சரிந்த தமிழக பங்கு... 1924 காவிரி ஒப்பந்தம் முதல் 2018 தீர்ப்பு வரை என்ன நடந்தது? #CauveryVerdict   



Sponsored



'பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்த போது, கட்டியிருந்த கோவணம் களவாடப்பட்டது' என தமிழில் புகழ்பெற்ற கவிதை ஒன்று உண்டு. தமிழக விவசாயிகள், மக்களின் நிலை இன்று அப்படியாகத்தான் இருக்கிறது. 378.40 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகாவிடம் இருந்து பெற்று வந்த தமிழகம், அதை உறுதி செய்ய கோரிக்கை விடுத்து, காவிரி தீர்ப்பாயத்தை  நாட, 1991ம் ஆண்டு காவிரி தீர்ப்பாயம் கொடுத்த இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்தின் பங்கு 205 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது.

205 டி.எம்.சி. என்பது நிச்சயம் போதாது எனச்சொல்லி முறையிட 2007ல் வந்த காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, 192 டி.எம்.சி.தான் தமிழகத்துக்கு என்றது. 192 டி.எம்.சி. ஒதுக்குவது என்பது நியாயமற்றது என உச்சநீதிமன்றத்தை நாட, இன்னும் 14.75 டி.எம்.சி.யை குறைத்து, தமிழகத்துக்காக பங்கீடு 177.25 டி.எம்.சி. தான் என்கிறது. இதற்காகப் போராடிய இந்த 45 ஆண்டுகளில் தன்னுடைய உரிமை முழுவதையும் இழந்து நிற்கிறது தமிழகம். 1924 ஒப்பந்தத்தில் பெற்றதை, அடுத்தடுத்த ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, உத்தரவில் தமிழகம் இழந்து கொண்டே வந்திருக்கிறது. 1924 ஒப்பந்தம் துவங்கி தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு வரை என்ன நடந்தது என்பதைத்தான் இங்கே பார்க்கவிருக்கிறோம்.

Sponsored


சென்னை மாகாணம் -  மைசூர் சமஸ்தானம் இடையேயான ஒப்பந்தம் - 1924

                       தமிழ்நாடு பெற்ற மொத்த நீர் பங்கீடு                               :     575.68 டி.எம்.சி
                       கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு கிடைத்த நீர்  :     378.40 டி.எம்.சி.
                       கர்நாடக பெற்ற நீர் பங்கீடு                                                  :     177.00 டி.எம்.சி.

1924ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசால் முதல்முறையாக காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அப்போதைய  சென்னை மாகாணத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்குமிடையே இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. காவிரியில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளத்துக்குக் கிடைக்கும் மொத்த நீர் என்பது 740 டி.எம்.சி. என அப்போது கணக்கிடப்பட்டிருந்தது. இதில் தமிழக அரசுப் பெற்ற பங்கு 575.68 டி.எம்.சி.

Sponsored


பலமுறை பேச்சுவார்த்தை நடந்த பின்னரே, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 'பேச்சுவார்த்தையில் கொடுத்து வாங்கும் உணர்வு இருவரிடமும் மேலோங்கி இருந்தது. அதனால் தான் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது' என அப்போதைய மைசூர் திவான் பாராட்டியிருந்தார். அந்தளவு ஒரு மிக முக்கியமான ஒப்பந்தமாக இது பார்க்கப்பட்டது.

1924 ஒப்பந்தம் தமிழகத்தின் மேட்டூர் அணையையும், கர்நாடகத்தில் கிருஷ்ணசாகர் அணையையும் அடிப்படையாக வைத்துப் போடப்பட்டிருந்தது. அதன்படி, 1934ம் ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 1934ம் ஆண்டு முதல் மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து சராசரியாக 378.4 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்து வந்தது. காவிரி மற்றும் கிளை நதிகளின் மூலம் கிடைக்கும் மொத்த நீரான 740 டி.எம்.சி.யில் தமிழகம் பயன்படுத்திக் கொண்ட சராசரி நீரின் அளவு 573.4 டி.எம்.சி. ஆகும்.

1924ம் ஆண்டு போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 50 ஆண்டுகளுக்கான ஒப்பந்தமாகச் செயல்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் என்றாலும், 50 ஆண்டு ஒப்பந்தம் என்பதால் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னரும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காவிரி நீர் பகிர்வு நடந்து வந்தது.

