வேடந்தாங்கலில் களைகட்டும் ஜனவரி சீசன்... மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!



Sponsored



சுற்றுலாவிற்கு உகந்த மாதம் ஜனவரி! வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகளை ரசிப்பதற்கு ஏற்ற சீசனும் இதுதான். இந்த வருடம் வடமாவட்டங்களில் தேவையான அளவு பருவ மழை பெய்திருப்பதால், வேடந்தாங்கலுக்கு வரவேண்டிய பறவைகள் அனைத்தும் வந்துவிட்டன. இதனால் அக்டோபர் 16-ம்தேதி சரணாலயம் திறக்கப்பட்டது. அப்போது சுமார் 4000 பறவைகளே வந்திருந்தன. தற்போது சுமார் 40000 பறவைகள் வேடந்தாங்கலில் இருக்கின்றன. இதனால் பறவைகளைப் பார்க்க சுற்றுலாப்பயணிகள் வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள்.

வேடந்தாங்கல் வரலாறு!

Sponsored


பறவைகள் தங்குவதற்கு ஏற்ப அடர்ந்த மரங்கள் கொண்ட சூழல் இங்கு இருப்பதால், சுமார் 400 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டுப் பறவை இனங்கள் தொடர்ந்து இங்கு வந்துகொண்டிருக்கின்றன. பறவைகள் அதிகமாக வரும் காரணத்தால் வேடர்கள் இந்தப் பகுதிக்கு வரஆரம்பித்தனர். அருகில் உள்ள தாங்கல் என்னும் இடத்தில் தங்கி பறவைகளை வேட்டையாடி வந்தனர்.

Sponsored


இதனால் வேடந்தாங்கல் என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது. பறவைகள் இங்கே வந்து தங்குவது தங்களுக்கும் கிராமத்துக்கும் பெருமை எனக் கருதிய அந்தக் கிராம மக்கள், வேடர்கள் பறவைகளை வேட்டையாட விடாமல் தடுத்தனர். பிறகு அந்தக் கிராமத்தினரே அந்தப் பறவைகளை தங்கள் விருந்தினர் போல பாதுகாத்து வந்தனர். சுமார் 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் ஏரி. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளைப் பாதுகாத்து வந்த கிராமத்தினர், வனத்துறையிடம் இந்த ஏரியைப் பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தனர். இதனால் 1961-ல் தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் இந்தச் சரணாலயம் வந்தது.

பறவைகள் வருவதற்கான ரகசியம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறைய ஏரிகள் இருந்தாலும் வேடந்தாங்கல் ஏரிக்கு மட்டும் பறவைகள் வருவதற்கு காரணம் இருக்கிறது. வேடந்தாங்கல் ஏரியில் நீர்கடம்பு என்னும் மரம் நிறைந்திருக்கிறது. அது நீரில் உள்ள மாசுக்களை சுத்திகரிக்கும் இயல்புடையது. மரங்கள் குட்டையாக இருக்கும். எளிதில் பறவைகள் கூடுகட்டுவதற்கேற்ப படர்ந்த நிலையில் இருக்கும். இதனாலேயே பறவைகள் இங்கே வருகின்றன.

உரம் வேண்டாம் எச்சம் போதும்!

பறவைகள் எச்சத்தில் கால்சியம், பொட்டாசியம் போன்ற பயிருக்குத் தேவையான சத்துகள் இருப்பதால் வேடந்தாங்கல் ஏரிநீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் அடி உரம் இடுவதில்லை. விளைநிலங்களில் வரும் பறவைகளையும் துரத்துவதில்லை. தீபாவளியின் போது பட்டாசுகளையும் வேடந்தாங்கல் கிராமத்தினர் வெடிப்பதில்லை.

எந்தப் பறவை எப்போது வரும்?

இலங்கை, பர்மா, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 30 வகையான பறவை இனங்கள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன. சுமார் 40,000 பறவைகள் ஆண்டுதோறும் வரும். இங்கு வரும் பறவைகள் 50 கிலோ மீட்டர் வரை சென்று இரை தேடும். செப்டம்பரில் நத்தை கொத்தி நாரைதான் முதலில் வரத்தொடங்கும். அதைத்தொடர்ந்து குருட்டுக் கொக்கு, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, பெலிக்கன் உள்ளிட்ட பறவைகள் வரும். அதற்குப்பின் புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், ஊசிவால் வாத்து உள்ளிட்ட வாத்து வகைகள் வரத்தொடங்கும். கடைசியாக டிசம்பர் மாதத்தில் வர்ண நாரைகள் வரத்தொடங்கும்.

எப்போது கிளம்பும்?

