முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே... இந்த 10 பிரச்னைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?! #Letter4CMPalanisaamy



Sponsored




மதிப்பிற்குரிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு... 

இந்த ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இந்த ஆண்டில் 300 நாள்களுக்கும் மேலாக, தமிழகத்தின் முதல்வராக, எங்களை ஆளும் பொறுப்பில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். தமிழக அரசியலில் யாருக்கும் இத்தனை எளிதாக இந்த வாய்ப்பு கிடைத்து விடவில்லை. அடுத்த முதல்வர் கனவோடு நீண்ட நாள்களாக இருக்கும் ஸ்டாலினுக்கு இந்த வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. தான் மீண்டும் ஆள முடியாதா என்ற கனவோடு இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கனவும் பலிக்கவில்லை. தானே கட்சியைத் துவங்கி, படிப்படியாக வெற்றியும் பெற்று தேசிய கட்சிகளையும், சில மாநில கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி முதல்வர் வேட்பாளர் வரிசையில் இடம்பெற்ற விஜயகாந்த்துக்கும் இந்த வாய்ப்பு அமையவில்லை. அதிகார மையத்தை நோக்கி சசிகலாவும், டி.டி.வி. தினகரனும் செல்லவிருந்த பாதைகள் தடைபட... அவர்கள் எண்ணமும் ஈடேறவில்லை. முதல்வராகி விடுவோம் என்ற நம்பிக்கை துளிர்விட்டு, அதை நோக்கி பயணித்த இன்னும் சிலரின் ஆசைகளும் நிறைவேறா ஆசைகளாகவே இருக்கின்றன.

Sponsored


ஆனால், 'அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா?' என்ற அச்சத்தில் காலத்தைக் கடத்திக்கொண்டிருந்த உங்களுக்கு முதல்வர் பதவி கிடைத்தது என்பது நிச்சயம் நீங்களே எதிர்பாராத ஒன்றாகத்தான் இருந்திருக்கும். எதிர்பாராமல் முதல்வராகி, 300க்கும் அதிகமான நாள்களையும் கடந்து விட்டிருக்கிறீர்கள். இந்த நாள்களில் தனது 'சாதனை' என சொல்லிக்கொள்ளத்தான் உங்களிடம் எதுவும் இல்லை; இத்தனை மோசமான நிர்வாகத்துக்கு நடுவே தாக்குப்பிடித்து முதல்வர் பதவியையும், ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டிருப்பதைத் தவிர.

Sponsored


ஆனால், இந்த 300 நாள்களுக்குப் பின்னால், தமிழகத்தின் நிலையும், தமிழக மக்களின் நிலையும் பரிதாபகரமாக மாறியுள்ளதை நீங்கள் உணர்கிறீர்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இதுவரை இப்படியான சூழலை தமிழகம் எதிர்கொண்டதில்லை. உங்களுக்குத் தெரியுமா, தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் மட்டும் 10க்கும் அதிகம். ஆனால், அதில் எல்லாம் உங்களுக்கு அக்கறை இல்லை என்பதை, செயலால் உணர்த்திக்கொண்டே இருந்தீர்கள் நீங்களும், உங்கள் அமைச்சர் பெருமக்களும். உங்களின் அசைவின்மை போலவேதான், இந்த மாநிலமும் வழிநடத்தப்பட்டது.

இந்த ஆண்டில் நடந்த 10 முக்கியப் பிரச்னைகள் தமிழகத்தையும், தமிழக மக்களையும் வெகுவாக பாதித்துள்ளது. அவை என்ன, தமிழகத்தை அவை எவ்வாறு பாதித்தது என்று உங்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

வறட்சியும், அதிகரித்த விவசாயிகள் தற்கொலையும்...

