’நதிகளை மீட்போம்’ அறிக்கையின் 473ம் பக்கத்தில் இருக்கும் பிரச்னை..! - விவரிக்கும் பியூஷ் மானுஷ்



Sponsored



சமீபத்தில் "தர்மத்தைக் காப்போம்" எனும் தலைப்பில், ஈஷாவின் "நதிகளைக் காப்போம்" திட்டத்திற்குப் பின்னிருக்கும் அரசியல், தமிழகத்தில் 7% பசுமைப் பரப்பை அதிகரித்ததாக ஈஷா சொன்ன விஷயத்துக்குப் பின்னிருக்கும் பொய்கள் போன்ற விஷயங்களை ஆதாரத்தோடு காட்டும் கூட்டம் நடைபெறவிருந்தது. சில காரணங்களால், அந்தக் கூட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், ஈஷாவின் "நதிகளைக் காப்போம்" திட்டத்தின் அறிக்கையில், விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எதிரான சில விஷயங்கள் இருக்கின்றன, குறிப்பாக அதன் 473வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகள் பெரும் அபாயத்துக்குள்ளானவை என்று சொல்கிறார் சூழலியலாளர் பியூஷ் மானுஷ்...

அப்படி என்ன இருக்கிறது அந்த 473வது பக்கத்தில்?

"முதல்ல ஒரு விஷயத்தை தெளிவாக்குகிறேன். ஜக்கியை நான் ஏதோ கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கவில்லை. ஜக்கியிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்னையே, பிரச்னை என்னவென்பது அவருக்குத் தெளிவாக புரியும். ஆனால், அதற்காக அவர் முன்வைக்கும் தீர்வுகளில் சிக்கல்கள் இருக்கின்றன.

Sponsored


ஆமாம்... நதிகள் எல்லாம் தொடர்ந்து வற்றிக் கொண்டு தான் வருகின்றன. அதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். தன் 70வது வயதில் ஜக்கிக்கு இது புரிந்தது பெரும் மகிழ்ச்சி. சரி...அதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறார்? குறிப்பாக இந்த 473ம் பக்கம் அவர் கூறியிருக்கும் பரிந்துரைகளைப் பாருங்கள்...

Sponsored


விவசாய நிலங்களில் "Water Meter" பொருத்துவார்கள். விவசாயப் பாசனத்திற்காகவும், மற்ற விஷயங்களுக்காக அவர்கள் உபயோகப்படுத்தும் நீருக்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படியே கொஞ்சம் படித்துக் கொண்டே வந்தீர்கள் என்றால்... நுண் நீர் பாசனத்திற்கு விவசாயிகளை ஊக்குவித்து அதை செயல்படுத்த  கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள்  சிஎஸ்ஆர் (CSR - Corporate Social Responsibility) நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார். இங்கு தான் சிக்கல் எழுகிறது. ஏற்கெனவே, கார்ப்பரேட்டுகள் பல தொழில்களில் அடிக்கும் லூட்டிகளால் மக்கள் பெருமளவு பாதிக்கின்றனர். விவசாயத்திலும் கார்ப்பரேட்களை நுழைக்கும் வேலையை ஜக்கி ஏன் செய்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு பேட்டியில் மிகத் தெளிவாக ஜக்கி சொல்கிறார்...

' குறைந்தபட்சம் 10 ஆயிரம் ஏக்கர் என்ற அளவை வைத்துக் கொண்டு விவசாயிகளை இணைக்க வேண்டும். அவர்களின் நிலத்திற்கான பாசனத்தை கார்ப்பரேட்களிடமிருந்து அந்த விவசாயிகள் வாங்க வேண்டும். இங்கு தான் நாங்கள் தீவிரமாக வேலை செய்து வருகிறோம். கார்ப்பரேட்கள் என்றாலே நிலம் பறிபோய்விடும் என்ற பயம் விவசாயிகள் மத்தியில் இருக்கிறது. ஆனால், சட்டப்பூர்வமாக விவசாயிகளின் நிலங்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான சட்ட மாற்றங்களும், வரைவுகளும் கொண்டுவரப்படும். 

அதேபோல், விவசாயத்தில் முதலீடு செய்யும் கார்ப்பரேட்களும் நஷ்டம் ஆகாமல் இருக்க திட்டங்கள் தீட்டப்படும். கார்ப்பரேட்களின் உதவி இல்லாமல் விவசாயிகளால் நுண்நீர் பாசனத்தை செயல்படுத்த முடியாது' என்று சொல்கிறார்.

