''டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்  கொடுத்த 10 ரூபாய்... 20 ரூபாய்..!'' வாக்காளர்களைக் கவர கடைசிநேர டெக்னிக்Sponsoredஓட்டுகளை எப்படியாவது வாங்கி விட வேண்டுமென்று மதுசூதனன், டி.டி.வி.தினகரன் ஆட்கள் விதவிதமான டெக்னிக்குகளை பயன்படுத்தி உள்ளனர். பணம், பரிசு, வாக்குறுதிகளை வாரி வழங்கி உள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பரபரப்பு அடங்கி ஒடுங்குவதற்குள் வாக்காளர்களுக்கு 10 ரூபாய் நோட்டு, 20 ரூபாய் நோட்டு என்று டோக்கன்களை வழங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள். இதுகுறித்து பா.ஜ.க புகார் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்கள், தேர்தல் ஆணையத்துக்குச் சவால்விடும் வகையில் இருந்துவருகிறது. பணப் பட்டுவாடா புகாரில் தமிழகத்தின் மானம் காற்றில் பறந்துகொண்டு இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா என்ற புகாரினால், 8 மாதங்களுக்கு முன்பு இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் பெயர்கள், வருமானவரித் துறையின் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்மூலம் வெளியாயின. இப்போது, மீண்டும் ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த முறையும், பணப் பட்டுவாடா புகாரில் ஆர்.கே.நகர் புகழ் பரவிக்கொண்டு இருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்குக் கடும் நிபந்தனைகள், பறக்கும் படை, சிறப்பு அதிகாரிகள் என நியமித்தும் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுப் பணப் பட்டுவாடாவைக் கச்சிதமாக ஆளும் கட்சி முடித்துவிட்டது. ''ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள்'' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறி இருக்கிறார்.

Sponsored


Sponsored


மதுசூதனன் டெக்னிக்!

அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ஜெயலலிதா பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி அன்று... அவர் ஏற்கெனவே அறிவித்தபடி படித்த இளம் பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டி வழங்கப்படும். இந்தத் தொகுதியில் வசிக்கும் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு ரூ.20 ஆயிரம் மானியத்தில் 400 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டித் தரப்படும்'' என்றார். இந்த அறிவிப்பை வீடுவீடாகச் சொல்லி அ.தி.மு.க-வினர் வாக்குச் சேகரித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் 56,000 வீடுகள் கட்டப்படும் என்றும், லட்சம் பேருக்கு ஸ்கூட்டி வாங்கித் தரப்படும் என்று சொல்லியும் வாக்குச் சேகரித்தார்கள். 

இதையடுத்து, 1 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்களைக் கணக்கெடுத்து ஓர் ஓட்டுக்கு 6 ஆயிரம் வீதம் பணப் பட்டுவாடாவைச் செய்தனர் என்று எதிர்க் கட்சியினர் புகார் கூறியுள்ளனர். அதுவும் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் போகாமலேயே வாக்காளர்களைத் தொகுதிக்கு வெளியே அழைத்து பணம் சப்ளையை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டனர். பூத் ஏஜென்ட்கள் தலா 2 பேர் வீதம் ரூ.10, 000 என்று வழக்கமான செலவுத் தொகைகளையும் முறையாகக் கொடுத்து முடித்துவிட்டார்கள். மேலும், பூத் வாரியாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், வீடுவாரியாகத் தனிப்பட்ட முறையில் செலவுசெய்து வாக்காளர்களை கவர்ந்துள்ளனர். 

டி.டி.வி.தினகரன் அணி!

தொகுதிக்குள், வீடுவீடாக வாக்காளர்களைக் கவனிக்கப் பகீரத முயற்சி எடுத்தது டி.டி.வி.தினகரன் அணி. ஆனால், போலீஸ் கெடுபிடி காரணமாக ஒன்றும் செய்ய முடியவில்லை. மதுரை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று பிரசாரம் செய்தனர். இந்நிலையில், ஆளும் கட்சி கவனித்ததைவிட அதிக அளவில் கவனிக்க முடிவு செய்து புது டெக்னிக்கைப் பயன்படுத்தி உள்ளனர். அதாவது, ஆர்.கே.நகரில் மொத்தமுள்ள 256 பூத்களில் தலா 300 ஓட்டுவீதம் மொத்தம் 70 ஆயிரம் ஓட்டுகளுக்குப் பணப் பட்டுவாடாவை டி.டி.வி.தினகரன் அணி செய்துவிட்டது. அதாவது, ஒரு வீட்டில் ஐந்து ஓட்டுகள் இருந்தால்... 10 ரூபாய் நோட்டையும், 6 ஓட்டுக்கு மேல் இருந்தால் 20 ரூபாய் நோட்டையும் கொடுத்துள்ளனர். இந்த நோட்டுகளின் எண்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு வீடுவீடாகக் கொடுத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு அந்த நோட்டுகளைக் கொடுத்தால்... 10 ரூபாய் நோட்டுக்கு ரூ.10,000-மும், 20 ரூபாய் நோட்டுக்கு ரூ.20,000-மும் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இந்தப் புது டெக்னிக் பண மழையைப் பார்த்து மதுசூதனன் டீம் மிரண்டுபோய் உள்ளது.

தி.மு.க., பி.ஜே.பி..! 

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வீடுவீடாக நடந்துசென்று வாக்குச் சேகரித்தார். தி.மு.க. தரப்பில் வாக்காளர்கள் யாருக்கும் பணப் பட்டுவாடா செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள், தங்களுடன் வந்த கட்சியினருக்குத் தெருவோரக் கடைகளில் டீ வாங்கிக் கொடுத்ததுதான் அவர்களுக்கு பெரிய செலவு. தி.மு.க. மேலிடமும் பணம் கொடுக்கச் சிக்னல் காட்டவில்லை. பி.ஜே.பி. தரப்பும், 'மாற்றத்தைத் தாருங்கள்' என்று சிம்பிளாக ஓட்டுக் கேட்டு முடித்துக்கொண்டனர். அந்தக் கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் கூறுகையில், ''டி.டி.வி.தினகரன் டீம் 10 ரூபாய், 20 ரூபாய் என்று நூதன முறையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். ஆளும் கட்சியும், அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் செய்துள்ளனர்'' என்றார். 

இந்த இடைத்தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆனால், வாக்காளர்களைக் கவர, அரசியல் கட்சிகள் சார்பில் முறையாகக் கணக்கில் காட்டாமல் ரூ. 200 கோடி வரை ஆர்.கே.நகரில் பணம் புழங்கி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.Trending Articles

Sponsored