'ஊழல் செய்துதான் சொத்து சேர்த்தார் துணை முதல்வர்" ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் புகார் #vikatanexclusiveSponsoredஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ''சேகர் ரெட்டிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருடனான தொடர்பு குறித்து யார் வழக்குப் போட்டாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்'' என்றார். அதோடு இல்லாமல், ''திருப்பதியில் நேர்த்திக் கடன் செலுத்திவிட்டு வரும்போது போட்டோ மட்டுமே அவர் என்னுடன் எடுத்துக்கொண்டார். அவ்வளவே எனக்கும் அவருக்குமான தொடர்பு" என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் இவ்வாறு பேசிய சில நாள்களில், சேகர் ரெட்டியின் டைரி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டைரிதான் அரசியல் களத்தில் தற்போதைய ஹாட்.

அந்த டைரியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணம் குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்தச் செய்தி தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது. அதுமட்டுமல்லாமல், அதே டைரியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோருக்குப் பணம் கொடுக்கப்பட்ட விவரமும் அதில் எழுதப்பட்டிருந்தது.

Sponsored


இதனைத் தொடர்ந்து ஆங்கில ஊடகம் சில, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னணியை வெளியிட்டிருந்தது. அதில் எளிமையான குடும்பத்தில் பிறந்த பன்னீர்செல்வம் டீக்கடை வைக்க கடன் பெறமுடியாமல் தவித்த நிலை குறித்தும், அதன்பின்னர் ரியல் எஸ்டேட் அதிபர், அ.தி.மு.க அரசியலில் வளர்ச்சியடைந்தது உள்ளிட்ட  பல்வேறு தகவல்களை வெளியிட்டு அதிரவைத்தது.

Sponsored


இந்த நிலையில் 2006 முதல் 2017வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது அறப்போர் இயக்கம் புகார் கொடுத்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்திடம்  இந்தப் புகாரை அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்துள்ள சொத்து விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்களையும் அவர் வழங்கியுள்ளார். அது தொடர்பாக ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது, 

''2006 இலிருந்து 2017 வரை ஓ.பன்னீர்செல்வம் குவித்துள்ள சொத்து விவரங்கள் அடங்கிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்

கண்காணிப்பு இயக்குநரகத்திடம்   கொடுத்துள்ளோம். 2006 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில், 20 லட்சமே தன்னுடைய சொத்துக்கணக்கு எனக் கணக்குக் காட்டியவர் எப்படி 106 ஏக்கர் நிலத்தை வாங்கினார்? அந்த நிலம் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன்கள் பெயரில் உள்ளது. அதற்கான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளோம். மேலும் நான்கு மரைன் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் அவர்களுடைய மகன்கள் இயக்குநர்களாக இருந்து வருகின்றனர். 2008-லிருந்துதான் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் முழுவதும் எப்படி இந்த நிறுவனத்துக்குள் வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளோம்.

ஓ.பன்னீர்செல்வத்தின் பினாமியான சுப்புராஜ், பன்னீர்செல்வத்தின் ஏழு ஏக்கர் நிலத்தை விற்று அந்தப் பணத்தை பஞ்சாயத்துக்கு ஏன் கொடுத்தார்? அவருடைய பின்னணி என்ன? சொத்து விவரங்கள் போன்றவற்றை இந்த விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளோம். மேலும் அவருடைய பினாமிகளாக ஹரிச்சந்திரன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்தச் சொத்துகள் அனைத்தும் லஞ்சம், ஊழல் செய்து ஓ. பன்னீர்செல்வம் சேர்த்துள்ளவையே. அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துள்ளோம்'' என்றார் ஜெயராம் வெங்கடேசன் .

  இந்தப் புகாருக்காவது லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் நடவடிக்கை எடுக்குமா ? Trending Articles

Sponsored