வறட்சியால் தமிழகம் வறண்டது. பருவ மழை பொய்க்க, வறட்சியின் பிடியில் சிக்கி விவசாய நிலங்கள் வறண்டன. 200க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழகத்தில் போராடி ஓய்ந்த விவசாயிகள், டெல்லி வரை சென்று போராடினார்கள். ஆனால், அதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதை உங்களின் செயல்பாடு மூலம் எங்களுக்கு உணர்த்தினீர்கள். காவிரியில் தண்ணீரின்றி விவசாயிகள் மரணித்த நேரத்தில், லாரி தண்ணீரை குளத்தில் விட்டு காவிரி மஹா புஷ்கர விழாவை நடத்தி, அதில் நீராடினால் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்துபோகும் என நம்பி நீராடிச் சென்றது மட்டும்தான் நீங்கள் செய்தது.

பதற வைத்த ‘டெங்கு’... பதறாத அரசு...

ஏற்கெனவே ஒருவித பதற்றத்தில் இருந்தவர்கள் மேலும், பதற வைத்தது டெங்கு. ஆயிரக்கணக்கில் பாதிப்பு, நூற்றுக்கும் அதிகமாக உயிரிழப்பு என தமிழகத்தையே அதிர வைத்தது டெங்குக் காய்ச்சல் பாதிப்பு. டெங்குவைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்பைத் தடுக்கவும் எந்த காத்திரமான திட்டங்களையும் நீங்கள் எடுக்கவில்லை. மாறாக தண்ணீரை ஏன் தேக்கி வைத்தீர்கள், குப்பையை ஏன் இங்கே கொட்டியிருக்கிறீர்கள் என எங்கள்மீது புகார் சொல்லி, எங்களுக்கே அபராதம் விதித்தீர்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். உயிர் போகும் பிரச்னையைவிட, உங்களுக்கு உட்கட்சிப் பிரச்னை அல்லவா முக்கியம்.

இதற்கு இது தானா தீர்வு முதல்வரே?

தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடைகள் இருந்தால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவார்கள். விபத்து நடக்கும். எனவே, நெடுஞ்சாலைகளின் ஓரமுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம். கடைகளும் மூடினீர்கள். பதிலுக்கு எங்கோ இருந்த கடைகளை எங்கள் ஊருக்குள், எங்கள் வீட்டின் அருகே கொண்டு வந்தீர்கள். என்ன செய்தும் பலனில்லை. வேறு வழியின்றி, கடைகளை அடித்து உடைத்தோம். பதிலுக்கு காவல்துறையைக் கொண்டு எங்களைத் தாக்கி பழி தீர்த்துக்கொண்டீர்கள். அப்போது கடைகளை திறக்க முடியாததால், நெடுஞ்சாலைகளுக்கு ஊரக சாலைகள் என பெயர் மாற்றி கடைகளைத் திறந்தீர்கள். பெயரை மாற்றினால் எப்படி விபத்து நடக்காமல் இருக்கும் என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவே இல்லை.

போர்க்களமான 'நெடுவாசல்'... போர்க் காலமாக்கிய அரசு..

காவிரி டெல்டா பகுதிகள் தண்ணீரின்றி தவிக்க அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், காவிரி டெல்டா பகுதியான புதுக்கோட்டை, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகள் தொடங்குவதாக அறிவித்தது  மத்திய அரசு. இதைக்கடுமையாக எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அதை நீங்கள் துளியும் கண்டுகொள்ளவில்லை. இடைவிடாத போராட்டத்தால் வேறு வழியின்றி, 'மக்கள் விரும்பாவிட்டால் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்' என அறிவித்தீர்கள். போராட்டத்தை நாங்கள் விலக்கிக் கொண்டதும் 'ஆறு மாதத்தில் திட்டத்தை நிறைவேற்றுவோம். மாநில அரசு மக்களின் அச்சத்தைப் போக்கும்' என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட, பதிலேதும் சொல்லாமல் மெளனம் காத்தீர்கள். அமைதி மட்டும் காத்திருந்தால் கூட பரவாயில்லை. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் கொடுத்த கல்லூரி மாணவி வளர்மதியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தீர்கள். அது சரி அத்தியாவசியமான இரட்டை இலைச் சின்னமும், கட்சியும் பறிபோன நேரத்தில், சில லட்சம் பேரின் வாழ்வாதாரத்தைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படப் போகிறீர்கள்?

