''பதவியைக் காப்பாற்ற அமைச்சர் நடத்திய ஆய்வு..!''



Sponsored



தமிழகத்தில் 2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர், கே.பி. அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பின்னரும் அதே துறையை இவர் கவனிக்கிறார். ஆனால், இதுவரை இல்லாதவகையில், திடீரென்று பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் பல அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கணபதியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர் அலுவலகம், ஆளுநர் மாளிகை, துணைவேந்தர் தேர்வுக் கமிட்டி மற்றும் உயர் கல்வித்துறையில் யார் யாரெல்லாம் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று பல அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி இருக்கிறாராம். இதையடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அதிர்ச்சியடைந்துள்ளார். 

Sponsored


'வேந்தர்' என்கிற முறையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொறுப்பு என்பதால் அவரும், துணை வேந்தர் கணபதி கைதான விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார். 

Sponsored


பல்கலைக்கழகங்களில் ஊழல் குறித்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''பேராசிரியர் நியமன ஊழல்கள் தொடர்பாக துணைவேந்தர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ஆசிரியர் நிலையில் உள்ளவர்களைக் கைதுசெய்துவரும் காவல்துறையினர், இந்த ஊழலில் அதிகாரப்படி நிலையின் உச்சத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக ரூ. 8 கோடி லஞ்சம் கொடுத்ததாக கணபதி கூறியிருக்கிறார். இந்தத் தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமன ஊழல் என்பது புதிதாக முளைத்த விஷயமல்ல. 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதுதான். இந்த ஊழலின் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டுவந்து, அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதுதான் உயர் கல்வித்துறையைத் தூய்மைப்படுத்த உதவும். மாறாக, பல்கலைக்கழக ஊழலில் சுண்டெலிகளைப் பிடித்துவிட்டு, பெருச்சாளிகளை மிகவும் சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது புதுப்புது வடிவங்களில் ஊழல்கள் தலையெடுத்து தழைத்தோங்கவே உதவும்.

பாரதியார் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. அனைத்துக்கும் மூலமாக இருப்பதும், இருந்ததும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள்தாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக ஊழல்களைக் களைய முடியாது. எனவே, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை தூய்மைப்படுத்துவதற்காக, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தம் வழங்குவதற்கு வெளிப்படையான புதிய முறை உருவாக்கப்பட வேண்டும். 

பல்கலைக்கழக ஊழல்களின் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வருவதற்காக மத்தியப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் புலனாய்வுக் குழு (CBI- SIT) விசாரணைக்கு ஆளுநர் ஆணையிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், ஆளுநர் மாளிகையும் தாமதம் செய்தால் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்'' என்று எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின்  துணைவேந்தர்களையும் சென்னைக்கு அழைத்து ரகசிய ஆய்வு நடத்தியுள்ளார் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். பிப்ரவரி 16-ம் தேதி காலை சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள ஓர் அரங்கத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மாலைவரை நீடித்தது. மதியம் வரை இந்தக் கூட்டம் நடப்பதை பத்திரிகைகளுக்குச் சொல்லாமல், ரகசியமாக வைத்திருந்தனர். பின்னர் கூட்டம் நடந்த இடத்தில் பத்திரிகையாளர்கள் திரண்டுவிட்டனர். அதன் பிறகே இந்தக் கூட்டம் குறித்த புகைப்படங்களை உயர் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. 

இந்தக் கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், செயலாளர் சுனில் பாலிவால் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். 

அதில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ''2016-ம் ஆண்டிலிருந்து, இதுவரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் செய்யப்பட்ட பணி நியமனங்கள் பற்றிய விவரம் தேவை. அலுவலக உதவியாளர் முதல் பேராசிரியர் வரை அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பதவி நியமனத்திலும் என்னென்ன விதிகள் கடைபிடிக்கப்பட்டன என்பது பற்றிய விவரம், புதிய விதிகள் தேவைப்பட்டால் அதுபற்றிய ஆலோசனைகள் வழங்கலாம். புதிய நியமனங்களை ஒளிவு மறைவு இல்லாமல் நடத்த வேண்டும். தகுதி அடிப்படையில் அனைத்து நியமனங்களும் நடைபெற வேண்டும். புதிய பாடத்திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள், பல்கலைக்கழக நிதி நிலவரம் போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.

கோவை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் துணைவேந்தர் கைது சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்றதோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்தே, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆளுநரின் கோபப் பார்வை பட்டுவிட்டால் எங்கே தங்களது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று உயர் கல்வித்துறை பரிதவிக்கத் தொடங்கியிருப்பதையே இந்த அவசரக் கூட்டம் வெளிப்படுத்துகிறது.



Trending Articles

Sponsored