'இந்தியா கிரேட்!' இவான்கா.. குட்டிக்கதை மோடி.. சின்னம்மா சுஷ்மா... ஹைதராபாத் ஹைலைட்ஸ்! #Hyderabad #IvankaTrumpSponsoredஹைதராபாத்தில் துவங்கிய உலக தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபரின் மகளும், ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப் இந்தியா வந்தடைந்தார். இவருக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பேசிய இவான்கா பெண்கள் மேம்பாடு குறித்தும் மோடியின் செயல்பாடு குறித்தும் பேசினார். அதன் பின்னர் பிரதமர் மோடியுடன் இரவு விருந்தில் கலந்துகொண்டார்.

என்ன பேசினார் இவான்கா?

Sponsored


''முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு நன்றி.

Sponsored


அமெரிக்கா மற்றும் இங்கு வந்திருக்கும் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களின் சார்பாக உலக தொழில்முனைவோர் மாநாட்டை ஹைதராபாத்தில் நடத்துவதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நகரம் இந்தியாவின் புதுமைகளுக்கான மையமாக மாறிவருகிறது. மேலும், இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி. நீங்கள் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கட்டமைத்துள்ளீர்கள், ஜனநாயகத்தின் வழிகாட்டியாக இருக்கிறீர்கள். உலகின் நம்பிக்கையாக இருக்கிறீர்கள். 

உங்கள் சாதனைகள் அனைத்தும் அளப்பறியது. உங்களது குழந்தைப் பருவத்தில் நீங்கள் தேநீர் விற்றது தொடங்கி இன்று இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வரை அனைத்திலும் நீங்கள் மாற்றம் என்ற விஷயத்தை நிருபித்துள்ளீர்கள். தற்போது அதை 100 கோடி பேரின் நம்பிக்கையாகவும் மாற்றியுள்ளீர்கள். நன்றி.

இந்திய மக்கள் அனைவருக்கும் 70 ஆண்டுகால சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும், உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாகவும் உள்ளது.

இந்தியர்களது கடின உழைப்பு, தொழில்முனைவோர் திறன் ஆகியவற்றால் இந்தியாவில் 13 கோடி பேரின் வறுமை போக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்பாடு. இது பிரதமர் மோடியின் தலைமையில் மேலும் வளரும். நீங்கள் அனைவரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் நடுத்தர குடும்பங்களை 50 கோடியாக உயர்த்த உதவ வேண்டும். 

நீங்கள் நாடு முழுவதும் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கியுள்ளீர்கள். உயிர்காக்கும் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் மருத்துவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களை உருவாக்குகிறீர்கள். உங்கள் நாட்டின் இன்ஜினீயர்கள் வானளாவிய கட்டடங்களை வடிவமைக்கிறார்கள். இந்திய விண்கலன்கள் நிலவுக்கும், செவ்வாய்க்கும் பயணிக்கின்றன. இந்தியர்கள் உலகை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறை. இது இருநாடுகளுக்கிடையேயான நட்பின் வலிமையைக் காட்டுகிறது. அதிபர் ட்ரம்ப் முன்னொரு முறை கூறியுள்ளார். இந்தியா வெள்ளை மாளிகையின் உற்ற நண்பன் என்று. 

ஹைதராபாத் மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுடன் கூடிய பழைமையான நகரம். உங்களது பிரியாணியை இன்று உங்களுடைய தொழில்நுட்ப அடையாளங்கள் மிஞ்சி விடுகின்றன, மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா இங்குள்ள பள்ளியில் படித்தவர். இன்னும் சில கிலோ மீட்டர் தொலைவில் டி- ஹப்பின் புதிய கிளை திறக்கப்படவுள்ளது. அதுதான் ஆசியாவின் மிகப்பெரிய இன்குபேட்டராக இருக்கப்போகிறது. 

முத்துக்களின் நகரத்தில் நிறைய தொழில்முனைவோர்கள், புதுமையாளர்களைக் காண்கிறேன். நாளைய இந்தியாவை பிரகாசமாக்கும் முகங்கள் இங்கு உள்ளன. 

இன்று நாம் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் தொழில்முனைவோரை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தொழில்முனைவோர்கள் பொருளாதாரத்தை சீரமைக்கிறார்கள். சமூகத்தை மேம்படுத்துகிறார்கள். வரலாற்றை மாற்றி எழுதுகிறார்கள்.

புதிய திட்டங்களால் இந்த சமூகத்தை வழிநடத்த வேண்டியது நம் கடமை. இங்குள்ளவர்களில் நிறைய பேரிடம் ஒரு சிறந்த ஐடியா இருக்கிறது. அது கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கைக்கு உதவ உள்ளது. இந்த வருட மாநாடு வருங்காலத்தில் '' அனைவருக்கும் சமஉரிமை, பெண்களுக்கு முன்னுரிமை' என்ற கருத்தின் அடிப்படையில் நடக்கிறது. மாநாட்டில் அதிகபட்சமாக பெண்கள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை.

ஒரு முன்னாள் தொழில்முனைவோராக, பணியாளராக மற்றும் ஆணாதிக்கத் துறையில் செயற்குழு உறுப்பினராக நான் இருந்திருக்கிறேன். பெண்கள் ஆண்களைவிட திறமையானவர்கள் என நிரூபிக்க அதிகம் உழைக்க வேண்டும். அதேசமயம் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். என் தந்தை தேர்தலில் வெற்ற பெற்றபின் நான் என் தொழிலை விட்டுவிட்டு நாட்டுக்கு பணியாற்ற ஆசைப்பட்டேன். எங்கள் ஆட்சியில் பெண்கள் ஆட்சியிலும், தங்கள் தொழிலிலும், குடும்பத்திலும் சிறந்து விளங்குவதற்கான சூழல் உள்ளது.

