Sponsored
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி வைக்க, மார்க்ஸிஸ்ட் கட்சி தனி ரூட் போடுகிறது. 'தமிழகத்தில் தோழமைக்கு தி.மு.க.; தேர்தல் கூட்டணிக்கு கமல்ஹாசன்' என்ற நோக்கில் மார்க்ஸிஸ்ட் கட்சியின் பாதை சென்றுகொண்டிருப்பதை தூத்துக்குடியில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் அலாரம் அடித்து வெளிப்படுத்தியுள்ளார் பிரகாஷ் காரத்.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைத்து வருகிறார். மக்கள் நலக் கூட்டணியை நடத்தி வந்த மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு அதனை மூட்டை கட்டிவிட்டு தி.மு.க பக்கம் வந்துவிட்டனர். சட்டமன்ற உறுப்பினராக 60 ஆண்டுகளைக் கடந்த கருணாநிதிக்கு 'வைரவிழா' பொதுக்கூட்டத்தை தி.மு.க நடத்தியது. இந்தக் கூட்டத்தில், ராகுல்காந்தி, மார்க்ஸிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்பட தேசியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதன்பின் நடந்த முரசொலி பவளவிழாவிலும் மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ம.தி.மு.க என்று தோழமைக் கட்சிகள் கலந்துகொண்டன. சமீபத்தில் நடைபெற்ற 'பேருந்துக் கட்டண உயர்வு' போராட்டங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தி.மு.க தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Sponsored
இதற்கிடையில், மார்க்ஸிஸ்ட் கட்சியின் டெல்லி தலைமையில் அகில இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டுவது தொடர்பாக முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இப்போதைய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் இருந்துவருகிறது. அக்கட்சியின் உயர்மட்டக் கூட்டங்களில் இதுபற்றிய விவாதங்கள் கடந்த சில மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும் இடையே மோதல் இருக்கிறது. இருவருக்கும்தான் ஆட்சியைக் கைப்பற்ற நேரடிப் போட்டி. எனவே, கேரள கம்யூனிஸ்ட் தலைவர்கள், 'காங்கிரஸ் வேண்டாம்' என்று சொல்லி வருகிறார்கள். மேலும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் உள்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் காங்கிரஸ் கட்சிமீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, ஊழலுக்கு எதிராகப் பிரசாரம் செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியோடு எப்படிக் கூட்டு வைத்து தேர்தலைச் சந்திப்பது.... என்று கேள்வி கேட்கிறார்கள். 'ஊழல் கட்சிகளே வேண்டாம்; புது அணியை உருவாக்குவோம்' என்ற விவாதங்களும் உயர்மட்டத் தலைவர்களிடையே ஓடிக்கொண்டிருக்கின்றன.
Sponsored
ஆனால், சீதாராம் யெச்சூரி போன்றவர்கள், ஒட்டுமொத்தமாகக் காங்கிரஸ் கட்சியை ஓரம் கட்டிவிட்டு பி.ஜே.பி-யை வீழ்த்துவது எப்படி... என்று கேள்வி எழுப்புகிறார்கள். 'மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு மிகுந்துள்ள நிலையில், அவர்களை விட்டுவிட்டுத் தலைதூக்க முடியாது. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு தனித்துவமான பிரச்னைகள் உள்ளன. அதை மையப்படுத்தித்தான் தேர்தலைச் சந்திக்க முடியும். அதுதான் வெற்றிக்கான வழி; சூத்திரம்' என்று சொல்லி வருகிறார்கள். இப்படி, மார்க்ஸிஸ்ட் தலைமையில் தேர்தல் கூட்டணித் தொடர்பான விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில், வருகிற மார்ச் மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கிற அக்கட்சியின் தேசியக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து ஒரு முடிவுக்கு வர இருக்கிறார்கள் என்று உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
இதற்கிடையில், தமிழகத்தில் ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்க அடிப்படை வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர். கமல், தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கும்போது, கேரளா சென்று அம்மாநில மார்க்ஸிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முதல்வருமான பினராயி விஜயனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கமல், அரசியல் நகர்வுகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் போலவே இருக்கிறது என்று இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ரஜினி, அரசியலுக்கு வருவார் என்று சொல்லிக்கொண்டிருந்த நேரத்தில், சட்டென்று கமல் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துக் களத்திலும் இறங்கிவிட்டார். ரஜினியின் ஆன்மிக அரசியலில் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு விருப்பம் இல்லாததால் மார்க்ஸிஸ்ட் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் தமிழக அரசியலை உற்றுநோக்கி கமல் பக்கம் சாயத்தொடங்கியிருக்கிறார்கள். கமல் நடவடிக்கைகள், திட்டங்கள் பற்றி டெல்லி தலைமைக்கு அவ்வப்போது தகவல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், தூத்துக்குடியில் மார்க்ஸிஸ்ட் கட்சி நடத்திய 22 -வது மாநாட்டில் பேசிய பிரகாஷ் காரத், ''தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்று குழப்பத்தில் உள்ளது. மற்றொன்று தேக்க நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழகத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சியைத் தொண்டர்கள் பலப்படுத்த வேண்டும்'' என்றார். இந்தப் பேச்சு, தி.மு.க தலைமையைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து திருச்சி என்.சிவா எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களைப் பாதிக்கின்ற பிரச்னைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம்' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியின் ஈரம் காய்வதற்குள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத் 'திராவிட முன்னேற்றக் கழகம் தேக்கநிலை அடைந்திருக்கிறது' என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அக்கட்சியின் தேசியக்குழுக் கூட்டத்தில் பேசி அது பத்திரிகைச் செய்தியாகவும் வெளிவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதில் எங்களுக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்த்து 'தேக்கநிலைமை அடைந்துவிட்ட கட்சி' என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது மட்டுமன்றி மக்கள் பிரச்னைகளுக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக பிரகாஷ்காரத் தெரிவித்துள்ள கருத்து அவருக்கு 'விருப்பமுள்ள' கருத்தாக இருக்கலாம். ஆனால், நாட்டின் பன்முகத் தன்மைக்காகப் போராடும் கட்சிகளின் ஒன்றிணைந்த போராட்டத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது அவரது பேச்சு'' என்று கூறியுள்ளார்.
மதுரையில், கமல் 21-ம் தேதி என்ன சொல்லப்போகிறாரோ..?
Trending Articles
`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை!' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.
`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை?' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி!
``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
Sponsored