அதாவது ஒரு இடத்தில் பிரச்னையே இல்லை, அங்கு புதிதாக ஒரு பிரச்னையை உருவாக்கி அதைத் தீர்க்கும் வகையில் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவாராம். நம் நாட்டில் இருக்கும் சட்டங்களை சரியாக அமல்படுத்தினாலே போதும்; பல பிரச்னைகள் தீர்ந்துவிடும். ஏதோ இதுவரை நம் விவசாயிகளுக்கு விவசாயமே தெரியாத மாதிரியும், அதைக் கார்ப்பரேட்டுகள் தான் வந்து சொல்லித்தரப் போவது மாதிரியும் சொல்கிறார். சொல்லப்போனால், விவசாயிகளைவிட கார்ப்பரேட்கள் தான் அதிக கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடங்களில் தான் பிரச்னை பெரிதாக இருக்கும். ஒரு சாமானியமான ஆள் 500ரூபாய்க்கு மூங்கிலை எடுத்துக் கொண்டு ஒருநாள் வியாபாரம் செய்தால், லாபத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போய்விடுவான். ஆனால், பல கோடு முதலீடுகள் செய்து இங்கு எத்தனை கார்ப்பரேட் நிறுவனகள் கடனில்லாமல் இருக்கின்றன? சரி... கடன் தொல்லை அதிகமானால், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டால்? எல்லாவற்றையும் மூடிவிட்டுப் போய்விடுவான். அந்தத் தொழிலாளர்களின் நிலை? 

அதிக நஷ்டத்தில், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் கூட பெரும்பாலானவர்கள் கார்ப்பரேட்களுடனான ஏதோ ஓர் தொடர்பு வைத்திருப்பவர்களாகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு, கரும்பு விவசாயிகள், பருத்தி விவசாயிகள் போன்றோர். பெரு நிறுவனங்களுக்காக உற்பத்தி செய்திடும் இவர்களுக்கு சந்தை அபாயம் மிகவும் அதிகம். 

இன்று நம் விவசாயிகள் கொஞ்சம் லாபம் பார்த்தாலும், சொந்த நிலத்தில் முதலாளிகளாக இருக்கிறார்கள். அது கார்ப்பரேட்களின் கைகளுக்குப் போனால் அவர்கள் கூலித் தொழிலாளிகளாக்கப்பட்டு, கடனாளிகளாகத் தான் மாறுவார்கள். மாற்றப்படுவார்கள்."

அப்போது இதற்கு மாற்றாக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

"நுண் நீர் பாசனத்தை விவசாயிகள் செய்ய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதைக் கார்ப்பரேட்களால் தான் செய்ய முடியும் என்று ஜக்கி சொல்வதில் தான் சிக்கல் இருக்கிறது. நுண்நீர் பாசனத்திற்கு அதிகப்படியான மனித ஆற்றல் (Labour Intensive) தேவைப்படும். அதை நம் விவசாயிகளே சிறப்பாக செய்து கொள்வார்கள். அதற்கு அரசாங்கம் ஜக்கி போன்றோர்களின் பக்கம் நிற்காமல், விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டும். 

கொஞ்சம், கொஞ்சமாக இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். ஒரே நாளில் இந்த மாற்றம் நடந்து விடாது. அப்படியே கொஞ்சம், கொஞ்சமாக எல்லாம் மாறும். "பல பயிர் முறை" (Multi Crop Culture) முறையில் விவசாயம் செய்ய வேண்டும். இது விவசாயிகளை சந்தை அபாயங்களிலிருந்து காப்பாற்றும். ஒரு பயிர் விலை வீழ்ந்தாலும், இன்னொரு பயிர் கைகொடுக்கும். இதற்குப் பெரியளவிலான இடம் எல்லாம் தேவையில்லை. ஒவ்வொரு விவசாயியும் தன்னிடமிருக்கும் 2 ஏக்கர் அல்லது  இரண்டரை ஏக்கர் நிலத்திலேயே சிறப்பாக செய்ய முடியும். இப்படியாக, அடிப்படையிலிருந்து வேலை செய்தால் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். மாறாக,கார்ப்பரேட்களைக் கொண்டுவருவது நிச்சயம் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தும்."

கார்ப்பரேட்கள் நுழைந்தால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அரசே சொல்கிறதே. உங்களுக்கு ஏன் கார்ப்பரேட்கள் மீது இத்தனை கோபம்?

"காரணம் கார்ப்பரேட்டுகள் அடிக்கும் லூட்டிகள் தான். பணத்தையும், அதிகாரத்தையும் கொண்டு அவர்கள் என் மண்ணை, என் வளத்தை, என் மக்களை,  என் எதிர்காலத்தை என எல்லாவற்றையும் சூறையாடுகிறார்கள். அது தான் என் கோபத்திற்கான காரணம். நீங்கள் ஜக்கி சொல்வதை எல்லாம் செய்து பாருங்கள், அதனால் ஏற்படும் அழிவுகளைப் பார்க்கும் போது தான் நான் ஏன் கார்ப்பரேட்களை எதிர்க்கிறேன் என்பது புரியும்.