பற்றி எரிந்த கதிராமங்கலம்

நெடுவாசலை அடுத்து கதிராமங்கலம். இந்த பெயர் உங்களுக்கு  நினைவிருக்குமா எனத்தெரியவில்லை. தெரியாவிட்டால் நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். நெடுவாசலைத் தொடர்ந்து தமிழகத்தின் கொதிக்கும் கிராமங்களின் பட்டியலில் இடம்பிடித்தது கதிராமங்கலம். "இங்கு ஒ.என்.ஜி.சி. பூமிக்கு அடியில் ஆழ்துளையிட்டு பெட்ரோல் எடுத்து குழாய்கள் மூலம் சுத்திகரிக்க அனுப்புகிறது. இது விவசாயத்தைப் பாதிக்கும். நிலத்தடி நீரை பாழ்படுத்தும்" என நாங்கள் கதறியபோது, அதை காது கொடுத்து கேட்கக்கூட நீங்கள் தயாராக இல்லை. எங்கள் குறைகளைக் கேட்பதற்குப் பதில் ஓய்வின்றி எங்களைப் போராட வைக்கும் எஜமானர்களாக மட்டுமே நீங்கள் இருந்தீர்கள். இருக்கிறீர்கள். 'சின்னம்' பிரச்னைக்கு முன்னால், இதெல்லாம் உங்களுக்கு 'சின்ன'ப்பிரச்னை தானே.

சமூக பதற்றத்தை உருவாக்கிய மாட்டிறைச்சி தடை

மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட, பி.ஜே.பி. ஆளாத மாநிலங்களில் இருந்து கண்டனக்குரல் எழுந்தது. இந்த தடை மக்களின் மீது நடத்தப்பட்ட பன்முனைத்தாக்குதல்; உணவு உரிமையில் கை வைப்பதாகும்; லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்; விவசாயிகளை, விவசாயத்தை கடுமையாகப் பாதிக்கும்; கிராமப் பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும்; சமூக பதற்றத்தை உருவாக்கும் எனச் சொல்லி அண்டை மாநிலமான கேரளா நேரடியாக இதை எதிர்த்தது. ஆனால், மத்திய அரசு சொல்வதை 'அப்படியே ஆகட்டும்' என ஏற்கும் அலாவுதீன் பூதம்போல் ஏற்றுக்கொண்டீர்களே?. ஐ.ஐ.டியில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். மாடுகளை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்தனர். இதைப்பற்றி துளியும் கவலை கொள்ளாமல் நீங்கள் இருந்தீர்கள். அதுவும் சரிதான். பிரதமரைச் சந்திக்கும் நேரம், பிரிந்த அணிகளை சேர்ப்பதைப் பற்றி பேசவே பத்தாதப் போது மாட்டுக்கறித் தடையைப் பற்றியும், மக்கள் பிரச்னைகளைப் பற்றியும் எப்படிப் பேச முடியும்?

‘நீட்' - மவுனியாக மாறிய அரசு

உங்கள் தலைவி ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வை கடுமையாக எதிர்த்தார். நீட் தேர்வு கட்டாயம் என்றபோது, அதிலிருந்து விலக்குக் கோரி தமிழக சட்டமன்றத்தில் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். எதிர்ப்பின்றி முழு ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றியதோடு, உங்கள் பணி முடிந்தது என நின்றுவிட்டீர்கள். நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவே இல்லை. அது குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை. இந்த இடத்தில் உங்கள் தலைவி இருந்திருந்தால், 'குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு ஏன் அனுப்பவில்லை. மாநில அரசு உரிமைகளை மதிக்கவேண்டாமா. மாநில உரிமைகளை தட்டிப்பறிப்பது சரிதானா" எனக் கொந்தளித்திருப்பார். ஆனால், உங்களிடமிருந்து அதற்கான குரல்கூட எழவில்லை. நீங்கள் மவுனியாகவே இருந்தீர்கள். எஜமானர்களைப்போல மத்திய அரசை நீங்கள் பார்த்தீர்கள். 'நீட் தேர்வு நடக்காது; நடக்க வாய்ப்பில்லை' எனக் கடைசிவரை சொன்னதைத் தவிர நீங்கள் எதையுமே செய்யவில்லை. விளைவு, நீங்கள் நடக்காது என உறுதி கொடுத்த நுழைவுத் தேர்வு நடந்தது. அச்சமுற்றது போலவே நடந்தது. தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருந்த, நிச்சயம் டாக்டர் ஆகியிருக்க வேண்டிய மாணவி அனிதாவிடம் இருந்து அந்த வாய்ப்பு தட்டிப்பறிக்கப்பட, ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் துயர முடிவைத் தேடிக்கொண்டார். தமிழகமே சோகத்தில் மூழ்கிய அந்தச் சம்பவத்துக்கு நீங்களும் இரங்கல் செய்தி வெளியிட்டீர்கள். அதை மட்டுமே செய்தீர்கள். அதில் கூட 'நீட்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் தவிர்த்தீர்கள். என்ன செய்வது எஜமானர்கள் மீதான உங்கள் விசுவாசம் அப்படி.