1960களில் துவங்கியது சிக்கல்

1956ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, காவிரி நீர் பங்கீட்டில் சிக்கல் எழத்துவங்கியது. காவிரி நதியின் பிறப்பிடமான குடகு, கர்நாடகத்தின் பகுதியாக மாறியது. மெட்ராஸ் மாகாணத்தில் காவிரி நீரைப் பயன்படுத்தி வந்த காரைக்கால் புதுவை யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக மாறியது. காவிரியின் கிளை நதியான கபினி உருவாகுமிடம் கேரளாவில் அமைந்திருந்தது. இதனால் கேரளாவுக்கு, புதுவைக்கும் காவிரி நீரில் பங்கு கொடுக்க வேண்டிய சூழல் உருவானது. மறுபுறம் 1950களில் கபினி அணை கட்டுவது தொடர்பாகத் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் முரண்பாடு எழத்துவங்கியிருந்தது.

இதற்கான பேச்சுவார்த்தை 1960களில் துவங்கியது. ஆனால், 1960களின் பிற்பகுதியில் ஒப்பந்தத்துக்குப் புறம்பாக நீர்த் தேக்கங்களை கர்நாடக கட்டத்துவங்க சிக்கல் முற்றியது. 1968ம் ஆண்டு கர்நாடக முதல்வர் வீரேந்திரபாட்டிலுடன், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தினார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அமைச்சர் தலைமையில் நடந்த முதல் பேச்சுவார்த்தை இது தான். 1970ல் இந்தப் பேச்சுவார்த்தையில் கேரளமும் இணைந்து கொண்டது. ஆனால் 1924 ஒப்பந்தத்தை ஏற்க முடியாது எனக் கர்நாடகம் மறுக்க, பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 

முதல்முறையாக நீதிமன்றத்தை நாடிய தமிழகம்

இதையடுத்து, 1970ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, 'காவிரிச் சிக்கலை 1956ம் ஆண்டு தண்ணீர் தகராறுச் சட்டப்படி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்' எனக்கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.  தீர்ப்பாயம் கூடாது  என எதிர்த்தது கர்நாடகம். அப்போதைய இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு கர்நாடகாவின் பக்கம் நின்றது. இதையடுத்து, 1971ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு.

'தீர்ப்பாயம் அமைக்கும்படி மத்திய அரசுக்குக் கட்டளையிட வேண்டும். துணை ஆறுகளின் குறுக்கே அணை கட்ட தடை விதிக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய... தஞ்சை மாவட்ட விவசாயிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். காவிரி நதிநீர் சிக்கலுக்காக தொடர்ந்த முதல் வழக்கு இது.
ஓராண்டுக்குள்ளாக இந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணலாம்' என அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சொல்ல.. வழக்கினைத் திரும்பப் பெற்றார் கருணாநிதி.

மூன்று மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தம் - 1972

தமிழ்நாடு பெற்ற மொத்த நீரின் பங்கு :     489 டி.எம்.சி
கர்நாடகாவில் இருந்து கிடைத்த நீர்      :     361 டி.எம்.சி.  
கர்நாடகாவின் பங்கு                                :    177 டி.எம்.சி.
கேரளாவின் பங்கு                                 :    5 டி.எம்.சி.

பிரதமர் இந்திராகாந்தியின் அறிவுரைப்படி, 1972ம் ஆண்டு மே மாதம் மத்திய அமைச்சர் கே.எல்.ராவ் முன்னிலையில் 3 மாநில முதல்வர் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடகா முதல்வர் தேவராஜ் அர்ஸ், கேரளா முதல்வர் அச்சுத மேனன் ஆகியோர் பங்கேற்றனர். உண்மைக்குழு அமைக்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து காவிரி நீர் பகிர்வு குறித்து ஆய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. 

1972ம் ஆண்டில் அப்போது இருந்த நீர் பங்கீட்டை இந்தக்குழு உறுதி செய்தது. மொத்த நீர் 671 டி.எம்.சி.யில், தமிழகம் 489 டி.எம்.சி., கர்நாடகா 177 டி.எம்.சி, கேரளா 5 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்தலாம் எனச்சொன்னது அந்த அறிக்கை. குழு அளித்த அறிக்கையில் படி, தமிழ்நாட்டுக்கு 489 டி.எம்.சி., கர்நாடகாவுக்கு 177 டி.எம்.சி., கேரளாவுக்கு 5 டி.எம்.சி. நீர் கொடுக்க வேண்டும் என  முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெறுவதில் சிக்கல் ஏற்படத்துவங்கியது.

