‘சி.சி.டி.வி கேமிரா வாங்கியதில் காவல்துறை முறைகேடா?’ சட்டப் பஞ்சாயத்து எழுப்பும் சந்தேகம்Sponsoredகொள்ளையர்களைப் பிடிக்க அண்மையில் ராஜஸ்தான் சென்ற தமிழகக் காவல்துறை அதிகாரி பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவருடைய  மரணத்தை அடுத்து பலரும் பேசியது இதுதான்...  'போலீஸாருக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் கதி என்ன எனக் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், 'சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டாமல் இருப்பதே குற்றங்கள் பெருகக் காரணம்' எனக் குற்றம் சாட்டுகிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.

நகைக் கடை கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் சென்ற, தமிழகக் காவல் அதிகாரி பெரியபாண்டியன் கடந்த 13 ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படியான சம்பவங்கள் நிகழ  தமிழகக் காவல்துறையின் பலவீனமான கட்டமைப்பே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. போலீஸ் தரப்பில், ஆட்கள் பற்றாக்குறை, நவீன ரக ஆயுதங்கள் பயன்படுத்தாத நிலை எனப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில், “சர்வ சாதாரணமாகக் குற்றவாளிகள் தமிழகத்தில் நடமாட காரணம், சி.சி.டி.வி கேமரா பொருத்தும் நடவடிக்கையில் காவல்துறை கவனம் செலுத்தாமல் இருப்பதே” என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர், செந்தில் ஆறுமுகம். மேலும் தொடர்ந்தவர் “பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளிட்ட இடங்களில் போதுமான கேமராக்கள் இல்லை. ஏன் காவல்நிலையங்களில்கூட கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

Sponsored


இந்த நிலையில்தான் தமிழகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களின் நிலவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியிருந்தோம். அதில், ‘தமிழகத்தில் எத்தனை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன? மாவட்ட வாரியாக பொருத்தப்பட்ட கேமராக்களின்  எண்ணிக்கை எவ்வளவு? கேமரா வாங்குவதற்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது? எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தோம். ஆனால், அதற்கு தமிழகக் காவல்துறையிடமிருந்து எந்தப் பதிலும் தரப்படவில்லை. அதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்திருந்தோம்.

 அதன்பிறகே  காவல்துறைத் தரப்பிலிருந்து பதில் வந்தது. அதில்,தொழில் ரகசியம் மற்றும் வணிக நம்பகத் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் தகவல்களைத் தரமுடியாது. மேலும், வணிக நிறுவனங்களின் போட்டி காரணமாக கேமரா வாங்கும்செலவு குறித்தத் தகவலை வெளியிட முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

Sponsored


காவல் துறையின் இந்தப் பதில் எங்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எங்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் போனதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். அதில் ஒன்று சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் வேலை முழுமை பெற்றிருக்காது. மற்றொன்று வாங்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் நிலவரம் குறித்த  தகவலைக் காவல்துறை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் போதுமான சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படாமல் போனதே, நகைக்கடை கொள்ளையன் நாதுராம் போன்ற குற்றவாளிகள் உள்ளே நுழையக் காரணம்'' என்றார்.

2015 -இல் பொது நல வழக்கொன்றில் நீதிபதிகள் கேட்ட கேள்விகள் இதுதான்... ''எப்போது  சி.சி.டி.வி கேமரா பொருத்தும் பணி முழுமை பெறும்? அதுகுறித்த கால அவகாசத்தை நீதிமன்றத்தில் தெரிவியுங்கள்...'' என்று உத்தரவிட்டது, காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு நினைவில் உள்ளதா?Trending Articles

Sponsored