ஏற்கெனவே, பண பலம், அதிகார பலம் அவர்களுக்கு இருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் அவருக்கு எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. போலீஸ், சிஆர்பிஎஃப் கூட ஜக்கிக்கு பெரியளவில் சப்போர்ட் செய்கிறது. நீங்கள் அவரை எதிர்க்கவே முடியாது. இது ஒரு மிகப் பெரிய அடக்குமுறை, ஒடுக்குமுறையாக இருக்கும். அவர் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராதது விவசாயிகளைத் தான். இந்தத் திட்டத்தின் மூலம் அதையும் அவர் செய்துவிடுவார். "தண்ணீர் மனிதர்" ராஜேந்தர் சிங் சமீபத்தில் கூறியதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரையே இவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். வெள்ளியங்கிரிப் பகுதியில் போராடிக் கொண்டிருக்கும் முத்தம்மாவின் போராட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இவர்களின் குரல்கள் எல்லாம் அப்படியே அடக்கப்படுகின்றன. ஜக்கி கோவைப் பகுதிக்கு மட்டும் ஆபத்தானவர் அல்ல. அவர் இந்த மொத்த தேசத்திற்கும், ஏன் இந்த மொத்த இயற்கைக்குமே மிகப் பெரிய ஆபத்து. "

ஈஷாவை எதிர்க்கும் அளவிற்கும் நீங்கள் காருண்யாவை எதிர்ப்பதில்லை என்கிற ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்படுகிறதே?

"காருண்யாவிற்கு எதிராக வழக்குப் போட்டிருப்பவர்கள் அனைவரும் எங்கள் தோழர்கள் தான். ஆனால், நான் காருண்யாவை விடவும் ஜக்கியை எதிர்க்க முக்கிய காரணம் இருக்கிறது. காருண்யா அரசின் ஒரு திட்டத்தையே முன்னெடுக்கும் திறன் கொண்டவர்கள் அல்ல (Karunya is not a Policy Influencer). ஆனால், ஜக்கி அப்படியல்ல. அரசாங்க ரீதியிலும், அதிகார மட்டத்திலும் மிகப் பெரிய பலம் அவருக்கு இருக்கிறது. அரசிடம் புறம்போக்கு நிலங்களைக் கேட்கிறார். கார்ப்பரேட்களிடம் CSR நிதியைக் கோருகிறார். ஒரு மிகப்பெரிய பேரழிவு அரசியலை அவர் முன்னெடுக்கிறார். காருண்யா மோசமா ஈஷா மோசமா என்று கேட்டால் காருண்யாவை விட ஈஷா தான் ஆபத்தானது என்று சொல்வேன்." 

ஈஷாவின் உண்மை முகத்தை ஆதாரத்தோடு கிழித்தெறிகிறோம் என்று சொன்ன உங்களின் "தர்மத்தைக் காப்போம்" சந்திப்பு ஏன் தள்ளிப் போனது?

" கோவையில் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சி நடக்கவிருந்த இடத்தின் உரிமையாளரை யாரோ மிரட்டியிருக்கிறார்கள். அது யார் மிரட்டியது? அரசா அதிகாரிகளா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. கடைசி நேரத்தில் இடம் தர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால், விரைவில் அந்தக் கூட்டத்தை நடத்துவோம்."

இதுவரை ஜக்கியை நீங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா? ஈஷாவிலிருந்து உங்களுக்கு ஏதும் அழைப்பு வந்திருக்கிறதா?

"இதுவரை அவர்களிடமிருந்து எனக்கு வழக்கு நோட்டீஸ்கள் தான் வந்திருக்கின்றன. அழைப்பெல்லாம் எதுவும் வந்ததில்லை. நானும் அதைத் தான் சொல்கிறேன். நான் மிக வெளிப்படையாக என்னிடமிருக்கும் ஆதாரங்களைக் காண்பித்து, குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன். அவர்கள் அதற்கான பதிலை நேரடியாக அத்தாட்சிகளோடு நிரூபிக்கலாமே. அவ்வப்போது, ஜக்கியின் சீடர்கள் என்னை அழைப்பார்கள். ' சார் எங்க குரு ரொம்ப நல்லவர். நீங்க ஒரு முறை வந்து சந்திச்சுப் பாருங்க. அப்பத்தான் அவரைப் பத்தி புரியும்' என்றெல்லாம் சொல்வார்கள். நானும், 'சந்திப்புக்கு நேரம் வாங்கித் தாருங்கள் நான் வருகிறேன்' என்று சொல்லுவேன். ஆனால், இதுவரை அப்படி என்னை யாரும் அழைத்ததில்லை." 


ஈஷாவின் 'நதிகளை மீட்போம்' திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விஷயங்கள், அதையொட்டி ஜக்கி வாசுதேவ் தெரிவித்த சில கருத்துகள் மற்றும் அதன் மீதான சந்தேகங்கள் குறித்து சூழலியாளர் பியூஷ் மானுஷ் தன்னுடைய நிலைப்பாட்டை இங்கே பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக ஈஷா நிர்வாகம் ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால், அதனை news@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு பின்னர் அது பிரசுரிக்கப்படும்.
 



Trending Articles

Sponsored