``ஒரே தேசம்... ஒரே தேர்தல் - என்பதன் பின்னணியில் உள்ள அரசியல் இதுதான்...''  - தகிக்கும் அரசியல் தலைவர்கள்



Sponsored



இந்திய அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியிருக்கிறது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் ஆற்றியுள்ள உரை. அதில், ``நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடையே கருத்தொற்றுமை தேவை'' என வலியுறுத்தியுள்ளார். இதே கருத்தை பிரதமர் நரேந்திர மோடியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். அதில், ``மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை, அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுவதால் கூடுதல் செலவாகிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஒரே சீராக்க வேண்டும் என்றால், ஒரே தேர்தல் அவசியமாகிறது'' எனவும் பேசியுள்ளார். நாட்டின் முதல் குடிமகன் முதல் பி.ஜே.பி அமைச்சர்கள் வரை இதே கருத்தை வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவனிடம் பேசியபோது, ``சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது முடியாத காரியம். இந்த முறையானது நடைமுறைக்கு சரிப்பட்டுவராத விஷயம். அதையும் மீறி இந்த நடைமுறையை இவர்கள் கொண்டுவந்தால், 'மாநில ஆட்சி அதிகாரத்தை கலைத்துவிட்டு மொத்த அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்கிற ஒற்றை ஆட்சி முறையாக இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார்களோ' என்ற சந்தேகம் எழுகிறது.

Sponsored


தேர்தல் சட்ட நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவந்து விகிதாசார முறைப்படி தேர்தல் நடத்துகிறோம் என்று இவர்கள் கூறினால், ஒருவேளை அதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கலாம். குறிப்பாக 1996, 1998 ,1999 இந்த மூன்று ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்படி என்றால், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் காலங்களில் எல்லாம் சட்டமன்றங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது என்றால்.... அது சாத்தியம் ஆகுமா? அது எவ்வளவு பெரிய செலவினங்களில் கொண்டுபோய் நிறுத்தும் என்பது தெரியாதா? இவர்கள் இவ்வாறு கூறுவதன் முக்கிய நோக்கம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசின் ஆட்சியைக் கலைத்துவிட்டு நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வர திட்டமிடுகிறார்களா? ஒருவேளை இந்தியாவில் 30 மாநிலங்களிலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு அவர்களுடைய அதிகாரத்தை நடைமுறைப்படுத்த மறைமுகத் திட்டம் வகுக்கிறார்களோ... என்ற சந்தேகமும் எழுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள 356-வது பிரிவை நீக்க

வேண்டும். விகிதாசார பிரதிநிதித்துவப்படி மாநில அரசுகளைக் கலைக்க முடியாத நிலை கொண்டு வரப்பட வேண்டும். அதன் பின்னர் வேண்டும் என்றால், ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற நடைமுறையைக் கொண்டுவரட்டும். அதையெல்லாம் தவிர்த்து விட்டு, ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற நடைமுறை  கொண்டுவரப்பட்டால், அதனை மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

Sponsored


முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அரசியல் விமர்சகருமான பழ. கருப்பையாவிடம் பேசியபோது, ''தேர்தலுக்கான செலவு ஒன்றாக இருக்க அந்த நடவடிக்கை இயலுமானால் நல்லதுதான். ஆனால், அது இயலக்கூடியது அல்ல. 

1952-ல் முதன் முதலாக தேர்தல் நடைபெற்றபோது அனைத்து தேர்தல்களும் ஒன்றாக நடந்தன. ஆனால், அவ்வாறான நிலை காலப்போக்கில் மாறியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஒரே தேர்தல் நடைமுறையைக் கொண்டுவந்தால் இன்றையக் காலச் சூழலுக்கு அது சரிப்பட்டு வராது. ஒரு கட்சி பொரும்பான்மை இழந்து ஆட்சி கலைகிற சூழல் ஏற்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்பார்த்து சட்டமன்றத் தேர்தலோ அல்லது சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்த்து நாடாளுமன்றமோ காத்திருக்க முடியாது . 

