''மணமகன் இங்கே... மணமகள் எங்கே..?'' காவிரி தீர்ப்பு பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன்



மிழகம் (சென்னை மாகாணம்) - கர்நாடகம் (மைசூர் அரசு) ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே 1807-ம் ஆண்டு தொடங்கிய நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை 210 ஆண்டுகளாக நீடிக்கிறது. இரு மாநிலங்களுக்கு இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தொடரப்பட்ட வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் முடிந்தது. 150 நாள்கள் கழித்து இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்தத் தீர்ப்பு, தமிழகத்தை வஞ்சித்து விட்டதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

Sponsored


காவிரி வழக்கு தொடர்பான ஆவணங்கள், புள்ளி விவரங்கள், மாநிலங்களின் மனுக்கள், குறுக்கு விசாரணைகள், வாத, பிரதிவாதங்கள் ஆகிய அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டும், 1956-ம் ஆண்டு மாநிலங்களிடையே நதிநீர்த் தாவாச் சட்டத்தின்படியும் காவிரி நடுவர் மன்றம் தன் இறுதித் தீர்ப்பை 5.2.2007 அன்று பிறப்பித்தது. அதன்படி, கர்நாடகம் - தமிழ்நாடு எல்லையில், பிலிகுண்டுலு அணை வழியாகவோ அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட இடத்திலோ தமிழகத்துக்கு 192 டி.எம்.சி அடி நீர் கிடைக்கும் என்று அறிவித்தது. இந்த இறுதி ஆணையைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க நடுவர் மன்றம் பரிந்துரைத்தது.

Sponsored


நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து கர்நாடக, கேரள மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிறப்பு முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. நடுவர் மன்ற இறுதி ஆணையில் உள்ள ஒரு சில பகுதிகளை, மேல் ஆய்வு செய்யக் கோரி, 2007ம் ஆண்டு மே மாதம் ஒரு சிறப்பு முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ''காவிரி டெல்டா பகுதிகளில் தொன்றுதொட்டு பயிர் செய்யப்பட்ட குறுவை பயிர் பாசனப் பரப்பு, வெகுவாகக் குறைக்கப்பட்டதை மீண்டும் அனுமதிக்கவும், மற்ற பழைய பாசனத் திட்டங்களில் இரண்டாம் போக பாசனப் பரப்பு குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் அனுமதிக்கவும் மற்றும் பாசனத் திறனை 65 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாகக் குறைத்து அதற்குரிய கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்று கோரப்பட்டது. இதற்கு, கர்நாடக அரசு தன் எழுத்துபூர்வமான அறிக்கைகளை 02.01.2014 அன்று தாக்கல் செய்தது. 

Sponsored


இவ்வழக்கு மீண்டும் 04.01.2017 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கை 07.02.2017 முதல் விசாரிக்கவும் எல்லா மாநிலங்களும் தங்களது ஆரம்பகட்ட எழுத்தறிக்கைகளை அந்நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டது. 07.02.2017 அன்று இவ்வழக்கு பற்றிய ஆரம்பகட்ட வாதங்கள் நடைபெற்று 11.07.2017 முதல் மீண்டும் விசாரணை  ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின் மீது, விளக்கம் / வழிமுறைகள் கோரி, சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும், 1956-ம் ஆண்டைய மாநிலங்களிடை நதிநீர்த் தாவாச் சட்டத்தின் பிரிவு 5(3)-ன் கீழ் மனுக்களை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்தன. காவிரி நடுவர் மன்றம் 10.07.2007-ம் நாளிட்ட அதன் ஆணையில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்ட பின்னரே, காவிரி நடுவர் மன்றத்தில் பிரிவு 5(3)-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் விசாரிக்கப்படும் என ஆணையிட்டது. 

காவிரி  வழக்கு வரலாறு!

காவிரி நடுவர் மன்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் மற்றும் மத்திய அரசும் பிரிவு 5(3)-இன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுக்களை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி ஒரு பல்வகை மனுவை நடுவர் மன்றத்தில் தமிழ்நாடு அரசு 16.03.2012 அன்று தாக்கல் செய்தது. நடுவர் மன்றம், இம்மனுவை ஏப்ரல் 2012-ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஆணையிட்டது. இருந்தாலும், நடுவர் மன்றத்தின் தலைவர் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்ததால், இம்மனு மீது மேல் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. 

