா, அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ராஜ்யசபா எம்.பி-யாகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின், கட்சி பிரிந்த நேரத்தில் நான் ஜானகியோடு இருந்தேன். பின்னர், அ.தி.மு.க. ஒரே கட்சியாக இணைந்தபோது மீண்டும் ஜெயலலிதாவைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது. 1984-ம் ஆண்டிற்குப் பிறகே, ஜெயலிதாவுக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்தது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் உணவில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளுமாறு,அங்குள்ள சமையல்காரர்களுக்குத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அந்தக் காலங்களில் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த காலங்களில்கூட அவர் தன் உடல்நலனில் கவனமாகத்தான் இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, சசிகலா குடும்பம் அவருடன் சேர்ந்தது. அப்போது ஜெயலலிதா ஒதுக்கியிருந்த உணவெல்லாம் அவருக்கு வழங்கப்பட்டது. அதனால், அவருடைய உடல் எடையும், சர்க்கரையின் அளவும் அதிகரித்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதி என்ன நடந்தது என்பது தெரியவில்லை. '74 நாள்கள் அவருக்கு என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது? அத்தனை நாள்கள் மருத்துவமனையில் நன்றாக இருந்தவருக்கு டிசம்பர் 5-ம் தேதி என்ன ஆனது?' என்பதை அவருடன் இருந்தவர்களும், மருத்துவமனை அதிகாரிகளும்தான் தெரிவிக்க வேண்டும். 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதிவரை ஏன் அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை? ஒருவேளை அவரை யாராவது அடித்தார்களா? அதனால் அவரின் மூளை பாதிக்கப்பட்டதா?

சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவைப் பார்க்க மருத்துவமனைக்கு உள்ளே யாரையும் அனுமதிக்காததற்கு காரணம் என்ன? என்ன மாதிரியான மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டன?

பிரிட்டன் டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆகியோரின் மருத்துவ அறிக்கைகளில் சொல்லப்பட்டிருப்பது என்ன? அந்த மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதா வீட்டின் சமையல்காரர்கள் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும்" என்பன போன்ற பல கேள்விகளுடன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஜெ. தீபாவின் கணவர் மாதவனும் விசாரணை ஆணையத்தின் முன் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக 19 சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளான செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் வேலைசெய்ததா என்பதை விசாரிக்க வேண்டும். மேலும், சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், போயஸ் கார்டன் வந்ததற்கும் அப்போலோ மருத்துவமனையில் முழு நேரமும் அவர்கள் இருந்ததற்கான காரணத்தையும் விசாரிக்க வேண்டும். ஜெயலிலாதவைச் சந்திக்க வந்த அனைத்துத் தலைவர்களையும் விசாரிக்கவேண்டும். 'ஜெயலலிதா குணமாகிவிட்டார்' என அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடமும் விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ இருப்பதாக சசிகலாவின் உறவினர்கள்  சொல்கிறார்கள். அப்படியானால், அதை ஏன் வெளியிடவில்லை என்பது பற்றி விசாரிக்க வேண்டும்" உள்ளிட்ட சந்தேகங்களை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க. மருத்துவர் அணி மாநில துணைத்தலைவர் டாக்டர் சரவணன், மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது பெறப்பட்ட அவரின் கைரேகையில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் தன் மனுவில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகளுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனவே, அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி, பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ், சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கைரேகைக்குச் சான்றளித்த டாக்டர் பாலாஜி, அமைச்சர் விஜயபாஸ்கர், மதுசூதனன், பொன்னையன், சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும். டாக்டர் என்ற முறையில், அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய என்னை அனுமதிக்க வேண்டும். ஜெயலலிதாவின் கைரேகையில் உயிரோட்டம் இல்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்குவதற்காக வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் கைரேகை, அவர் இறந்த பிறகு வைக்கப்பட்ட கைரேகைதான் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால், கைரேகை பற்றிய தகவல்களை விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதுபோன்று, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை பலரும்  விசாரணை கமிஷன் முன் அஃபிடவிட்டுகளாகத் தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி ஆறுமுகசாமி, இத்தகைய கேள்விகளையும், சந்தேகங்களையும் தீர்த்துவைப்பதுடன், ஜெயலலிதா மரணத்தில் நீடித்துவரும் மர்மங்களை விலக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.Trending Articles

Sponsored