தேர்தல் எப்போது வந்தாலும் வெற்றிபெறுவோம் - அமித் ஷா!



Sponsored



க்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்றாலும் 2014 தேர்தலில் பி.ஜே.பி. வெற்றிபெற்ற தொகுதிகளை விடவும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நிலையிலும், திரிபுரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலிலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் இணைய தளத்துக்கு பி.ஜே.பி. அகில இந்தியத் தலைவர் அமித் ஷா மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். 

Sponsored


பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல், 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை பி.ஜே.பி. எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பன போன்ற பல்வேறு விஷயங்கள்குறித்து அமித் ஷா அளித்த பேட்டியிலிருந்து....

Sponsored


"நாடாளுமன்றத்துக்கு 2019-ல் நடைபெறும் தேர்தலில் பி.ஜே.பி-க்கு எந்தளவு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறீர்கள்?"

"இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஒடிஷாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி. சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக வார்டுகளில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம். தெலங்கானா, கேரள மாநிலங்களின் உள்ளாட்சித் தேர்தல்களிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பி.ஜே.பி. அடைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி. குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் கோரமண்டலில் அடங்கிய மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் நாங்கள் தீவிர கவனம் செலுத்திவருகிறோம்." 

"இந்தியாவில் 19 மாநிலங்களில் பி.ஜே.பி. ஆட்சியில் உள்ளது. அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பின் இந்த எண்ணிக்கை 21 அல்லது 22 மாநிலங்களாக உயரக்கூடும். எனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிராக இதர கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வியூகம் அமைக்கும் என்று கருதுகிறீர்களா?"

"அதுபற்றி, இப்போதைய சூழ்நிலையில் கணிக்க முடியாது என்றாலும், சில நேரங்களில் அதுபோன்று நடக்கவும் வாய்ப்புள்ளது. பி.ஜே.பி-யின் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் கடுமையாகப் போராட வேண்டிவரும். 2014-ல் பி.ஜே.பி. 6 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தது. 22 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும்பட்சத்தில், அந்த மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். ஜனநாயகத்தில் எதிர்ப்பு என்பது இயல்பான ஒன்றுதான்."

"அதே நேரத்தில், புதிய தலைமுறையினர் மத்தியில் பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு உருவாகும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" 

"அது தானாகவே இயற்கையாக உருவாகக்கூடியது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, எதிர்க்கட்சியாக பி.ஜே.பி. உருவெடுத்தது. அதுபோன்று ஏதாவதொரு எதிர்க்கட்சி உருவாகும் என்பது உண்மைதான்." 

"குஜராத்தில் சாதி அரசியல் ஒர்க் அவுட் ஆகும் என்றும், மகாராஷ்டிராவில் சாதிய வன்முறை எடுபடும் என்றும் சிலர் கருதுவது பி.ஜே.பி-யின் எதிர்காலத்தை பாதிக்காதா?"

"சாதி மற்றும் வாரிசு அரசியல் தொடர்பான பிரச்னைகளை வேரறுக்க முயற்சி செய்தால், அது கடைசி முயற்சியாகவே இருக்கும். பிரச்னைகளுடன் சாதியை நான் இணைத்துப் பார்க்கவில்லை. இது ஒரு இயற்கையான நடைமுறை. ஆனாலும் நாட்டுக்காக, ஜனநாயகத்துக்காக நாங்கள் போராடி வெற்றிபெறுவோம்." 

"உத்தரப்பிரதேசத்திலும், மற்ற மாநிலங்களிலும் இப்போதுள்ள மக்களவைத் தொகுதிகளை உங்களால் தக்கவைத்துக்கொள்ள முடியுமா? "

"முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வளவு பெரிய இந்தியத் திருநாட்டில் பல சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எனவே, எதையும் இப்போதே கணிப்பது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது. ஆனால், தேர்தல் இப்போது நடந்தாலும் மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வரும்." 

"குஜராத் தேர்தலுக்குப் பின்னர், காங்கிரஸ் சற்றே முன்னிலை பெறுவதாகத் தெரிகிறதே...?"

"கர்நாடக மாநிலத் தேர்தலுக்குப் பின் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்."

"தமிழகத்தில் தற்போது திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்து வருவதாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் அரசியலுக்குப் புதிய வரவாக உள்ளார். இப்படியான சூழலில் நிலைமையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். உரிய நேரத்தில் தமிழக பி.ஜே.பி-யுடன் அதுபற்றி விவாதித்து முடிவெடுப்போம்."

"2019-ல் ஒட்டுமொத்தமாக பி.ஜே.பி. முன்னேற்றம் அடையும் என்று கருதுகிறீர்களா? "

"நிச்சயமாக... 2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரும் எதிர்காலம் பற்றி பயந்தனர். நாடு எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதை இளைஞர்கள் அறிந்திராமல் இருந்தனர். மகளிருக்கு பாதுகாப்பற்றநிலை இருந்தது. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பு இல்லாமல் இருந்தன. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு பின்தங்கியிருந்தது. அப்போதைய அரசின் கொள்கைகள் ஸ்திரமற்றதாக இருந்ததே அதற்குக் காரணம்.

முந்தைய ஆட்சிக் காலத்தின்போது, எட்டுமுறை நாட்டின் வளர்ச்சி விகிதம் 5.7 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தது. உலகளாவிய பொருளாதாரத்தின் புதிய குழுவில் இந்தியாவும் உறுப்பினராக இருந்தது. ஜி-7, ஜி-8, ஜி-20 போன்ற குழுக்கள் அவை. ஆனால், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபின்னர் ஏற்படுத்தப்பட்ட புதிய குழுவைத் தொடர்ந்து, உலக நாடுகளே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. அதற்குக் காரணம் பிரதமர் மோடிதான்.

