'நீதித்துறையின் எமர்ஜென்சிதான் நீதிபதிகளின் குமுறல்" ஹரிபரந்தாமன்



'உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை' என்று மூத்த நீதிபதிகள் நால்வர் புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாகும். நீதிபதிகள் தற்போது தெரிவித்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக் கோட்டையை அதிரச் செய்துள்ளது. 

Sponsored


டெல்லியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்மேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் ஆகிய நான்கு மூத்த நீதிபதிகள் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், "இந்திய நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் வெளிப்படையாகப் பேசவேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். உச்ச நீதிமன்ற நடைமுறைகளில், கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதேநிலை தொடர்ந்தால், இந்தியாவில் ஐனநாயகம் நீடிக்காது. நீதித்துறையின் நிர்வாகம் சரியில்லை அதுகுறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் பலமுறை நேரடியாகக்  கூறிவிட்டோம். ஆனால், எங்களின் புகாருக்கு அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. எங்கள் கோரிக்கைக்கும் எந்தப் பயனும் இல்லை. அதுபோன்றதொரு நெருக்கடியான நிலையில்தான் மக்கள் மன்றத்துக்கு நாங்கள் வந்துள்ளோம்" என்றார்.  

Sponsored


நாட்டின் மிக உயரிய, மதிப்புமிகுந்த பதவியான நீதித்துறையில் பொறுப்பில் உள்ள நீதிபதிகளுக்கே இந்தநிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி நாடு முழுவதும் உள்ள மக்களிடையே எழுந்துள்ளது. இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பேசியபோது, "நீதித்துறையில் உள்ள நெருக்கடியைக் காட்டுவதாக, நீதிபதிகள் பேட்டி அமைந்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நான்கு நீதிபதிகளும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் மூத்த நீதிபதிகள் ஆவர். 

Sponsored


அப்படிப்பட்டவர்கள் பகிரங்கமாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்கள் மனக்குமுறல்களைக் குற்றச்சாட்டுக்களாக முன் வைத்திருப்பதை சாதாரண விஷயமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நீதிபதிகள் நிறைய  விஷயங்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றின் உண்மைத்தன்மைகுறித்து விசாரிக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தலைமை நீதிபதிக்கு எதிராக, ஒரு நீதிபதி மட்டும் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை. நீதிபதிகளின் பேட்டியிலிருந்து, 'வழக்கு விசாரணைகளில் அரசாங்கம் தலையிடுகிறது; தலைமைப்பதவியில் இருப்பவர்கள் இந்த தலையீட்டில் ஈடுபடுகிறார்கள்' என்பது வெளிப்படுகிறது. எனவே, அரசாங்கம் சொல்கிறது என்பதற்காக குறிப்பிட்ட வழக்கை ஒரு குறிப்பிட்ட பெஞ்ச்-க்கு அனுப்புவது தவறில்லையா? எனவே, தலைமை நீதிபதி சொல்லிவிட்டார் என்பதற்காகவெல்லாம் அதனைச் செய்ய முடியாது. வழக்கில் உள்ள உண்மைத்தன்மையைப் பரிசீலிக்க வேண்டிய நிலை, நீதிபதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, அவர்கள் இவ்வாறு வெளிப்படையாகப் பேசியுள்ளனர். 

நீதிபதிகள் இப்படி வெளிப்படையாகப் பேசியதில் தவறேதுமில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டில் பிரச்னை என்றால் அதனை மூடி

மறைப்பதால் அதற்குத் தீர்வுகாண முடியாது. நீதிபதிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டைப் பார்க்கும்போது, நீதித்துறை இப்போது நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது என்பது தெளிவாகிறது. விசாரணைக்கு வரும் வழக்குகளில், தலைமையில் உள்ளவர்களின் தலையீடு இருந்துவருகிறது என்பது உண்மைதான். இன்றைய சூழலில் அது இன்னும் அதிகரித்து வருவதையே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேட்டியின்மூலம் தெரியவந்துள்ளது. அவ்வாறான அதிகார தலையீட்டிலிருந்து நீதித்துறையைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக, பி.ஜே.பி. தலைவர் அமித் ஷா தொடர்புடைய 'இஸ்ராத் ஜஹான்' வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுகிறார் நீதிபதி ஜெயந்த் பட்டேல். அதன் காரணமாக, அவர் கர்நாடக மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்படுகிறார். அங்கு இரண்டாவது நீதிபதியாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள  தலைமை நீதிபதி ஓய்வு பெற்றவுடன், தலைமை நீதிபதி இடத்துக்கு வருகிறார் ஜெயந்த் பட்டேல். ஆனால், அவர் அந்த இடத்துக்கு வரக்கூடாது என்பதற்காக வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறார். அதன்பின்னர் அந்த நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்கிறார். இவையெல்லாம் நீதிபதிக்கான நெருக்கடியின் ஒரு பகுதிதான். 

அதேபோன்று மற்றொரு உதாரணமாக, சொராபுதீன் வழக்கை விசாரித்த நீதிபதி பிர்ஜீ கோபால் ஹர்கிஷன் லோயா மரணத்தைச் சொல்லலாம். அதன் பின்னர் 'சொராபுதீன் வழக்கை வெளியில் பிரசுரிக்கவே கூடாது' என கேட் போடுகிறார்கள். நீதித்துறையில் உள்ள நெருக்கடிக்கு இவையெல்லாம் ஓரிரு  உதாரணங்கள். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து தற்போது நீதித்துறையில் ஒரு எமர்ஜென்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.



Trending Articles

Sponsored