"இடிக்கப்படவிருக்கும் பாடிக்குப்பம்! சாமியை வேண்டும் மக்களின் குரல் ஆசாமிகளை எட்டுமா? " #VikatanExclusive



Sponsored



ரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம்; சென்னையின் பழைமையான அடையாளங்களில் ஒன்றான ரோகிணி தியேட்டர்; இவற்றின் பின்னால் அமைந்திருக்கிறது தற்போதைய கார்ப்பரேட் சென்னை அறிந்திருக்காத பாடிக்குப்பம். அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ்வரும் இந்தப் பகுதியில் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. 2000 கோடி ரூபாய் செலவில் அரசு செயல்படுத்திவரும் கூவம் ஆறு மீட்டுருவாக்கத் திட்டத்தின்கீழ் ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகள் அண்மைக்காலமாக அகற்றப்பட்டுவரும் நிலையில்... இந்தப் பாடிக்குப்பம் பகுதியும், 'ஆக்கிரமிப்பு' என்கிற அடிப்படையில் எந்நேரமும் அகற்றப்படக் காத்திருக்கிறது.

அங்கிருந்து அகற்றப்படும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குச் சென்னைக்கு வெளியே இருக்கும் பெரும்பாக்கம் பகுதியில் வீடுகள் தரப்படுவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், அங்கே செல்ல மறுத்துவருகிறார்கள் பகுதி மக்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணமும் மறுக்க இயலாததாக இருக்கிறது. 

Sponsored


Sponsored


அந்தப் பகுதி மக்களுக்காகத் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியைப் படிப்பகமாகக் கட்டிக் கொடுத்திருக்கும் வீரமுத்து கூறுகையில், ''எனக்கு இப்போது வயது 40. அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய அப்பா இந்தப் பகுதியில் குடியேறினார். அவர் என்னை முழுக்கமுழுக்க வளர்த்தது இந்த இடத்தில்தான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்திலிருந்து அதிகாரிகள் சிலர் வந்து சர்வே எடுத்துச் சென்றார்கள். இந்தப் பகுதி கூவம் ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், அதனால் நாங்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து காலி செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். எங்களுக்கான வீடுகள் எங்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிற விவரத்தை இன்றுவரை அவர்கள் சரியாகச் சொல்லவில்லை. பெரும்பாக்கத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் மட்டும் கிடைத்தது. நாங்கள் இங்கே அம்பத்தூர் தொகுதியின் கீழ்வரும் அத்திப்பட்டியிலேயே, கக்கன்ஜி நகர்ப் பகுதி மக்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் குடிசைமாற்று வாரியக் கட்டடத்தில் இருக்கும் வீடுகளைக் கேட்டோம். அது தொடர்பாக எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி, குடிசைமாற்று வாரியம் மற்றும் முதல்வருக்கான தனிசெல் என அத்தனைக்கும் சென்று மனு அளித்துவிட்டோம். ஆனால், இத்தனை மாதங்களில் அது தொடர்பான எந்த விடையும் கிடைக்கவில்லை. எங்கள் சட்டமன்ற உறுப்பினரும், 'உங்களுக்காகத்தான் பேசுகிறேன்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறார். அதிலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எங்கள் பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம் என்கிற நிலையில் தற்போது இருக்கிறது. ஏற்கெனவே சிலர் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் வீடுகளுக்கு வாடகைக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். வாடகை மாதம் 1,500 ரூபாய் இருந்தது. மக்களின் டிமாண்ட் இப்போது அதிகரித்திருப்பதால், 3,500 ரூபாய் ஆகிவிட்டது. அவ்வளவு ரூபாய் எங்களால் தரமுடியாது என்பதால், எங்கே செல்வது என்று தெரியாமல் மற்ற அனைவரும் மூட்டைமுடிச்சுகளுடன் இங்கேயே அமர்ந்திருக்கிறோம்'' என்கிறார் குரல் தழுதழுக்க.