மோடி தலைமையிலான அரசின் பொருளாதாரத் திட்டங்களும், அருண் ஜெட்லி தலைமையிலான நிதித்துறையும் சரியான திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. நிதிப் பற்றாக்குறையோ, வர்த்தகத்துறை பற்றாக்குறையோ, பணவீக்க விகிதமோ எதுவானாலும் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதுடன், சென்செக்ஸ் குறியீடு மிக அதீத உச்சத்தைத் தொட்டுள்ளது. உலக அளவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துவரும் இரண்டு அல்லது மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகத் திகழ்கிறது. முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா விளங்கி வருகிறது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிப்படையான அரசாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, ராணுத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் என எதுவானாலும் அச்சமின்றி முடிவெடுக்கிறோம். அதனால்தான், நாடு முழுவதும் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது."

"விவசாய உற்பத்திப் பொருள்கள் வீழ்ச்சியடைந்துள்ளதால், குஜராத் தேர்தலில் பி.ஜே.பி.-யின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோன்று விவசாயப் பாதிப்பு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளதே?"

"குஜராத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி-க்கு வாக்குகள் அதிகரித்திருப்பதாகவே அறிகிறேன். சவுராஷ்டிரா பகுதியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே ஒரேயொரு பயிர் விளைவிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று பயிர்கள் பயிரிடப்படுகின்றன. உற்பத்தி அதிகரித்திருப்பதாகவே நான் அறிகிறேன். 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தலித் மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமரியாதை செய்தது. அவரின் மறைவுக்குப் பிறகும் மரியாதை செய்யவில்லை. அம்பேத்கரின் புகைப்படத்தை நாடாளுமன்றத்தில் வைக்க காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, அம்பேத்கர் பற்றி காங்கிரஸ் கட்சி எப்படிப் பேச முடியும்? இதை தலித் மக்களும் நன்றாக அறிவர். ஜனநாயகம் தற்போது மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளது."

"அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் ராமர் கோயில் குறித்த உறுதிமொழி அளித்துவரும் உங்களிடம் அதுபற்றி கேள்வி எழுப்பப்படுகிறதே?"

"ஒவ்வொரு தேர்தலின்போதும் நாங்கள் அதற்குப் பதிலளித்து வருகிறோம். நீதிமன்றம் தீர்ப்பளித்த பின், மிகப்பெரிய ராமர் கோயில் அயோத்தியில் கட்டப்படும் என்று."

"முத்தலாக் முறையில் அரசின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்குறித்த பேச்சு ஏற்பட்டுள்ளதே?"

"அதுபற்றி நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. முத்தலாக் தொடர்பான விஷயத்தில் பி.ஜே.பி. எடுத்த நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி, ராஜ்யசபாவில் எதிர்ப்பு தெரிவித்தது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முத்தலாக் தடை சட்டம் கொண்டுவர முயற்சி செய்வோம். இச்சட்டம் நிறைவேறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. "

"இஸ்லாமியர்களிடையே பி.ஜே.பி-க்கு எதிரான நிலைப்பாடு எவ்வளவு காலம் தொடரும்? அவர்களிடையே நிலவும் பீதியை எப்படி பி.ஜே.பி. நீக்கப்போகிறது?"

"நாங்கள் எந்த பீதியையும் நீக்க முயற்சி செய்யப்போவதில்லை. மக்களுக்கு சேவையாற்றவே முயற்சி செய்கிறோம். வாக்காளர்களை நாங்கள் மத அடிப்படையில் பார்க்கவில்லை. மக்களை திருப்திப்படுத்துவோரில் ஒருவராகவே இருக்க விரும்புகிறோம். "

"பொருளாதார ரீதியில், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது நீண்டகாலப் பிரச்னையாக இருந்துவருகிறது. இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துவருகிறது?"

"நான் பொருளாதார மேதையல்ல. என்றாலும், இந்தியா ஒன்றும் யூகோஸ்லோவியா, ருமேனியா, இங்கிலாந்து அல்லது இத்தாலி போன்றதல்ல என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் 125 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 60 கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அரசால் எதுவும் செய்துவிட முடியாது. நாட்டின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறோம். இளைஞர்களை மேம்படுத்தத் திறன் மேம்பாட்டுப்  பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்கி வருகிறோம். பல்வேறு திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறோம். முத்ரா வங்கி மூலம் 9 கோடியே 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதற்கு முன்பு எந்தவொரு அரசும் இதுபோன்ற முயற்சிகளை எடுக்கவில்லை. உத்தரவாதம் ஏதுமில்லாமல் குறைந்த வட்டியில் 10 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய்வரை வங்கிக்கடன் பெற்று இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். "

"கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணி அமைக்குமா?"

"இல்லை. கர்நாடகத்தில் தனித்துப்போட்டியிடுவோம். அனைத்துத் தொகுதிகளிலும் பி.ஜே.பி. போட்டியிடும். எல்லா தேர்தல்களுமே மிகவும் சவால் நிறைந்தவையே. எனவே, அந்த சவால்களை எல்லாம் முறியடித்து வெற்றி பெறுவோம்."

"உங்கள் மகனுக்கு எதிரான வழக்கு மற்றும் லோயா வழக்கு பற்றி... ?"

"இரண்டு விவகாரங்களும் நீதிமன்றத்தில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம்."

Courtesy : Hindustan times



Trending Articles

Sponsored