”தகுதி இல்லாதவர்கள் தேர்வு செய்யப்படுவதே ஊழலுக்குக் காரணம்!” - பல்கலைக்கழக ஊழல் குறித்து கல்வியாளர்கள்தவிப் பேராசிரியர் பதவிக்குப் பல்கலைக்கழகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்துவந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் உள்ளிட்டவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதோடு  இல்லாமல், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதைத் தொடர்ந்து  அவரும் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


இந்த நிலையில், துணைவேந்தர் கணபதியின் கைதுவிவகாரம் தமிழகக் கல்வி நிலையங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து துணைவேந்தர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகின்ற சூழலில், கல்வி நிலையங்கள் மீதான நம்பிக்கை தகர்த்தெறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்.

Sponsored


அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, " பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஊழல் என்பது இன்று...நேற்று..

. நடைபெறும் ஊழல் அல்ல. கடந்த பத்து வருடங்களாகப் பல்கலைக்கழகங்களில் ஊழல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனுவை ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறேன். ஆனால், இதுவரை அந்தக் கடிதத்தின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணபதி ஒருவர் மட்டுமே ஊழல் செய்துவிடவில்லை. நிறைய துணைவேந்தர்கள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. கணபதியின் வழக்கை மையமாகவைத்தே அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர்களைத் தேர்வுசெய்யக்கூடிய பல்கலைகழகத் தேர்வுக் கமிட்டியில் நேர்மையான ஆட்களை நியமிக்க வேண்டும்.தேர்வுக் கமிட்டியில்  இருப்பவர்களே ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எப்படி நேர்மையான துணைவேந்தர்களை அவர்கள்  தேர்வுசெய்வார்கள்?

Sponsored


குறிப்பாகத் துணைவேந்தர் பதவிக்கான தகுதிகளைப் பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்து வைத்துள்ளது. அந்த விதிமுறைகளும், வரைறைகளும் வெறும் பேப்பரில்தான் உள்ளது. அதனை எந்தப் பல்கலைக்கழகத் தேர்வுக் கமிட்டியும் நடைமுறைப்படுத்துவதில்லை. தேர்வுக் கமிட்டியில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆய்வியல் மாணவர்களாக இருக்கிறார்கள் அல்லது அரசியல் தலையீட்டுடன் இயங்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தேர்வுக் கமிட்டியில் இப்படிப்பட்ட நபர்கள் இருக்கும்போது, அவர்கள் இந்த மாதிரியான ஊழல்வாதிகளைத்தான் தேர்வுசெய்வார்கள்.

குறிப்பாக ஆளுநருக்கு நெருக்கமானவரா... கோடிக்கணக்கில் பணம் கொடுப்பாரா... அதிகாரவர்க்கத்தில் இவருடைய செல்வாக்கு எந்த நிலையில் உள்ளது என்பது போன்ற தகுதிகள்தான் இன்றைய துணைவேந்தர்களின் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்துவிட்டுப் பதவிக்கு வரும் அந்த நபர்கள், கொடுத்த பணத்தை எடுக்கும் வேலையைத்தான் பல்கலைக்கழகங்களில் செய்கிறார்களே தவிர, கல்விக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் எண்ணுவதில்லை.தேர்வுக் கமிட்டியும் எந்த விதிமுறையும் இல்லாமல்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. துணைவேந்தர்கள் தேர்வு என்பதும் எந்த வரையறையும் இல்லாமல்தான் நடக்கிறது. அதனால், முதலில் தேர்வுக் கமிட்டியைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தேர்வுக் கமிட்டியில் நியமிக்கப்படும் ஆள்களின் தகுதி, திறமை மற்றும் இதுவரை எந்தப் புகாரிலும் சிக்காத நபரா என்பதைக் கண்டறிந்து நியமிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட நபர்களைக்கொண்டு தேர்வுக் கமிட்டி அமைத்தால் மட்டுமே நல்ல துணைவேந்தர்களை நாம் பெறமுடியும்'' என்றார் மிகத் தெளிவாக.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ''பல்கலைக்கழகம் என்பது ஆய்வியல் தொடர்புடையதாகவும் சமூகத் தொடர்புடையதாகவும் இருக்கக்கூடியவை. அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கக்கூடியவர், சமூக அக்கறையோடு இயங்கக்கூடியவராகவும், அறிவு நுணுக்கமுள்ளவராகவும் இருக்க வேண்டும். ஆனால், அம்மாதிரியான தகுதி என்பதே இங்கு வைக்கப்படுவதில்லை. டாக்டர் பட்டமும், பேராசிரியர் பணி அனுபவமும் தகுதியாக மட்டுமே பார்க்கப்படுகிறதே தவிர, அந்த நபருக்கு சமூக அக்கறை இருக்கிறதா என்பது தகுதியாக வைக்கப்படுவதில்லை. குறிப்பாக ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிற ஆய்வு என்பது, உலகநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விவாதப்பொருளாக அந்த ஆய்வு மாறவேண்டும். அப்படிப்பட்ட ஆய்வைத்தான் உலகத்தரம் வாய்ந்த ஆய்வாக எடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக, ஒரு தாவரவியல் ஆய்வில் புதிய விஷயம் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த கண்டுபிடிப்பானது, உலகப் பல்கலைக்கழகங்களில் பேசப்படுகிற நிலையில் கல்வியாளர்களிடையே தகவல்தொடர்புகள் விரிவடையும். அப்படிப்பட்ட இடம்தான் பல்கலைக்கழகம். அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சமூக அக்கறை, சமூகப் பார்வை, கல்வியில் புலமை உடையவர்களைத்தான் பேராசியராக நியமிக்க வேண்டும். அப்படிப்பட்ட பேராசியருக்குத் துணைவேந்தராக ஒருவர் வருகிறார் என்றால், அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை இன்றைய ஆளுநர்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால், இன்றையச் சூழலில் அப்படியான எந்தத் தகுதியும் இல்லாமல் தேர்வு செய்வதன் விளைவே இப்படிபட்ட ஊழல்கள்  நடக்கக் காரணம்" என்றார். 

இனி, வருங்காலத்திலாவது கல்வியாளர்கள் சொல்வதுபோல் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்களா?Trending Articles

Sponsored