பாரதியின் அரிய படைப்பை அடித்துச் சென்ற வெள்ளம்..! 2015 சென்னை மழையின் மீள் நினைவுகள் பகுதி-8Sponsoredழை, வெள்ளத்தின் சீற்றத்துக்கு சென்னை மக்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டனர் என்று வெளி உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மறுபதிப்புகள் காண முடியாத அரிய புத்தகங்களை 2015-ம் ஆண்டு டிசம்பர் மழை, வெள்ளம், கொள்ளையடித்துப் போய்விட்டது.

பாரதி எழுதிய கடிதம்

Sponsored


2015-ம் ஆண்டு டிசம்பர் பெரும்மழையும், அடையாறு ஆற்றின் வெள்ளமும் ஆயிரக்கணக்கான புத்தகங்களையும் புரட்டிப் போட்டுச் சென்றுள்ளது. பாரதியின் படைப்புகளை தேடித்தேடி பதிப்பித்து வரும் சீனி.விஸ்வநாதனின் வீடு சிஐடி நகரில் உள்ளது. அவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்த தில் அவர் வைத்திருந்த புத்தகங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 'செல்லமாளுக்கு பாரதி எழுதிய கடிதம்' உள்ளிட்ட அரிய படைப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளம் பாதித்தபோது அவரை சிலம்பொலி செல்லப்பன் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். அவர் கூறிய தகவலின் பேரிலேயே சீனி.விஸ்வநாதனுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது வெளியே தெரிந்திருக்கிறது. அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வைத்திருந்த புத்தகங்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டன.

Sponsored


25 கோடி ரூபாய் நஷ்டம்

தியாகராயர் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான பதிப்பகங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், விற்பனைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய புத்தகங்கள் பாதிக்கப்பட்டன. தியாகராயநகர், நந்தனம் சி.ஐ.டி.நகர் பகுதிகளை ஒட்டி இருந்த 70-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பாதிக்கப்பட்டன. ஶ்ரீ இந்து பப்ளிகேஷன், தமிழ்மண் பதிப்பகம், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன், கடலங்குடி
பப்ளிகேஷன், வானதி பதிப்பகம் (வாரன் சாலையில் உள்ள குடோன் பாதிப்பு), மணிமேகலை பிரசுரம், லிஃப்கோ பதிப்பகம், ராஜ்மோகன் பதிப்பகம், சந்தியா பதிப்பகம், தோழமை பதிப்பகம், கிழக்குப் பதிப்பகத்தின் ஷோரூம் ஆகியவைப் பாதிக்கப்பட்டன. பதிப்பகங்களுக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

பதிப்பகங்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டநிலையில், அதிலிருந்து மீண்டு வருவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. எனவே,  எப்போதும் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி சென்னையில் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படவில்லை. சில சிறிய பதிப்பகங்கள் மீண்டும் எழமுடியாத அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டன. மழை பாதிப்பைத் தொடர்ந்து  2016-ம் ஆண்டு மே-மாதம்தான் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது.

அரசு நூலகங்கள்...

புத்தகத்தை பணம் கொடுத்து வாங்க முடியாத, அதே நேரத்தில் படிப்பின் தாகத்தில் ஆழ்ந்தவர்களுக்கு வரமாக இருப்பது, அரசு நூலகங்கள்தான். சொந்தங்களை விட்டு, நட்புகளை விட்டு, சென்னையில் பிழைப்புக்காக அடைக்கலம் புகுந்தவர்களுக்கு, இளைப்பாறுதலையும், துன்பங்களின்போது அவர்களை மீட்டெடுப்பதிலும் முக்கியப்பங்கு வகிப்பது நூலகங்களும், அதில் இருக்கும் லட்சக்கணக்கான புத்தகங்களும்தாம். போட்டித்தேர்வுகளுக்குப் புத்தகங்களைப் பணம்கொடுத்து வாங்க முடியாதவர்கள், அணுகுவது நூலகங்களைத்தான்.

அரசு நூலகத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 22 நூலகங்கள் பாதிக்கப்பட்டன. அசோக் நகர் உள்ளிட்ட ஐந்து கிளை நூலகங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. 17 நூலகங்களில் 50 ஆயிரம் புத்தகங்களும், அசோக்நகர் உள்ளிட்ட 5 நூலகங்களில் நான்கரை லட்சம் புத்தகங்களும் சேதமடைந்தன.