பின்னர், நடுவர் மன்றம் அதன் 15.07.2014 நாளிட்ட ஆணையில், ''தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவையோ அல்லது சிவில் மேல்முறையீட்டு மனு எண் 2453/2007-இல் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவை வலியுறுத்தியோ, 1956-ம் ஆண்டைய சட்டப் பிரிவு 5(3)- ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நடுவர் மன்றம் விசாரிக்கலாம்'' என்ற உரிய ஆணையை தமிழ்நாடு அரசு பெறுவது விரும்பத்தக்கதாகும் என ஆணையிட்டது. இவ்வாணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடைக்கால மனுவை 21.07.2014 அன்று தாக்கல் செய்தது. 

பின்வாங்கிய பி.ஜே.பி அரசு!

நடுவர் மன்ற இறுதி ஆணை 19.02.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பின், நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் பரிந்துரைப்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்கும்படி தமிழ்நாடு அரசு, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. பாசன ஆண்டு 2016-2017-ல் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய உரிய நீரை கர்நாடகம் வழங்குவதற்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் தனது 20.09.2016 நாளிட்ட ஆணையில், ''நடுவர்மன்ற இறுதி ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்'' என ஆணையிட்டது. மீண்டும் 30.09.2016 அன்று, இவ்வாணையை உறுதி செய்து, படுகை மாநிலங்கள் தங்கள் உறுப்பினர்களை 01.10.2016-க்குள் நியமனம் செய்ய வேண்டும் என ஆணையிட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்ச நீதிமன்ற ஆணைகளை மாற்றி அமைக்கக்கோரி 03.10.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இம்மனு 04.10.2016 அன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிவைத்து ஆணையிட்டது. உச்ச நீதிமன்றத்தில் படுகை மாநிலங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்புடையதா என்பது குறித்து மத்திய தலைமை வழக்கறிஞர் மற்றும் படுகை மாநில வழக்கறிஞர்கள் 2016 அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் தங்களது வாதங்களை எடுத்துவைத்தனர். இம்மனுக்கள் மீது ஆரம்பக்கட்ட வாதங்கள் 07.02.2017 அன்று நடைபெற்றன. அதன்பிறகு, 21.03.2017 அன்று இவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக 11.07.2017-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதை தொடர்ந்து, விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

'நதிகளை இணைக்க வேண்டும்' என்று சட்டப்போராட்டம் நடத்தி வரும் எழுத்தாளரும், தி.மு.க செய்தித் தொடர்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ''காவிரி வழக்கில் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால், மணமகனை நன்கு அலங்காரம் செய்து பட்டு வேட்டி, பட்டுச் சட்டை அணிவித்து மணமேடையில் ஜோடனை செய்து மணமகளே இல்லாமல் காக்கவைத்த கதைதான். தமிழகத்துடனான இரண்டு ஒப்பந்தங்களை செல்லுபடி ஆகுமென்று சொன்னது சரிதான். கர்நாடகத்திற்கு நீரை அதிகமாக வழங்கிவிட்டு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நிலத்தடி நீரைப் பயன்படுத்தச் சொல்வது என்ன நியாயம்?

தமிழகம் 264 டி.எம்.சி. கேட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் 177.25 டி.எம்.சி. ஒதுக்கியுள்ளது. கேரளத்திற்கும், புதுவைக்கும் காவிரியில் தண்ணீர் கொடுக்கச் சொன்ன உச்சநீதிமன்றம், அங்கு ஏன் நிலத்தடி நீரை கணக்கில் கொள்ளவில்லை. அதுபோக குறிப்பாக காவிரி பாசனம் பாயும், திருவாரூர், நாகை, பூம்புகார் வரை கடலையொட்டிய பகுதி. அந்த நிலத்தடி நீரில் கடல் நீரும் சேரும். அப்படி இருக்கும் போது நிலத்தின் நீரின் அளவில் இப்பகுதியில் கடல் நீரும் உள்ளே சேரும். மழை பெய்தால் நிலத்தடி நீர் அதிகரிக்கும், மழை பொய்த்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். இந்த நிலத்தடி நீர்மட்டத்தினை எப்படி அளவு கோலாகக் கொள்ள முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்தால் மட்டும் என்ன நடந்துவிடும். தமிழகம் எதிர்பார்த்த நீரின் அளவையே குறைத்துவிட்டார்கள். கார்நாடகாவுக்கு அதிகமாக வழங்கியது நியாயமில்லை. 

பல சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஓர் ஒப்பந்தம் இறுதியானது. அதுதான் காவிரியின் முதல் ஒப்பந்தம். 1910-ல் இந்த தாவா சற்று விஸ்வரூபமெடுத்தது. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 1924-ம் ஆண்டு திரும்பவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறான கடந்த கால வரலாறு தொடங்கி இன்றைக்கு வரை தீர்க்கப்படாத சிக்கலாக உள்ளது. தமிழகம் வஞ்சிக்கப்பட்டது'' என்று கூறினார்.



Trending Articles

Sponsored