இடைத்தேர்தல் முடிவால் சரியும் பி.ஜே.பி.-யின் செல்வாக்கு!



ந்தியா முழுவதும், வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து கொண்டிருந்த நேரத்தில்தான், ராஜஸ்தானிலும், மேற்கு வங்கத்திலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் ஓசையின்றி வெளியாகி பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தன.

Sponsored


ராஜஸ்தானில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பி.ஜே.பி-யை பின்னுக்குத் தள்ளி ஆரவாரமின்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதேபோல், மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திருணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

Sponsored


ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், ஆல்வர் மக்களவைத் தொகுதிகளுக்கும் மண்டல்கர் பேரவைத் தொகுதிக்கும் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பி.ஜே.பி. படுதோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த மூன்று தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் அடைந்துள்ள இந்த வெற்றி பி.ஜே.பி-யை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது என்றே கூறலாம். மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் பி.ஜே.பி. வேட்பாளரைவிட காங்கிரஸ் வேட்பாளர் விவேக் 12,976 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ஏற்கெனவே பி.ஜே.பி. வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருந்தனர். தற்போது, அந்தத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியிருப்பது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பி.ஜே.பி-க்கும், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கும் மிகப்பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்பட்டது.

Sponsored


இதேபோல், மேற்குவங்க மாநிலத்தில் உல்பெரியா மக்களவை தொகுதி மற்றும் நோவாபாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் பி.ஜே.பி. தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தொகுதிகளில் அம்மாநிலத்தில் ஆளும் திருணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. இம்மாநிலத்தில் மம்தா பானர்ஜிக்கு முன் ஆட்சியில் இருந்த இடதுசாரிக் கட்சியின் வேட்பாளர், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். காங்கிரஸ் கட்சி நான்காம் இடத்திற்குச் சென்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர், "ராஜஸ்தான் காங்கிரஸை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தேர்தலில் ஒவ்வொருவரும் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். இந்த தேர்தல் முடிவு மூலம் ராஜஸ்தான் மக்கள், பி.ஜே.பி-யை நிராகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக சச்சின் பைலட்டை நான் பாராட்டுகிறேன்" என்றார்.

ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் பி.ஜே.பி-யின் தோல்வி குறித்தும், மேற்கு வங்க இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் தோல்வி பற்றியும் மார்க்சிய ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான இரா. ஜவஹரிடம் கேட்டபோது, "பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த மூன்று தொகுதிகளும் ஏற்கனவே பி.ஜே.பி. வெற்றி பெற்றிருந்த தொகுதிகளாகும். மூன்று தொகுதிகளிலுமே பி.ஜே.பி-யைத் தோற்கடித்து, காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தப்பிப்பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அடுத்ததாக இந்த முடிவு. பி.ஜே.பி-யின் 'வளர்ச்சி' வேடமும், சவடால் பேச்சுகளும் கலையத் தொடங்கிவிட்டன என்பதையே இது காட்டுகிறது. ராஜஸ்தானில் கடந்த ஆண்டில் நடந்த மாபெரும் விவசாயிகள் போராட்டம் நினைவு கூறத்தக்கது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி அமல் போன்றவற்றால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவற்றின் வெளிப்பாடே ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவு. 

அதேநேரத்தில் பி.ஜே.பி-யின் கதை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது. அதற்கு மேற்கு வங்க இடைத்தேர்தலே எடுத்துக்காட்டு. இங்கே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. நாடாளுமன்றத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று, தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. சட்டமன்றத் தொகுதியைக் காங்கிரஸிடமிருந்து கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 30 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த இடதுசாரிக் கூட்டணி, இரண்டு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்கும், காங்கிரஸ் நான்காவது இடத்துக்கும் தள்ளப்பட்டு உள்ளன. மேற்கு வங்கத்தில் புதிதாக வளர்ந்துவரும் பி.ஜே.பி. இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பது மிகவும் கவலைதரும் விஷயமாகும். 

மொத்தத்தில் பி.ஜே.பி-யின் செல்வாக்கு சரியத் தொடங்கியுள்ளதே தவிர, அதன் கதை முடிந்துவிடவில்லை என்பதையும், காங்கிரஸ் புத்துணர்ச்சி பெற்று வருகிறது என்பதையும், இடதுசாரிகளின் எதிர்காலம் சவால் மிக்கது என்பதையும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன" என்றார்.

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து, பி.ஜே.பி-யின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டோம். அவர், "இந்த இடைத்தேர்தல் முடிவுகளை வைத்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் அரசை எடைபோடக் கூடாது. இந்தத் தேர்தல் முடிவால் பி.ஜே.பி-க்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது. எந்த மாநிலமானாலும் இடைத்தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது, உள்ளுர் பிரச்னைகளும், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களின் செயல்பாடுகளும்தான். இடைத்தேர்தலில் அவைதான் முக்கியப் பங்காற்றும். அதையும் தாண்டி பல்வேறு உள்ளுர் நிலவரங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். இந்த முடிவுகள், அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எதிரொலிக்காது" என்றார்.



Trending Articles

Sponsored