''டி.டி.வி.தினகரன் புரட்சிப் பயணம்..!'' எடப்பாடிக்கு செக் வைக்கத் திட்டமா?



அ.தி.மு.க கட்சி, இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்றும் சட்டப்போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்றுள்ள வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் டி.டி.வி.தினகரன், தனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதுபோலவே, கட்சியை அதிகாரத்தோடு கைப்பற்ற உள்கட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை, பழைய உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதிமுக தொண்டர்களை தக்க வைக்க இரண்டு தரப்பும் மல்லுகட்டத் தொடங்கிவிட்டன.

Sponsored


அ.தி.மு.க சட்டதிட்ட விதிகளின் படி, கட்சி அமைப்பு தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அதற்கு முன்பாக, பழைய உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்து முடிக்க வேண்டும். அந்த வேலையை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிவைத்தனர். பழைய உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் படிவம் ஆகியவற்றுக்கு ரூ.10 கட்டணம் என்றும் பிறமாநிலங்களுக்கு ரூ.5 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு, புதிய உறுப்பினர்  அட்டை வழங்கப்படும். அதற்கு பிறகு உள்கட்சித் தேர்தல் நடைபெறும்.

Sponsored


தமிழகத்தில் அரசு நிர்வாகத்தை 32 மாவட்டங்களாகப் பிரித்துவைத்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க-வில் 50 மாவட்டங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்து வருகின்றனர். இதில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என்று சுமார் 2000 பேரை கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கியிருக்கிறார். மேலும், மாவட்டம் வாரியாக இன்னும் பல ஆயிரம் நிர்வாகிகள், சிலிப்பர் செல்களாக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள் என்று கணக்கெடுத்துள்ளனர். இவர்களை வெளிப்படையாக நீக்க முடியாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். எனவே, உள்கட்சி தேர்தலை நடத்தி, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை கட்சியின் பொறுப்புக்குக் கொண்டுவரும் திட்டமும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ளது. ஏனென்றால், அ.தி.மு.க.வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி செய்துள்ள சட்டதிட்ட திருத்தங்களின்படி பொதுக்குழு உறுப்பினர்களே, கட்சியின் தலைமை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்று உள்ளது.

Sponsored


அதாவது சுமார் 2000 பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் முடிவு செய்யும் நபரே, கட்சியின் அதிகார பீடத்திற்கு வர முடியும். இப்போது இருக்கும் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் மீது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை இல்லை. எனவே, ஒட்டுமொத்தமாகக் கட்சி நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கையும் உள்கட்சி தேர்தலும் இருக்கும். ஏனென்றால், அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே இனி நடக்கவிருக்கும் உள்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும். அதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

மேலும், டி.டி.வி.தினகரன் ஆதரவு ஆட்களை கட்சியிலிருந்து களை எடுக்கும் வகையிலும் டி.டி.வி.தினகரனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யவும் பேசி வருகிறார்கள். புதிய உள்கட்சி நிர்வாகிகளைக் கொண்டு உள்ளாட்சி மற்றும் அதற்கடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொண்டால் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். மேலும், இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 70 ஆக உயர்த்தும் திட்டமும் இருக்கிறது. அதன் மூலம் ஒரு மாவட்டச் செயலாளருக்கு மூன்று அல்லது நான்கு சட்டமன்றத் தொகுதிகள் என்று பிரித்து கட்சி வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் சொல்லி வருகிறார்கள். கூடுதலாக 30 ஆயிரம் பேருக்கு கட்சிப் பதவி கொடுத்து அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தி கட்சியை வலுப்படுத்த முடியும் என்று மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள். 

இப்படி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கணக்குப் போடும் நிலையில், டி.டி.வி.தினகரன் தனிரூட்டில் அவரது கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதுகுறித்து டி.டி.வி.தினகரன் கூறுகையில், ''அ.இ.அ.தி.மு.க அம்மா'' என்ற பெயரில் கட்சி செயல்பட ஏதுவாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ள இருக்கிறோம். இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வருகிறது. எங்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இன்னும் 10 நாளில் கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள். அதற்கு அடுத்தகட்டமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்'' என்று அறிவித்துள்ளார். மக்களைச் சந்திக்கும் டி.டி.வி.தினகரனின் சுற்றுப்பயணத்துக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக, டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நம் அம்மா இல்லை என்ற காரணத்தால், துரோகிகளை துணைக்கு வைத்துகொண்டு அவர்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்து தமிழகத்தின் குரல் வளையை நெறித்துக்கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு எச்சரிக்கை விடுக்கவும், டெல்லியின் காலடியில் சுருண்டு கிடக்கும் முதுகெலும்பில்லாத இந்தச் சுயநல பழனிசாமியின் ஆட்சிக்கு முடிவு கட்டவும் நாம் சபதம் ஏற்போம். 2.2.18- தஞ்சை வடக்கு மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத்தொகுதி, 3.2.18 - குடந்தை சட்டமன்றத்தொகுதி, 4.2.18 - பாபநாசம், 5.2.18 திருவையாறு ஆகிய தொகுதிகளில் மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணம், துரோக ஆட்சியைத் துடைத்தெறியட்டும். பொன் வாழ்வை தமிழக மக்களுக்குப் படைக்கட்டும். தலைதாழா தமிழகத்தை மீண்டும் நிர்மாணிக்கட்டும்'' என்று கூறியுள்ளார். 

அ.தி.மு.க தொண்டர்களை இழுக்க இரண்டு படைகளும் புறப்பட்டு விட்டன!



Trending Articles

Sponsored