குறிப்பாக தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறுபான்மை ஆட்சிதான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் பதவி செல்லும் என தீர்ப்பு வந்தால், இந்த ஆட்சி தனது பலத்தை இழந்து ஆட்சியை விட்டு வெளியேற நேரிடும். அதனால், இந்த சட்டமன்றத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிறுத்தி வைக்க வேண்டுமா? குறிப்பாக ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்துவிட்டால் அந்த மாநிலத்தில் ஆளுநரைக்கொண்டு ஆட்சியை நடத்தலாம் எனப் பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறாரா, அதுவும் தமிழ்நாடு போன்று வேர்கொள்ள முடியாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநரை வைத்துக்கொண்டு ஆள்வது நாமே ஆள்வதுதான் எனவும் பிரதமர் கருதலாம். ஆனால், பிரதமர் மோடியே என்றைக்கும் ஆட்சியில் இருக்கப் போவதில்லை. பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆட்சிக்கு வரும்போது இதே நிலையை அவர்கள் கையாள்வார்களேயானால் அப்போதுதான் இந்த நடைமுறை எவ்வளவு மோசமானது என்பதை அவர் உணர்வார். மேலும் 1952-ல் ஒன்றாக நடத்தப்பட்ட தேர்தல்தானே... பிறகு ஏன் இத்தனை மாறுதல்களை அடைந்துள்ளது என்பதை பிரதமர்தான் சிந்திக்க வேண்டும். குறிப்பாக நாடாளுமன்றமே பெரும்பான்மை இழக்கிற சூழல் ஏற்படலாம். எனவே, தேர்தல் செலவு என்பது ஜனநாயகத்தின் அடிப்படைச்செலவு. பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் பெரும் அரசாங்கம் அதனைச் செலவாக ஏற்கத் தேவையில்லை" என்றார்.

இதுகுறித்துப்பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன்,

``நல்ல விஷயங்களைச் சொல்லி ஏமாற்றுகிற வழிமுறையை பி.ஜே.பி கையாண்டு வருகிறது. இந்த தேசத்தில் ஒரே மாதிரியான தேர்தல் வேண்டும் என அந்தக் கட்சி  நினைத்திருந்தால், மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்திருக்கமாட்டார்கள். மாநில சட்டசபை மெஜாரிட்டி எது என்பதை அந்தந்த மாநிலங்களே தீர்மானிக்க வேண்டும் . 

ஆனால், இந்தியாவில் பண்டித ஜவஹர்லால் ஆட்சிக் காலத்திலிருந்து தற்போதைய பிரதமர் மோடி காலம் வரை... சட்டமன்றப்

பெரும்பான்மையைப் பற்றிக் கவலைகொள்ளாமல், ஆட்சியை இடைநீக்கம் செய்து ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவரக்கூடிய நடைமுறை என்பது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரே தேர்தல் என்று சொன்னாலும்கூட, அரசியல் சட்டப்பிரிவுகள் அதனைஅனுமதிக்கப் போவதில்லை. இப்படியான நடவடிக்கையை பி.ஜே.பி கையில் எடுத்திருப்பதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளது. குறிப்பாக 19 மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களின் நடைமுறை காரணமாக பி.ஜே.பி தனது செல்வாக்கினை இழந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகிறது. அதற்கு உதாரணமாக 'மாடு விழிப்பு உணர்வு' நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய பிறகும் அந்த மாநிலங்களில் அவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. இதன் காரணமாக இந்த மாநிலங்களுக்கு  

 உச்சநீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. மாடு விழிப்பு உணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மாநிலங்களில், கொடூரக் கொலைகள் நடந்துவருகின்றன. மேலும், சில மாநிலங்களில் தலித்கள், இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது போன்ற நடவடிக்கைகளால் செல்வாக்கு இழந்து வருகிறார்கள். செல்வாக்கு இழந்துள்ள அந்த மாநிலங்களில் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவும், மோடிக்கு அதிகமான செல்வாக்கு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற நடைமுறையைக் கையில் எடுத்துள்ளனர். இது பி.ஜே.பி மீதான எதிர்மறை எண்ணத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கை மட்டுமே'' என்றார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா பேசுகையில், ``பி.ஜே.பி-யில் பலம் பொருந்தியவர் மோடி. அதனால் பி.ஜே.பி-யை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி இருந்தனர், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அந்த மாயத்தோற்றம் தற்போது உடையத் தொடங்கியுள்ளது .  

குறிப்பாக குஜராத் தேர்தலில் பி.ஜே.பி பெரும் வெற்றி பெற்றது என்று சொல்லிவிட முடியாது. அதேபோன்று அதற்கு முன்பு நடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி பெரிய அளவில் தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தொடர் தோல்வியின் காரணமாக மோடி குறித்து இவர்கள் உருவாக்கியிருந்த மாய பிம்பம் உடைகிறது. அந்தப் பதற்றத்தின் விளைவாகத்தான் ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கலாம் என்ற முழக்கத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களுடைய இந்த முழக்கம் இந்திய அளவில் எடுபடாது. அப்படியான சூழலில்தான் இந்திய அரசியல் உள்ளது.

குறிப்பாக அரசியல் சட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான காலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் நடத்த முடியாது. அப்படி நடத்த முயன்றால், அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டி வரும். அப்படி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அனைத்துக் கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். பி.ஜே.பி-யின் இந்த நடவடிக்கையை எந்தக் கட்சியும் ஏற்காது. அதனால் ஒரே தேர்தல் என்பதனை நடைமுறைப்படுத்துவதென்பது இயலாத காரியம்'' என்றார். 



Trending Articles

Sponsored