``7,000 கோடி ரூபாய் எங்கே அமைச்சரே..?” போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் கேள்விபோக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம்குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில்முடிந்ததாக கூறி தொ.மு.ச, சி.ஐ.டி.யு உள்ளிட்ட14 தொழிற்சங்கங்கள் திடீரென வேலைநிறுத்தப்போராட்டத்தில் குதித்தன. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில், அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்த திடீர் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது.

Sponsored


அந்த மனுவில்,‘போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இந்தமுறையற்றப் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என சொல்லப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், `எவ்விதமுன்னறிவிப்பின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்வகையில் நடைபெறும் எந்தப் போராட்டத்தையும் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் சும்மா இருக்கமுடியாது. எனவே, தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடைவிதிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்கு திரும்பவில்லை என்றால், பணி நீக்கம் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என உத்தரவிட்டனர். இந்த நிலையிலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் உள்ளனர். தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.. 

Sponsored


இதுகுறித்துப் பேசிய அரசாங்கப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், ‘தொழிலாளர்களின் கோரிக்கைளை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். தொழிலாளர்களின் இந்த நியாயமான வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்து வருகிறார்.

Sponsored


அதேபோன்று நீதிமன்றமும் எங்களுடைய போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நீதிமன்றத்தின் மீது இருந்த நம்பிக்கை கேள்விக்குரியாகி உள்ளது. பாரபட்சமான ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பது வேதனைக்குரியது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்படி குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளர்களிடம் நீதிமன்றம் விசாரித்திருக்க வேண்டாமா? இதில் நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பார்க்கும்போது பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் இருப்பது போன்ற ஒரு சூழலைக் காட்டுகிறது.

பலமுறை பேச்சுவார்தை நடத்தியப் பிறகே இந்தப் போராட்டத்தை நடத்திவருகிறோம். எனவே, போராடுவது எங்களுடைய உரிமை. இதில் தொழிலாளர்களை வஞ்சித்து மோசமான தவறை செய்துகொண்டிருப்பது அரசாங்கம். அதை உணர்ந்து பொதுமக்கள் எங்களுடைய பிரச்னையை தங்களுடைய பிரச்னையாக கருதி அரசாங்கத்துக்கு அழுத்தம் தரவேண்டும். 

ஒவ்வொரு தொழிலாளியின் ரத்தத்தை உறிஞ்சிய 7 ஆயிரம் கோடியை அரசாங்கம் காலி செய்துள்ளது. அப்படி தொழிலாளர்களின் பணத்தை  சாப்பிட்டு ஏப்பம் விட்ட அரசின் பிரிதிநிதியான அமைச்சரை அழைத்து கேள்வி எழுப்பாமல் எங்களை நீதிமன்றம் எச்சரிப்பதை ஏற்க முடியாது. பணம் தொலைந்து போய்விட்டது. எனவே திருடியவனைக் கண்டுபிடியுங்கள் எனப் புகார் கொடுக்கப் போனால் தொலைத்தவனையே தூக்கி ஜெயிலில் போடுங்கள் என்று உத்தரவிடுவது தான் நியாயமான தீர்ப்பா? எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்” என்றார்.

 

 இதுகுறித்துப் ஓட்டுநரிடம் பேசியபோது, “அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது எங்களுக்கு அரசாங்கம் தருகிற சம்பளம் குறைவு தான். அப்படி இருக்கும்போது எங்களுடைய போராட்டம் நியாயம் இல்லை என்று சொல்வது தவறு. அதிகாரிகள் மட்டத்தில் அதிகமான நிலையில் ஆட்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், தொழிலாளர்கள் மிகக் குறைவாகவே பணிபுரிந்து வருகின்றனர். இரவு பகலாக உழைக்கும் தொழிலாளியின் பணத்தை அரசாங்கம் சுரண்டுவது எந்த வகையில் நியாயம்? மாணவர்கள், போலீஸார், முதியோர்கள் என பலப்பிரிவினருக்கு பஸ் பாஸ் முறையை ஒதுக்கிவிட்டு போக்குவரத்துறை கடனில் முழ்கியுள்ளது என்று சொல்வது எங்களுடைய கோளாரா? நிர்வாகத்தின் கோளாரா? எனவே, எங்களுடைய கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை” என்றார்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்புகொண்டு பேசமுயற்சித்தபோது, அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.Trending Articles

Sponsored