பறிபோன மாநில உரிமைகள்

'ஜி.எஸ்.டி. மாநில உரிமைகளிலும், மாநிலத்துக்கான வருவாயிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்' எனச்சொல்லி, ஜி.எஸ்.டி.யை கடுமையாக எதிர்த்தார் ஜெயலலிதா. 'மாநிலத்தின் வருவாயைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்படுவது என்பது மக்கள் நலத்திட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் நலன் சார்ந்து சிறப்புத் திட்டங்களுக்கு நிதி பெறுவது என்பது சிக்கலுக்குள்ளாகும்' எனச்சொல்லப்பட்டபோது, 'ஆம். பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், வேறு வழியில்லை என்பது போல நீங்கள் ஜி.எஸ்.டியை ஆதரித்தீர்கள். பட்டாசுத் தொழில் நகரான சிவகாசி, பனியன் தொழில் நகரான திருப்பூர், ஜவுளி தொழில் நகரங்களான ஈரோடு, கரூர், கடலைமிட்டாய் தயாரிக்கும் கோவில்பட்டி உள்ளிட்ட தொழில் நகரங்கள் கடும் நெருக்கடியைச் சந்திக்க... அதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம்போலவே நீங்கள் இருந்தீர்கள். இதைப்பற்றிப் பேச உங்களுக்கு ஏது நேரம்... ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா, இல்லையா என்பதுதானே உங்களது கவலையாக இருந்தது.

மூடப்படுகிறதா ரேஷன் கடைகள்?

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தி, 'இனி எல்லோருக்கும் ரேஷன் பொருள்கள் கிடைக்காது' என்ற அச்சத்தை சாதாரண மக்களிடம் விதைத்தீர்களே உங்களுக்கு நினைவிருக்கிறதா. இதுவும் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களில் ஒன்றுதான். உங்களுக்குத் தெரியுமா, இந்தியாவிலேயே பொது விநியோகத்திட்டமான ரேஷன் விநியோகத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலங்களில் முதலிடம் தமிழகத்துக்குத்தான். அடுத்த ஆண்டு முதல் மானியம் இல்லை. மாத குடும்ப வருமானம் 8,334 ரூபாயாக இருந்தால் ரேஷன் பொருள்கள் கிடைக்காது என மத்திய அரசு சொல்ல... அதை அப்படியே அரசிதழில் வெளியிட்டீர்கள். தொடர்ச்சியாக சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு ரத்துசெய்ய...அதற்கு எதிராக கொந்தளித்திருக்க வேண்டிய நீங்கள், சாமானியர்களுக்கு விற்கப்படும் சர்க்கரையின் விலையைக் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தினீர்கள். உங்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?