நீண்ட இழுபறிக்குப் பின் அமைக்கப்பட்டது தீர்ப்பாயம்

1974ம் ஆண்டில் இந்த நெருக்கடி மேலும் முற்றியது. 1924ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதுவரை காவிரி நீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்த நிலையில், 50 ஆண்டு ஒப்பந்தம் முடிந்து விட்டதாகச் சொல்லி தண்ணீர் விட மறுத்தது. நீர்பாசனத்துறை அமைச்சர் ஜெகஜீவன்ராம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. நடப்புச்சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

தொடர்ச்சியாக 1976ம் ஆண்டு நெருக்கடிக் காலத்தின் போது சமரசத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. தமிழகம் பெற்று வந்த பங்கை 389 டி.எம்.சி.யாக குறைத்து, கர்நாடகம், கேரளாவுக்குக் கூடுதல் நீர் தரலாம் எனச் சொன்னது அந்தத் திட்டம். நெருக்கடி கால முடிவு என்பதால் இதை மூன்று மாநிலமும் ஏற்கவில்லை. 1968ல் துவங்கிய காவிரி நதிநீர் சமரச உடன்படிக்கைக்காகத் துவங்கிய அமைச்சர்கள் கூட்டம், 1990ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களாக நடந்தும் எந்தப் பலனும் இல்லை. இடையில், காவிரி நீர் சிக்கல் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காவிரி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட... 1990ம் அண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, காவிரி தீர்ப்பாயத்தை அமைத்தது. 

1972ம் ஆண்டு நடைமுறையில் இருந்த அளவு தண்ணீருக்கும் மேல் எந்த மாநிலமும் பயன்படுத்தக்கூடாது. தண்ணீரைத் தேக்கி வைக்கக்கூடாது எனத் தீர்ப்பாயத்திடம் தமிழக அரசும், புதுவையும் முறையிட்டது. ஆனால் இந்தக் கோரிக்கையை தீர்ப்பாயம் ஏற்கவில்லை. இதையடுத்து இடைக்கால ஆணைக் கோரி மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழகம். 

காவிரி ஆற்று நீர்ச்சிக்கல் தீர்ப்பாய இடைக்கால ஆணை - 1991

தமிழ்நாடு பெற்ற நீரின் பங்கு     :    205 டி.எம்.சி
மேட்டுர் அணைக்குச் சராசரியாக வரும் நீரின் அளவைக்கொண்டே கணக்கிடப்பட்டது.
காவிரியின்  ஒட்டு மொத்த நீரின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படவில்லை.
1972 ஆம் ஆண்டு முதலமைச்சர்கள் கூட்டத்தில் ஏற்கப்பட்ட முடிவை நடுவர் மன்றம் நிராகரித்தது.

இடைக்கால நிவாரணமாக, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 305 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் எனக்கோரியது தமிழகம். 1991 ஜூன் மாதம் 25ம் தேதி தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவை வெளியிட்டது. 1924ம் ஆண்டு ஒப்பந்தத்துக்கு உயிரில்லை எனக்கூறி, தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீர் கணிசமாகக் குறைக்கப்பட்டது. 1980-81 முதல் 1989-90ம் ஆண்டு வரை 10 ஆண்டுக் காலத்தில் தமிழகத்துக்குக் கொடுக்கப்பட்ட அதிகம் தண்ணீர் வந்த 2 ஆண்டுகளையும், குறைவாகத் தண்ணீர் வந்த இரு ஆண்டுகளையும் நீக்கி விட்டு, மற்ற 6 ஆண்டுகளின் சராசரியை கணக்கிட்டு, தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. என இடைக்கால உத்தரவில் அறிவித்தது தீர்ப்பாயம்.

இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 378.40 டி.எம்.சி  தண்ணீர் 205 ஆக குறைக்கப்பட்டது பெரும் அநியாயம் எனச் சொல்லப்பட்டது. அதேநேரத்தில் இதையாவது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உடன் ஒலித்தது. தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் மாதத்தில் அரசிதழில் வெளியிடப்பட... கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர். தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர முடியாது எனச்சொல்லி கர்நாடகம் உச்சநீதிமன்றத்தை நாடியது. மீண்டும் சிக்கல் வலுத்தது.