குஞ்சுகள் வளர்ந்ததும் பிப்ரவரியிலிருந்து ஒவ்வொரு பறவை இனமாக வெளியேறத் தொடங்கிவிடும். தண்ணீர் தொடர்ந்து இருந்தால், சில குஞ்சுகள் வளர்ந்து இங்கேயே இனப்பெருக்கம் செய்ய நினைக்கும். டிசம்பரில் வந்த வர்ணநாரை, தற்போது கூடுகட்டிக் கொண்டிருக்கிறது. அவை மே மாதம் வரை இங்கே இருக்கும். வாத்து இனத்தைச் சேர்ந்த பறவை, இனப்பெருக்கம் முடிந்து கிளம்பும்போது, ஒரு வாரத்திற்கு தேவையான இரையைச் சாப்பிட்டுவிட்டு கிளம்பும். இந்த வருடம் பெய்த மழையால் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது. அதனால் ஜூலை வரை பறவைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுவட்டார ஏரிகளில் தண்ணீர் இருந்தால், பறவை வாழ்வதற்கான உணவுகள் இருக்கும். அதனால் பறவைகள் தொடர்ந்து இன்னொரு முறை இனப்பெருக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது.

சூப்பர் சீசன் ஜனவரி!

டிசம்பரில் அனைத்துப் பறவைகளும் வந்துவிடும். செப்டம்பரில் வந்த பறவைகள் டிசம்பரில் குஞ்சு பொறிக்க தொடங்கும். டிசம்பர் கடைசியிலிருந்து ஜனவரி வரை வந்தால் அனைத்துவிதமான பறவைகளையும் எந்த நேரத்திலும் கூட்டம் கூட்டமாகக் காணமுடியும். தற்போது நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருக்கின்றன. அதிகாலை நேரத்திலிருந்தே சில பறவைகள் இரைதேட கூட்டம் கூட்டமாகக் கிளம்பிவிடும். ஆண் பறவை, பெண் பறவை என மாறிமாறி அடைகாக்கவும் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகவும் எப்போதும் சில பறவைகள் கூடுகளிலேயே தங்கியிருக்கும். இரை தேடச் சென்ற பறவைகள் இடையிடையே வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துவிட்டுச் செல்லும். மாலை 3 மணிக்கு மேல் பறவைகள் வரத்தொடங்கும். 5 மணிக்கு மேல் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக வந்துவிடும். அப்போது பறவைகளின் சத்தம் அதிகமாக இருக்கும். கூட்டம் கூட்டமாகப் பறவைகளின் வருகையைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.  இருட்ட தொடங்கியதும், குருட்டுக் கொக்கு, நைட் ஹெரான் உள்ளிட்ட பறவைகள் இரைதேட கிளம்பும்.

பறவைகள் பலவிதம்!

கிரேப்லிக்கன் என்னும் பறவை ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறது. அவை சுமார் 8 கிலோ வரை இருக்கும். இந்தப் பறவையின் அலகுப்பகுதியின் கீழ்  உள்ள பை போன்ற அமைப்பில் சுமார் ஒரு கிலோ அளவிற்கு மீன்களைச் சேமிக்கும். சேமித்த மீன்களை தனது குஞ்சுகளுக்கு எடுத்துவந்து கொடுக்கும். பாம்புதாரா என்னும் பறவை சைபீரியா, இலங்கை, உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகிறது. தண்ணீருக்குள் மூழ்கும் இந்தப் பறவை சுமார் ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை இரை தேடும். மீனைப் பிடித்ததும் மேலே வந்து அந்த மீனை தூக்கி வீசி, மீண்டும் தன் அலகால் பிடித்து உண்ணும். வர்ண நாரை என்ற பறவை இறந்த மீனை சாப்பிடாது. அதன் குஞ்சுகள் மூன்று மாதத்தில் ஆரஞ்சு, பிங்க், வெள்ளை, கறுப்பு என நிறம் மாறிக்கொண்டே வரும். குஞ்சுகள் மீது வெயில் படாமல் இருக்க தாய்ப்பறவை இறக்கையை விரித்து இடம் கொடுக்கும். இதுபோல் ஒவ்வொரு பறவைக்கும் ஒரு சிறப்பு உள்ளது. 

வேடந்தாங்கல் வருபவர்கள் கவனத்திற்கு!

ஹோட்டல்கள் இப்பகுதியில் இல்லை என்பதால் வீட்டிலேயே உணவு தயாரித்துக்கொண்டு வரலாம். காரில் வருபவர்கள் நல்ல உணவகம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 15 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருக்கும். விடுமுறை தினங்களில் வந்தால் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக புத்தாண்டு, பொங்கள், அரசு விடுமுறை தினங்களில் பறவையை ரசிக்க நினைப்பவர்கள் இங்கே வருவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். வேடந்தாங்கலுக்கு அருகில் கருக்கிலி பறவைகள் சரணாலயம் இருக்கிறது. ஆனால் அங்கே வாத்து இனங்கள் மட்டுமே இருக்கும். தண்ணீர் இருக்கும் இடங்களில் மட்டுமே அங்கு பறவைகள் தென்படும். சனிக்கிழமையில் வருபவர்கள் வழியில் உள்ள மலைவையாவூர் பெருமாள் கோயிலுக்குச் சென்றுவரலாம்.

என்ன மக்களே... கிளம்பியாச்சா?



Trending Articles

Sponsored