இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரு தி.மு.க தலைவர் அன்பழகன்!Sponsoredதேர்தலில் வென்று மக்கள் பிரதிநிதியாகி கட்சியிலும் ஆட்சியிலும் பதவியைப் பிடிப்பதே அரசியல் என்பவர்களுக்கு மத்தியில், அதோடு ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு கொள்கைக்கார தி.மு.க.காரராக 95 வயதிலும் இயங்கிக்கொண்டு இருப்பவர், க. அன்பழகன். முன்னாள் அமைச்சர் என்பதைவிட தி.மு.கவின் பொதுச்செயலாளர் என்பதே இவரின் முக்கிய அடையாளம்! 

தி.மு.கவின் தலைவர் கருணாநிதி இவருக்கு இளையவர் என்றாலும் கட்சித் தலைவராக கருணாநிதியை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவருவது அன்பழகனின் கட்டுப்பாட்டு உணர்வு. அதைப்போலவே கருணாநிதியும் கட்சியின் பொதுச்செயலாளரும் தன்னைவிட மூத்தவரான அன்பழகனுக்கு கொடுக்கும் மரியாதையை என்றும் விட்டுவைத்ததில்லை! 

Sponsored


கருணாநிதியின் உடல்நிலை நலிவடைவதற்கு முன்புவரை, அன்பழகனின் பெரும்பாலான பிறந்தநாள்களுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டப் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டுக்குப் போய் வாழ்த்துக்கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், கருணாநிதி. சில ஆண்டுகளுக்கு முன்னர் நாற்காலி உதவியுடனே நகரமுடியும் எனும் அளவுக்கு கருணாநிதியின் உடல்நிலை குன்றியது முதல், அவரை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றுக்கொண்டுவருகிறார், க. அன்பழகன். 

Sponsored


இன்று 96-வது ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ‘பேராசிரியர்’ அன்பழகன், நேற்றே தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். இன்று காலையில் வழக்கம்போல அண்ணா நினைவிடத்துக்குச் சென்று அன்பழகன் மலர் மரியாதை செய்தபோது, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் இணைந்துகொண்டார். தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்று தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் வணக்கம்செய்த பின்னர், அன்பழகனின் வீட்டுக்குச் சென்று அவருடன் காலை உணவை முடித்துக்கொண்டு தேர்தல் பிரசாரத்துக்குப் புறப்பட்டார், மு.க.ஸ்டாலின். 

அதன் பிறகு தி.மு.கவின் கொள்கைப்பிடிப்புள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் முன்னாள் அமைச்சர்களும் திராவிடர் இயக்கத்தினரும் அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணம் இருந்தனர். சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு முன்னாள் தலைவர் கயல் தினகரன், கவிஞர் சல்மா, பேரா. சுப.வீரபாண்டியன், அவரின் சகோதரர் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ஆய்வறிஞர் திருச்சி க.நெடுஞ்செழியன் என பலதரப்பட்ட பிரமுகர்களும் இடையிடையே சத்தமில்லாமல் வந்து, ‘பேராசிரியரை’ச் சந்தித்து வாழ்த்திவிட்டுப் போனார்கள். 

காலை 9.30 மணி இருக்கும்... அங்கே ஒரு புல்லரிக்கச்செய்த ஒரு நிகழ்வு.. பல ஆண்டுகளுக்குப் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அன்பழகனை அவரின் வீட்டில் நேருக்கு நேர் சந்தித்தார், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. நா தழுதழுக்கப் பேசிய வைகோ, “அண்ணே, உங்களோட மேடையில பேசினதெல்லாம் இன்னும் மறக்கலை..ணே..” என உருக, “ வேற மாதிரி போகாம எங்கூட இருந்திருக்கலாமே..” என அன்பழகனும் பெரிய அண்ணனாகப் பாசத்தைக்காட்ட, அந்த கணம், அங்கிருந்தவர்களுக்கு அரிய ஒரு தருணம்! 

முந்தைய நாளன்று பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் சந்தித்தபோதும், பிறந்தநாளன்றும் வாழ்த்துகளைச் சொல்ல வந்திருந்தார், வி.சி.க தலைவர் திருமாவளவன். 

தி.மு.கவில் இருக்கும் பழைய கொள்கைக்காரத் தலைமுறையின் அடையாளமாக இருக்கும் அன்பழகன், 44 புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1943-ல் இவர் எழுதிய ‘வாழ்க திராவிடம்’, 1947-ல் எழுதிய ’வாழ்க கிளர்ச்சி’, 1953-ல் எழுதிய ’தொண்டா, துவேசமா?’ ஆகிய நூல்கள், மறுபதிப்பாக நேற்று சென்னையில் வெளியிடப்பட்டன என்கிறபோது, அவரின் எழுத்துக்கான தேவைகுறித்து புரிந்துகொள்ள முடியும். 