சென்னை நகரின் மையப்பகுதியில் இருக்கும் அசோக் நகர் கிளை நூலகம், சென்னை நகரில் உள்ள பெரிய நூலகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு இரண்டு லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. நூலகத்தின் கீழ் தளத்தில், வாசகர்களுக்கு இரவல் கொடுக்கும் புத்தகங்களும், மாடியில் போட்டித்தேர்வுகளுக்கான குறிப்புதவி புத்தகங்களும் இருக்கின்றன.

ஒன்றரை லட்சம் புத்தகங்கள்

2015-ம் ஆண்டு டிசம்பர் பெருமழையின் போது, அடையாறு ஆற்றின் சீற்றத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது அசோக் நகர் நூலகம்தான். டிசம்பர் 2-ம் தேதி மதியம் அடையாறு ஆற்றின் வெள்ளப் பெருக்கு அசோகர் நகர் நூலகத்துக்குள்ளும் நுழைந்தது. நூலகத்தின் கீழ்தளம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்தது. தரைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தண்ணீரில் மிதந்தன. பெருவெள்ளத்தின் பாதிப்புகள் குறையத் தொடங்கியபிறகு, அசோக்நகர் நூலகத்துக்கு வந்த வாசகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. சேறும், சகதியுமாக நூலகம் காட்சியளித்தது. புத்தகங்கள் எல்லாம் தண்ணீரில் ஊறிப்போய், நனைந்திருந்தன. தரைத்தளத்தில் இருந்த புத்தகங்கள் முழுமையாகச் சேதம் அடைந்தன.

அசோக்நகர் கிள நூலகத்தின் நூலகர், தீனதயாளனிடம் பேசினோம். "டிசம்பர் பெருவெள்ளத்தில் தரைத்தளத்தில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் சேதம் அடைந்தன. வாசகர்களுக்கு நூல்கள் வழங்கிய விவரங்கள், அவர்களின் முகவரி அட்டைகள் அனைத்துமே மழை நீரில் சேதமடைந்து விட்டன. முதல் மாடியில் இருந்த குறிப்புதவி புத்தகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நூலகத்தின் நிலைமையை, துறை அதிகாரிகளிடம் விளக்கினேன். வெள்ளசேதங்களை துப்புரவு செய்வதற்கு ஒருவாரத்துக்கும் மேல் ஆனது. மூன்று மாதங்களில் முதல் மாடியில் நூலகம் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அதன்பின்னர், மாவட்ட நூலக அதிகாரிகள் உதவியுடன், நன்கொடையாளர்களை அணுகி நூலகத்தைப் புதுப்பித்துள்ளோம். முன்பிருந்ததைவிட நூலகம் புதுப்பொலிவுடன் இருக்கிறது." என்றார்.

புதுப்பொலிவுடன்

மழைக்குப் பின்னர் மீண்டும் நூலகம் திறக்கப்பட்டபோது, தரைத்தளத்தில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் இருந்தது. அப்போது நூலகத்துக்கு வந்த வாசகர்கள், தாங்களே முன் வந்து புத்தகங்களைச் சீரமைப்பது, தண்ணீரை அகற்றுவது, குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். வாசகர்களாலும் இந்த நூலகம், குறுகிய காலத்துக்குள் மீட்கப்பட்டது.
நூலகத்தைப் புதுப்பிப்பதில் பெரும் பங்காற்றியது தமிழ்நாடு பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம்தான். இந்த நிறுவனம் அமெரிக்க வாழ் தமிழர்களைக் கொண்டநிறுவனமாகும். இந்தத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நூலகத்தை முழுமையாகப் புதுப்பித்துக் கொடுத்திருக்கின்றனர். இப்போது அசோக்நகர் நூலகம் தனியார் நூலகங்களுக்கு இணையாக 40 லட்சம் ரூபாய் செலவில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் நூல்கள் பிரிவு, நாளிதழ்கள் படிக்கும் பிரிவுகள் அழகோடும்,பொழிவோடும் காணப்படுகின்றன.  
நூலகத்தின் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது என்னவோ உண்மைதான். சிதைந்து போன ஒன்றரை லட்சம் புத்தகங்களுக்குப் பதில், மீண்டும் புத்தகங்களைச் சேகரிப்பதுதான் பெரும் சவாலான பணியாக இருந்தது. அது எப்படி சாத்தியம் ஆனது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க....

சென்னை மழையின் மீள் நினைவுகள் 1

சென்னை மழையின் மீள் நினைவுகள் 2

சென்னை மழையின் மீள் நினைவுகள் 3

சென்னை மழையின் மீள் நினைவுகள் 4

சென்னை மழையின் மீள் நினைவுகள் 5

சென்னை மழையின் மீள் நினைவுகள் 6

சென்னை மழையின் மீள் நினைவுகள் 7Trending Articles

Sponsored