”மீனவரின் பெயர்தான் மெட்ராஸ் என்று ஆனதா?” - சென்னை பிறந்த கதை - பகுதி 1சென்னை மாநகரின் பழைய பெயர் மெட்ராஸ். மதராஸ், மதராசபட்டினம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதரேஸ்படான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ் என்றும் இந்த நகரம் பலவாறாக அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் என இங்கு வந்து வாழ்ந்துவிட்டுப் போன பல இனத்தவரும் அவரவர் நாக்கு வசதிக்கேற்ப இந்த நகரத்தின் பெயரை வளைத்து வளைத்து அழைத்திருக்கிறார்கள்.

Sponsored


ஆனால் இறுதியில் மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்ட ’மெட்ராஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜென்ட் விஜயநகர அரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னரிடமிருந்து வங்கக்கடலோரம் இருந்த பொட்டல் மணல்வெளியைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அங்கிருந்துதான் இந்த மாநகரத்தின் கதை தொடங்கியது. அங்கிருந்துதான் மெட்ராஸ் என்ற பெயரும் தொடங்கியது என்கிறார்கள். சந்திரகிரி மன்னர் எழுதித் தந்த சாசனத்திலேயே மதராசபட்டினம் என்ற பெயர் இடம்பெற்றிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஓர் ஆதாரம் மைலாப்பூரில் கிடைத்தது.

Sponsored


1927ஆம் ஆண்டு ஜூலை மாதம், மைலாப்பூரில் செயின்ட் லாசரஸ் தேவாலயம் கட்டுவதற்காக பழைய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டுமானப்பணி தொடங்கியது. அப்போது மண்ணுக்கு அடியிலிருந்து போர்த்துக்கீசிய எழுத்துகள் பொறித்த ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Sponsored


“இது மேனுவல் மாத்ரா மற்றும் அவரின் தாயாரின் கல்லறை,

வின்சென்ட் மாத்ரா மற்றும் லூசி பிரேக் ஆகியோரின் மகன். அவர்கள் இந்த தேவாலயத்தை தங்களின் சொந்தச் செலவில் 1637இல் கட்டினர்”

இதில் மாத்ரா என்று குறிப்பிடப்பட்டிருப்பது அப்போது இந்தப் பகுதியில் வசித்த ஒரு வசதியான போர்த்துக்கீசிய குடும்பத்தின் பெயர். இந்தப் பகுதியின் பல இடங்கள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததால், இந்தப் பகுதியே அவர்களின் பெயரில் மெட்ராஸ் என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.

1820இல் பண்டல ராமசாமி நாயுடு என்பவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் வருவாய் முறைகள் குறித்து எழுதிய ஆவணம் ஒன்றில் மெட்ராஸ் என்ற பெயருக்கு வேறொரு புதுக் காரணத்தைக் குறிப்பிடுகிறார். ராமசாமி நாயுடுவின் மூதாதையர்களில் ஒருவரான பேரி திம்மப்பாதான் பிரான்சிஸ் டே இந்த நிலத்தை உள்ளூர் அரசரிடமிருந்து பெறுவதற்கு உதவியாக இருந்தவர். அப்போது இந்த இடத்தில் மீனவக் குப்பம் ஒன்று இருந்தது. அந்தக் குப்பத்தின் தலைவர் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர். அவர் பெயர் மாதரேசன். அவர் தனது வாழைத்தோட்டம் இருந்த இடத்தை தர மறுத்து தகராறு செய்தார். அவரிடம் சமாதானம் பேசிய பேரி திம்மப்பா, இந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டப் போகிறார்கள், பின்னர் அந்த நகரத்திற்கு மாதரேசன்பட்டினம் என உங்கள் பெயரையே வைத்துவிடுகிறோம் என்று சொல்லி இடப் பிரச்னையைச் சுமுகமாக முடித்ததாக பண்டல ராமசாமி நாயுடு குறிப்பிடுகிறார்.

மாதரேசன் கிறிஸ்தவ மீனவர் என்பதை விட, போர்த்துக்கீசிய குடும்பமான மாத்ராவின் மேல் கொண்ட நன்றிக் கடன் காரணமாக தனது பெயரை மாதரேசன் என்று வைத்துக் கொண்டார் என்பதே சரி என வாதாடுகிறார்கள் சில ஆய்வாளர்கள். கோபால் என்பதை கோபாலன் என்று தமிழ்ப்படுத்துவது போல மாத்ரா என்பதை தமிழ்ப்படுத்தி மாதரேசன் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆங்கிலேய கவர்னரான தாமஸ் மன்றோவின் மீது கொண்ட அன்பினால் நிறைய பேர் தங்களின் குழந்தைகளுக்கு மன்றோலப்பா என்று பெயர் வைத்த வரலாறு எல்லாம் உண்டு. ஆக எப்படிப் பார்த்தாலும், மாத்ரா குடும்பமே மெட்ராஸ் என்ற பெயருக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

மெட்ராஸ் என்பதன் மற்றொரு பெயரான சென்னைப்பட்டினத்திற்கும் இப்படிப் பல பெயர்க் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆன்மிகத்தில் அதிக நாட்டம்கொண்ட பேரி திம்மப்பா இந்தப் பகுதியில் இரண்டு கோவில்கள் கட்ட வழிவகுத்தார். சென்ன கேவசப் பெருமாள் என விஷ்ணுவுக்கும், சென்ன மல்லீஸ்வரர் என சிவனுக்கும் கோவில்கள் கட்டினார். அப்படித்தான் சென்னை கேசவரும், சென்ன மல்லீஸ்வரரும் இருக்கும் பட்டினம் சென்னப்பட்டினம் என்று வழங்கப்பட ஆரம்பித்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

சென்னையின் பழைய கோவில்களில் முக்கியமானது காளிகாம்பாள் கோவில். முதலில் கோட்டைக்குள் இருந்த அம்மன் பின்னர்தான் தற்போது இருக்கும் தம்புசெட்டித் தெருவுக்கு இடம்மாறினாள். இந்த அம்மனுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், சென்னம்மன் என்று அழைக்கப்பட்டாள். சென்னம்மன் இருக்கும் இடம் சென்னை என்று மாறியதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். செம் அன்னை என்பதுதான் சென்னை ஆனது என்பது அவர்கள் வாதம்.

நீண்டகாலமாக மெட்ராஸ், சென்னை என இந்த நகரத்திற்கு இருபெயர்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருந்துவந்தன. பின்னர் 1996இல் தமிழக அரசு இந்த மாநகரின் பெயரை சென்னை என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இன்னும் அந்தப் பழைய மெட்ராஸ் பலருக்கும் நினைவுகளில் நிழலாடிக்கொண்டேதான் இருக்கிறது.Trending Articles

Sponsored