தி.மு.கவின் தோற்றத்தின்போதே அந்தக் கட்சியின் தமிழகம் முழுவதுமிருந்த குறைந்தது 50 தலைவர்களாவது எழுத்தாளர்களாகவும் இருந்தனர். பெரும்பாலானவர்கள் தனியாக அந்தந்த வட்டாரத்திலும் அதைத்தாண்டியும் வாசகர் வட்டத்தைப் பெற்றிருந்தார்கள். எழுத்தையும் பேச்சையும் அரசியல் கருவியாகக் கொண்டிருந்தார்கள் என்பதன் நிதர்சன வெளிப்பாடு இது! அவர்களில் ஒருவராகவும் முன்னிலையிலும் இடம்பெற்றவர், க.அன்பழகன். 

தமிழ் குறித்தும் தமிழர் இனம் பற்றியும் செறிவான கருத்துகளைக்கொண்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். சீதையின் காதல், ஜாதி முறை, தமிழரும் திருமணமுறையும், கலையும் வாழ்வும் ஆகியவை அன்பழகனின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள் என்றாலும், ’வகுப்புரிமைப் போராட்டம்’ எனும் நூல் இவருடைய ’மாஸ்டர் பீஸ்’ என்கிறார் முனைவர் மங்கள முருகேசன். 

”இந்த வயதிலும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுகிறார், அன்பழகன். வீட்டுக்கு உள்ளேயே  நடைபோட்டுவிட்டு, சில எளிய உடற்பயிற்சிகளையும் செய்கிறார். உடற்பயிற்சி ஆலோசகர்களும் அவ்வப்போது வந்து உதவுகிறார்கள். குளியல் எல்லாம் முடிந்தபின்னர் அன்றாடம் வந்துள்ள நாளேடுகளை முழுவதுமாகப் படித்துவிடுகிறார். அவருக்கு ஆர்வமான தமிழ், சைவம் போன்றவை தொடர்பான செய்திகளைக் குறியிட்டு எடுத்துவைப்பார். ஆற்காடு வீராசாமி போல அடிக்கடி தன்னைச் சந்திப்பவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பார். இதைத்தாண்டி அவருடைய வாசிப்பு உலகம் தனியானது. அலமாரியில் எந்த புத்தகம், எங்கே இருக்கிறது என்பது அவருக்கு பக்காவாகத் தெரியும். கொஞ்சம் தளர்வடைவதற்கு முன்னர்வரை புத்தகங்களை அடுக்கிவைப்பது, அட்டைபோடுவது என அவற்றை ஒழுங்குபடுத்துவதில் அதிக கவனமாக இருப்பார்” என்கிறார்கள் அன்றாடம் அன்பழகனை நெருக்கமாகக் கவனித்து வருபவர்கள். 

பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாத சில பழக்கங்கள், அன்பழகனின் தனித்தன்மை. சந்திக்கவரும் யாரையும் வேறுபாடு கருதாது கைகுலுக்கி வரவேற்பது, அவரின் இயல்பு. எந்த ஒன்றையும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசுவதும் அன்பழகனின் நெடுங்கால குணம். பரிந்துரைக்காக வருவோர் வருத்தப்படுவார்களே என்றெல்லாம் யோசிக்காமல், அவர்களின் கோரிக்கை நடக்கும், நடக்காது என அந்த இடத்திலேயே யதார்த்தத்தைச் சொல்லிவிடுவார். 

இரண்டு சம்பவங்களை அவரின் இந்த குணத்துக்கு உதாரணமாகச் சொல்வார்கள். ஒன்று, திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க பிரிந்தபோது, பலரும் சமாளித்துக்கொண்டு இருந்தபோது, “ ஆமாம்; அய்யாவைவிட்டுப் பிரியும்போது எங்களுக்கு காரணம் தேவைப்பட்டது; அது மணியம்மையாருடனான திருமணமாக அமைந்துவிட்டது” என பட்டெனச் சொல்லியிருக்கிறார். மற்றது, தி.மு.கவில் மூத்தவராக இருந்தபோதும் இளையவரான கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்டதைப் பற்றிக் கேட்டதற்கு,” அவர் என்னைவிட வயதில் சிறியவர்தான்; ஆனால் கட்சித் தலைவருக்கு உரியபடி அவரால் இருக்கமுடிகிறது; அதனால் அவரை தி.மு.கவின் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என சர்வசாதாரணமாகச் சொன்னது! 

இன்றைய அரசியல் உலகமே வினாடிநேரப் பரபரப்புகளிலும் அடுத்தடுத்த தகவல்தொடர்பு சாதனங்களிலும் மூழ்கிக்கிடக்கையில், அரசியல் செய்திக்காகக்கூட தொலைக்காட்சியில் நேரத்தைச் செலவிடாதவராக இருக்கிறார், ’பேராசிரியர்’க. அன்பழகன். முதுமையால் ஏற்படும் உடல்நலிவைத் தவிர, உள்ளூரிலோ வெளியூர்களிலோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்னும் இயங்கிக்கொண்டே இருக்கிறார்! 
கருணாநிதியிடம் மட்டுமல்ல, க.அன்பழகனிடமும் இளைய தலைமுறை கற்றுக்கொள்ள சங்கதிகள் இருக்கின்றன!Trending Articles

Sponsored