கடந்த பத்து வருடங்கள் பெண் தொழில்முனைவோர்கள் உலக அளவில் 10 சதவிகிதம் பேர் அதிகரித்துள்ளனர். இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 45 சதவிகித பெண்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இன்று அமெரிக்காவில் 1 கோடி பெண்கள் சொந்தமாக தொழில் செய்கின்றனர். அவர்கள் மூலம் மட்டும் 65 லட்சம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. பெண்களால் மட்டும் உலகின் ஜி.டி.பி ஆண்டுதோறும் 2 சதவிகிதம் உயர்கிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் 70 சதவிகித பெண்கள் சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். அமெரிக்காவில் பெண் தொழில்முனைவோர்கள் ஆண்டுதோறும் 300 மில்லியன் டாலரை கடனாகப் பெறுகிறார்கள். இந்த வருடம் மட்டும் அமெரிக்காவில் இவர்களுக்கான கடன் 500 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது 

நான் இந்த மாநாட்டுக்காக ஹைதராபாத் வரை வந்திருக்கும் அமெரிக்க தொழில்முனைவோர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் நான் பிரதமர் மோடியை பாரட்ட கடமைப்பட்டிருக்கிறேன். மனித வளம் இங்கு மேம்பட்டு உள்ளது. பாலின வேறுபாடு பாதியாக குறைத்தார். இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த மூன்று வருடங்களில் 150 டாலர் அதிகரிக்கும். 

(மாநாட்டுக்கு வந்துள்ள சில பெண் தொழில்முனைவோர்களைப் பாரட்டுகிறார்)

நீங்கள் பலரது வாழ்வாதரங்களை தீர்மானிக்கிறீர்கள். சமூகங்களுக்கு இணைப்பாக இருக்கிறீர்கள். புதிய வரலாற்றை உருவாக்கப்போகிறீர்கள். வருங்காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக கடினமாக உழைத்துக்கொண்டும். குழந்தைகள் கனவை நோக்கி பயணித்துக் கொண்டும் இருப்பது அவசியம். 

எதிர்காலத்தை நம்மால் சிறந்த நோக்கங்களோடு சிறப்பாக கட்டமைக்க முடியும். 

நன்றி.'' என முடித்தார் இவான்கா.


மோடி சொன்ன குட்டிக்கதை:

இந்தியா தான் தொழில்முனைவோரின் முன்னோடி. அன்றே மென்டார்ஷிப்பில் சிறந்து விளங்கியது. சக்ர சம்ஹிதாதான் ஆயுர்வேதத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது. யோகாவை உலகுக்கு சொல்லிக் கொடுத்ததே இந்தியாதான். இவ்வளவு ஏன் உலகமே பைனரி சிஸ்டத்தால் இயங்குகிறது அதில் பூஜ்ஜியம் இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என இந்தியர்களின் பெருமையை கூறும் முன்னோட்டங்களோடு தனது உரையை துவங்கினார் பிரதமர் மோடி

மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் மோடி,  ''இந்தியா தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், நாங்கள் ஓயவில்லை முதல் 50 இடங்களுக்கு வருவதே எங்கள் இலக்கு. முத்ரா திட்டம் மூலம் 9 கோடி பேருக்கு கடன்களை வழங்கியுள்ளோம், அதில் 7 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜன் தன் கணக்கு , டிஜிட்டல் இந்தியா, ஆதார் மூலமாக மக்களின் நிதி தேவைகளும், தொழில் முனையும் ஆர்வமும் வளர்க்கப்படுகிறது'' என்றார். 

மேலும், ''உலகம் முழுவதும் உள்ள தொழில்முனைவோர் நண்பர்களே, இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள். முதலீடு செய்யுங்கள். இந்தியாவின் வளர்ச்சி சரித்திரத்தில் இடம் பெறுங்கள்'' என்று கூறியுள்ளார். 

சின்னம்மா சுஷ்மா:

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசுகையில்  ''இவான்கா ட்ரம்பின் துடிதுடிப்பு இன்றைய தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கிறது. நிறைய பெண் தொழில்முனைவோர்கள் இவான்காவைப் பார்த்து தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி தெலங்கானா பழைமையும், புதுமையும் சரிவர கலந்த ஊர். நான் ''தெலங்கானாவின் சின்னம்மா'' என்று கூறியுள்ளார். சின்னம்மா என்றால் தெலுங்கில் தாயின் சகோதரி என்று பொருள்.

பல்வேறு தொழில்முனைவோர்களை அடையாளப்படுத்தி நடந்த இந்த மாநாட்டில் பல சாதனையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்காக பிச்சைக்காரர்கள் அகற்றப்பட்டது, ஆந்திராவுக்கு அனுமதி மறுப்பு என்பது போன்ற பல சர்ச்சைகளுக்கு நடுவே சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.  ட்ரம்ப் மகள் இவான்கா இன்று சார்மினாரை பார்வையிடுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு சில நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார் என்பதுதான் இவான்காவின் ப்ளான். அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின்பு ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து இந்தியாவில் நடக்கும் முக்கியமான கூட்டமாக இது இருந்துள்ளது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? ட்ரம்ப் பயணத்துக்கு இது முன்னோட்டம் என்ற பல செய்திகளை தாங்கி நிற்கிறது இந்த மாநாடு. Trending Articles

Sponsored