அரசின் மீதான அவநம்பிக்கையே மீனவர்கள் போராட்டம்

இந்த ஆண்டின் இறுதியில் நடந்த மிகப்பெரிய போராட்டம் மீனவர்கள் போராட்டம். ஒகி புயல் கன்னியாகுமரியை புரட்டிப்போட.... புயலின் கோரத்தாக்குதலில் சிக்கி ரப்பர், வாழைத் தோட்டங்கள், மரங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. புயலுக்கு முன்னர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாயமாக... பரிதவித்தன மீனவர் குடும்பங்கள். கேரளாவிலும் அதே நிலை. ஆனால், அங்கே பதறியடித்து இயங்கிய முதல்வரும், அரசும் மீட்புப் பணிகளை வேகப்படுத்தியிருந்தது. ஆனால், தமிழகத்தில் அப்படியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. 'நான் எதுவும் நடக்கவில்லை, எதையும் பார்க்கவில்லை, எதையும் உணரவில்லை' என்பதுபோல் இருந்தீர்கள். கொந்தளித்துப்போன மீனவர்கள் பெரும் போராட்டத்தைத் தொடங்கினர். கேரளாவோடு இணைய விரும்புகிறோம் என அவர்கள் சொன்னது, தமிழக அரசின் மீதான அவநம்பிக்கையைத்தான் உணர்த்தியது. உங்களுக்கு அது புரிந்ததா எனத்தெரியவில்லை. உங்களை குமரிக்கு வரவைக்கவே நாங்கள் படாதபாடு பட்டோம். நீங்கள் குமரிக்கு வந்து எங்கள் பிரச்னையை பார்க்க வந்துவிட்டால், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களில் அரசின் 'சாதனை'களை யார் விளக்கிப்பேசுவது என்பது புரியாதவர்களாவே இருந்துவிட்டோம்.
இவைதான் அந்த 10 பிரச்னைகள். இவை மட்டும் தானா என்றால் நிச்சயம் இல்லை. இன்னும் நிறைய இருக்கிறது. இந்த 300 நாள்களில் மாநிலங்களின் உரிமையை முழுக்க இழந்திருக்கிறோம். இதற்கு முந்தைய உங்கள் தலைவியின் ஆட்சியில் நிறைய முரண்பாடுகள் உண்டு. நிச்சயமாக அவரிடம் தவறுகள் இருந்தன. ஆனால், முக்கியமான தலைமைத் திறன்கொண்ட தலைவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மாநில உரிமைகளை அவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தார்.

வெகுஜன ஊடகங்களில் இரண்டு வார்த்தைகள் பிரபலமானவை. நிர்வாகம் மற்றும் தலைமைத்துவம் என்பதுதான் அது. இந்த இரண்டு திறன்களும் உங்கள் தலைவியின் பலம். இவை இரண்டும் தவறும்போது, மக்கள் கோபத்துடன் வெடிக்கின்றனர். அதுதான் இப்போது நடக்கிறது. பிரபலமற்ற தலைமை, ஆளுமையற்ற நிர்வாகம் என மாநில அரசு முடங்கியிருக்கிறது. கொள்கையற்ற அரசின் கொடூர விளைவாகவே இதை நாங்கள் பார்க்கிறோம்.

ஆனால், அரசியல் புவியீர்ப்பு விதியை மீறி, ஒரு புயலின் நடுவே அசையாமல் காட்சியளித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு பலவீனமான தருணத்தில், தமிழகத்துக்கு நீங்கள் ஒரு பெருஞ்சுமையாக மாறுகிறீர்கள். பெரிய உழைப்பு ஏதுமின்றி, தனித்த சிந்தனைகளுமின்றி அரசியலை வியாபாரமாகக் கருதி எவரையாவது சார்ந்திருந்தே செயல்படுவீர்கள் என்றால், இந்தப் பதவியில் நீங்கள் இருக்க வேண்டியவர் அல்ல. கொள்கையற்ற, ஆளுமையற்ற அரசு எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் சொல்ல வருவது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன். 

சொல்ல மறந்துவிட்டேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எப்படி? - சர்வேயில் பங்குபெற்று தங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

loading...

தமிழர்களே... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி பற்றிய தங்கள் கருத்து சமூக வெளிகளில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர் ஆட்சி தங்களுக்கு அதிருப்தியளித்தால், #WeAreAngryTNCM என்ற ஹேஷ்டேகிலும், திருப்தியாக இருந்தால் #WeAreHappyTNCM என்ற ஹேஷ்டேகிலும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறோம்!



Trending Articles

Sponsored