போதிய மழை இல்லை. அதனால் இடைக்கால ஆணையை நடைமுறைப்படுத்த முடியாது எனச்சொல்லி, 1992ம் ஆண்டு துவங்கி 1995ம் ஆண்டு வரை தண்ணீர் கொடுக்க மறுத்தது கர்நாடகம். இந்த முறை தமிழகம் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பாயத்திடமும் முறையிட்டது. 11 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்றது தீர்ப்பாயம். கர்நாடகம் ஏற்கவில்லை. மீண்டும் நீதிமன்றத்தை நாட... பிரதமர் இதில் தலையிட உத்தரவிட்டது. இதையடுத்து பிரதமர் தலைமையில் 4 மாநில முதல்வர்களை உறுப்பினராகக் கொண்ட காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் அதனால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

காவேரி நடுவர் மன்றம் இறுதித்தீர்ப்பு - 2007

கர்நாடகாவில் இருந்து கிடைத்த நீர்      :     192 டி.எம்.சி.  
கர்நாடகாவின் பங்கு                                :    270 டி.எம்.சி.
கேரளாவின் பங்கு                                 :    30 டி.எம்.சி.
புதுவையின் பங்கு                           : 7 டி.எம்.சி

இடைக்கால ஆணை வழங்கி 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 2007ம் ஆண்டு இறுதித்தீர்ப்பை வழங்கியது தீர்ப்பாயம். இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி.யாக இருந்த தமிழகத்தின் பங்கீடு, இறுதித்தீர்ப்பில் மேலும் குறைந்து 192 டி.எம்.சி. ஆனது. இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியளித்தது. கர்நாடகம் இதையும் கொடுக்க மறுத்தது. தமிழகம், கர்நாடக மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை நாடின.

இதற்கிடையே, 2016ம் ஆண்டு '15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்து கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்ல.. சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் தான், 10 ஆண்டுக்காலப் போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 2007 தீர்ப்பாயம் கொடுத்த இறுதித்தீர்ப்பில் பெருமளவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருந்தாலும், தமிழகத்துக்குக் கொடுக்கும் தண்ணீரின் அளவில் இருந்து மேலும் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு, தமிழகத்துக்கு கர்நாடகம் கொடுக்க வேண்டிய நீரின் அளவு 177.25 டி.எம்.சி.யாக உத்தரவிட்டிருக்கிறது. கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, 1924ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி 1972ம் ஆண்டு வரை, 378 டி.எம்.சி தண்ணீரைப் பெற்று வந்த தமிழகத்தின் பங்கு, இன்று 177.25 ஆக குறைந்திருக்கிறது. 1972 வரை பெற்று வந்த நீரில் இது பாதிக்கும் குறைவாகும். 


 

உச்சநீதிமன்றத் தீர்ப்பு - 2018

கர்நாடகாவில் இருந்து கிடைத்த நீர்      :     177.25 டி.எம்.சி.  
கர்நாடகாவின் பங்கு                                :    284.75 டி.எம்.சி.
கேரளாவின் பங்கு                                 :    30 டி.எம்.சி.
புதுவையின் பங்கு                           : 7 டி.எம்.சி

'காவிரி மேலாண் வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும். அதில் எந்தச் சமரசமும் கூடாது' 'நதி என்பது ஒரு மாநிலத்துக்கு மட்டும் சொந்தமல்ல. தேசத்துக்குச் சொந்தமானது. அதில் அனைவருக்கும் உரிமை இருக்கிறது' என்பன போன்ற உத்தரவு மட்டுமே ஆறுதல் அளிக்கும் படி இருக்கிறது.

இனி மேல்முறையீடு செய்ய வழியில்லை என்ற நிலையில், இந்தத் தீர்ப்பை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை. இதுவரை எந்தத் தீர்ப்பையும் ஏற்காத கர்நாடகா இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது. 177 டி.எம்.சி.யாக இருந்த தண்ணீர் அளவை 284.75 டி.எம்.சியாக உயரத்திக்கொண்டிருக்கிறது கர்நாடகம். 

மறுபுறம் தமிழக அரசும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறது. தமிழகத்துக்கு இது நிச்சயம் வெற்றியல்ல. 2007 இறுதித்தீர்ப்போடு ஒப்பிடுகையில், தண்ணீர் அளவு குறைந்ததைத் தவிர எதுவும் புதியது இல்லை. இப்போதைக்கு மேலாண் வாரியம் அமைக்கப்படும் என்பது மட்டுமே ஒரே ஆறுதல். காலம் கடத்தாமல் உரியக் காலத்தில் மேலாண் வாரியத்தை அமைத்தால் மட்டுமே ஆறுதலாவது கிடைக்கும் என்பது தான் உண்மை.


 



Trending Articles

Sponsored