அந்தப் பகுதி மக்கள் பெரும்பாலும் கோயம்பேடு மார்க்கெட் கூலி வேலையை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்கள். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் லட்சுமணன் கூறுகையில், ''இங்கே இருக்கும் மக்களில் சிலர் மார்க்கெட்டில் காய்கறி மூட்டைகள் தூக்குகிறோம். இரவு 12 மணிக்கு மார்க்கெட் சென்று லாரிகளிலிருந்து மூட்டைகளை இறக்கிவைப்போம். பெண்கள் விடியற்காலை மூன்று மணிக்குக் கிளம்பி மார்க்கெட் வந்து கீரை விற்பது மற்றும் பூக்கட்டும் வேலைகளைச் செய்வார்கள். முதியவர்கள்கூட வீட்டில் அமர மாட்டார்கள். காலை ஆறு மணிக்கெல்லாம் மார்க்கெட் வந்து ஏதேனும் ஒரு கூலி வேலையில் ஈடுபடுவார்கள். சிலர் அருகிலேயே சித்தாள் வேலைக்கும் வீட்டு வேலைக்கும் செல்கிறார்கள். எங்களுக்கு, ஒருவேளை இங்கிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரும்பாக்கத்தில் வீடு கொடுக்கப்பட்டால்... இரவு 12 மணிக்கு மூட்டை தூக்க வரவேண்டிய வேலைக்கு மாலை 6 மணிக்கே போக்குவரத்து நெரிசலுக்கு முன்பு அங்கிருந்து கிளம்ப வேண்டும். அரைநாள் எங்களுக்குப் பயணத்திலேயே கழிந்துவிடும். முதியவர்களால் தினமும் இவ்வளவு தூரம் பயணப்பட்டும் வரமுடியாது. அதுவே இங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அயப்பாக்கத்தில் வீடுகள் கொடுக்கப்பட்டால், எங்களுக்குப் பயணம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். எங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. ஆனால், நாங்கள் இது தொடர்பாகக் கோரிக்கை வைத்ததற்கு அங்கிருக்கும் 1,300 வீடுகளும் கக்கன்ஜி நகர்ப் பகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், கக்கன்ஜி நகர்ப் பகுதியில் மொத்தம் 400 குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில், வெறும் 396 குடும்பங்களுக்கு மட்டுமே தற்போது அத்திப்பட்டு பகுதியில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மீதமிருக்கும் வீடுகளில் வெறும் 300 மட்டும்தான் எங்களுக்காகக் கேட்கிறோம். ஆனால், தர மறுக்கிறார்கள். காரணமும் சரிவரத் தெரியவில்லை'' என்கிறார்.

அரசு கைவிரித்த நிலையில் கடவுளாவது தங்களைக் காப்பாற்றாதா என்கிற ஏக்கத்தில் நாம் சந்திக்கச் சென்றபோது, அம்மனிடம் முறையிடும் நூதனப் போராட்டத்தை  நடத்திக்கொண்டிருந்தார்கள் பாடிக்குப்பம் பகுதி மக்கள். முரணாக, அந்த அம்மனே தன்னை யாரும் காப்பாற்றமாட்டார்களா என்கிற நிலையில்தான் இருக்கிறாள். 'ஆக்கிரமிப்பு' என்பதால், வீடுகளுடன் சேர்த்து அந்த அம்மன் கோயிலும் இடிக்கப்படவிருக்கிறது. அம்மனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுக்கொண்டிருந்த செல்வி, ''தினம் வாடகைக்கு வீடு தேடி அலுத்துவிட்டேன். என்னையும் மீறி அழுகை வருகிறது. என் மகன் குழந்தையாக இருக்கும்போது அவனைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு இந்தப் பகுதிக்கு வந்தேன். இப்போது அவன் பத்தாம் வகுப்புப் படிக்கிறான். எங்களை இடம் மாற்றினால் அவனுடைய படிப்பு பாதிக்கும். அவனை மாதிரி நிறைய பிள்ளைகள் இந்தச் சிக்கலால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் பாதிக்கப்படுவார்கள். நாங்கள்தான் படிக்காமலேயே இருந்துவிட்டோம். எங்கள் பிள்ளைகளாவது படித்து மரியாதையோடு வாழட்டும் என்கிற கனவும் தற்போது இந்தக் கட்டடங்களோடு தரைமட்டமாகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எங்கள் பிள்ளைகளுக்காகவாவது அத்திப்பட்டிலேயே இடம் தரச் சொல்லுங்கள்" என்று கதறி அழுகிறார்.

தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டரிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பியதற்கு, ''அவர்கள் சொல்வதுபோல எந்தவித செயல்பாடும் நடக்காமல் இல்லை. என் தொகுதி மக்கள் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் கட்சியினர் பெரும்பாலானவர்கள் அந்தப் பகுதியில் வசிக்கிறார்கள். அதனால், முதல்வரிடம் இது தொடர்பாகப் பேசியிருக்கிறேன். குடிசைமாற்று வாரியம் ஏற்கெனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கக்கன்ஜி நகர்ப் பகுதி மக்களுக்கு ஒதுக்கியுள்ளது. வடிகால் பிரச்னையால் இன்னும் அந்தப் பகுதிக்கு மக்கள் வராமல் இருக்கிறார்கள். எங்கள் தொகுதி மக்களுக்கு வேறு ஏதாவது வழிவகை செய்யவேண்டும் என்பதால், பாடிக்குப்பம் பகுதியை இடிக்கவேண்டாம் என்று தற்காலிகமாகச் சிலநாள்கள் அவகாசம் கேட்டிருக்கிறேன்''  என்றார். 

சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில், ''கூவம் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி

 சி.சி.ஆர்.டி. என்னும் கூவம் நதி மீட்டுருவாக்கத்தின்கீழ் நடைபெற்று வருகிறது. இதனை முழுக்கமுழுக்கச் சி.சி.ஆர்.டி-க்கு என்று அமைக்கப்பட்ட குழுதான் முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி திடீர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பெரும்பாக்கம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை ஆக்கிரமிப்பு இடங்கள் தொடர்பாகச் சர்வே எடுத்துத் தருவது மட்டுமே எங்களது பணி. அதைத் தாண்டி நாங்கள் எதுவும் செய்யமுடியாது. ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருக்கும் மக்கள் கொடுத்த மனுக்களை மட்டும் பரிசீலனைக்காக தொடர்புடைய துறைக்கு அனுப்பியிருக்கிறேன். அதை மட்டுமே என்னால் செய்யமுடியும்’' என்றார். 

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத் தரப்பிடம் பாடிக்குப்பம் மக்கள் தொடர்பாகப் பேசுவதற்கு தொடர்புகொண்டபோது, அந்த வாரிய நிர்வாக இயக்குநர் மீட்டிங்கில் இருப்பதாகக் கூறி இரண்டுமுறை அழைப்பு மறுக்கப்பட்டது. 

ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வசித்துவரும் மக்களுக்காகவும் சென்னையின் நதிநீரோட்டம் தொடர்பாகவும் தொடர்ந்து இயங்கிவரும் வழக்கறிஞர் பாலாஜி கூறுகையில், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவது 2015 வெள்ளத்துக்குப் பிறகுதான் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கூவம் மீட்புக் குழுவைப் பொறுத்தவரை கரையோரக் குடிசைகள்தான் ஆற்றின் நீரோட்டத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அறிக்கையின்படி பெரும்பாலும் காம்பவுண்ட் சுவர்கள்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. இது தொடர்பான தகவல்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்திலேயே கிடைக்கிறது. அதனால்தான் ஜெயலலிதா ஆட்சியில்கூட ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டிருந்த பெரும்பாலான கல்லூரிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், இந்த ஆட்சியில் அது வேறாக இருக்கிறது. குடிசைகளை அகற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக அவர்களைக் குடியமர்த்துகிறார்கள். ஆனால், கரையோரம் இருக்கும் பெரும் கட்டடங்கள் அப்படியேதான் இருக்கின்றன” என்கிறார். 

அவர் கூறுவதுபோலவே கூவம் ஆற்றின் ஒரு கரையில் இருக்கும்  பாடிக்குப்பம் பகுதி மட்டும்தான் தற்போது அகற்றப்பட இருக்கிறது. ஆனால், மறுகரையில் இருக்கும் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குத் தொடர்புடைய இடமும், பிரபல ஹோட்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான இடமும் ஆக்கிரமிப்பாளர்களாகச் சேர்க்கப்படவில்லை.

’காணிநிலம் வேண்டும் பராசக்தி!’ என சாமியை வேண்டும் அவர்களுடைய குரல் இந்த ஆசாமிகளை எட்டுமா?



Trending Articles

Sponsored