" மீனாட்சி கோயில் நிர்வாகம் சரியில்லை..நாங்கள் என்ன செய்வோம்?'' - வியாபாரிகள் சங்கம் கேள்விSponsored மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீ மற்றக் கடைகளுக்கும் மளமளவென பரவியது. இதனால் சுமார் 30 -க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்தப் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. கோயில் மண்டபத்தின் மேற்கூரையிலும் தீ பற்றியது. இதையடுத்து மண்டபத்தின் ஒரு பகுதி தீயினால் பாதிப்படைந்து இடிந்து விழுந்தது. இந்தத் தீ விபத்துக்கு, கோயில் மண்டபத்தில் உள்ள கடைகள்தான் காரணம் எனக் கூறி அந்தக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது கோயில் நிர்வாகம். இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்கக்கோரி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'இங்குள்ள கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் ஆர்வம் காட்டும் கோயில் நிர்வாகம் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதில் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த விபத்து கோயில் நிர்வாகத்தின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துதான்.

அதற்குக் கடைகளைக் காலி செய்யச் சொல்வதில் எந்த நியாமும் இல்லை. எனவே நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று அதில் கூறியிருந்தது. இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த  8 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அப்போது நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "தீ விபத்து ஏற்பட்டு கோயில் மண்டபம்  கடுமையாக சேதமடைந்துள்ளது. அதனைச் சீரமைக்க  வேண்டியுள்ளது. இதன் காரணமாக 22 கடைகளை அகற்ற  வேண்டியுள்ளது' என்றார். இதனையடுத்து, 'மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை அகற்ற  வேண்டும்' என  உத்தரவிட்டார் நீதிபதி. நீதிமன்றத்தின்  இந்த  உத்தரவுதான் தற்போது விவாதமாகியுள்ளது. இந்த விவாதத்தின் ஒருபகுதியாக 'தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் அருகே அமைந்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்' என்றக் குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. 

Sponsored


இது தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம்... ''மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ

விபத்து, கோயில் நிர்வாகத்தின் கவனக்குறைவால்  மட்டுமே நடந்துள்ளது. இதேபோன்று அண்மையில் திருச்செந்தூரில் கோயில் மண்டபமும் இடிந்து விழுந்துள்ளது. இதற்கும் கடை வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனைப் பராமரிக்க வேண்டிய கோயில் நிர்வாகம் கவனக்குறைவாக இருந்ததே அந்த விபத்துக்கு காரணம். அதற்கு எப்படி கடை வியாபாரிகள் பொறுப்பேற்க முடியும்? அப்படியே கோயில் அருகே உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டாலும் உடனடியாக கடைகளைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்வது சரியானமுறை அல்ல. எனவே இந்த உத்தரவை ஒரு போதும் வணிக சங்கங்களின் பேரமைப்பு ஏற்காது. இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை இந்த அரசாங்கம் எண்ணிப் பார்க்க வேண்டும். 

Sponsored


ஒருமுறை ராஜாஜி அவர்கள் வரி போடும்போது 'அரசாங்கம் வியாபாரம் செய்யக்கூடாது.வியாபாரிகள்தான் வியாபாரம் செய்யவேண்டும்' என்றார். கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கையைப் பார்க்கும்போது, அரசாங்கமே  வியாபாரம் செய்ய நினைக்கிறதோ  என்ற சந்தேகம் எழுகிறது" என்றார் விக்கிரமராஜா.

 இது குறித்து மதுரை மீனாட்சி அம்மன்  கோயில் நிர்வாக தரப்பை தொடர்பு கொண்டு பேசியபோது, நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.வியாபாரிகளுக்கு  மாற்று இடம்  ஏற்பாடு செய்வது  குறித்து கோயில் நிர்வாக துணை ஆணையரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று முடித்துக் கொண்டார் அந்த அலுவர் .  Trending Articles

Sponsored