”தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நீடிக்க விருப்பம் இல்லை..!” - கடிதம் கொடுத்தாரா ராஜேஷ் லக்கானி?!அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல், தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் என்று தமிழகம் அடுத்தடுத்து தேர்தல்களைச் சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் எந்நேரமும் வரலாம் என்று ஆரூடங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், ராஜேஷ் லக்கானி மாற்றப்பட்டிருப்பதற்கு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது நடைபெற்ற அரசியல் களேபரங்கள்தாம் காரணம் என்று தெரியவந்துள்ளது.

Sponsored


தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்கானியை கடந்த 2015-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தது. பொறுப்புக்கு வந்தவுடனேயே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பில் அவர் தீவிரம் காட்டினார். கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களைச் சேர்த்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ''100 சதவிகித வாக்குப்பதிவு'' என்ற கோஷத்தை முன்வைத்தார். இதற்காக, கல்லூரிகளில் மட்டுமல்லாது பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, விழிப்புஉணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டார். இந்தநிலையில், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா புகார், வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. கண்டெய்னரில் பணம், அப்போதைய அமைச்சர்களின், நண்பர்கள், பினாமிகளின் வீடுகளில், அலுவலகங்களில் நடந்த அதிரடிச் சோதனையில் கோடிக்கணக்கில் சிக்கியது.

Sponsored


அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில் பொதுத்தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறுவதை நிறுத்திவைத்தார் லக்கானி. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்னர் நடந்தது இல்லை. இப்படி, சட்டமன்றத் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரி இவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளை நடுநிலையாளர்கள் பலரும் பாராட்டினார்கள். ஆனாலும், பணப்பட்டுவாடா புகார்கள் அடுக்கடுக்காக வந்தன. தேர்தல் சமயத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை வைத்து அவரால் செய்ய முடிந்ததை செய்தார். அதிகாரவர்க்கத்தின் ஒத்துழையாமை நடவடிக்கைகள் லக்கானியை வெகுவாகப் பாதித்தது. எனவே, தேர்தல் அதிகாரியாக அவர் செய்த பணி, அவருக்கு முழு திருப்தியைத் தரவில்லை. 

Sponsored


இந்நிலையில், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் முதலில் அறிவிக்கப்பட்டபோது, டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக, அத்தொகுதியில் நடந்த அதிகார துஷ்பிரயோகங்களை ராஜேஷ் லக்கானியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஓ.பி.எஸ். தனி அணியாகச் செயல்பட்டபோது, தொப்பி சின்னத்தில் தினகரனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து அமைச்சர்களும் முகாமிட்டு தேர்தல் வேலைகளைச் செய்தனர். 'வாக்காளர்களுக்கு வீடு வீடாகப் பணம்  விநியோகம் செய்யப்பட்டது' என்று ஆதாரபூர்வமாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி 89 கோடி ரூபாய் அளவிலான பணப்பட்டுவாடா குறித்த ஆதாரங்களைக் கைப்பற்றினர். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அப்போது ரத்து செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லக்கானி பரிந்துரை செய்ததன்பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

"அப்போதுதான், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியவில்லையே?; அதிகாரவர்க்கத்தினர் தன் பணிக்கு ஒத்துழைப்பு தரவில்லையே?' என்ற வருத்தம் லக்கானிக்கு ஏற்பட்டது" என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சம்பவங்கள், அவரது பணி மீதான நேர்மைக்கு சவால்விடும் வகையில் இருந்தது. இதையடுத்து, "தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை" என்ற தன்னுடைய நிலைப்பாட்டை மேலிடத்திற்குச் சொல்லிவிட்டார். இதுதொடர்பாக கடிதம் கொடுத்தகாகவும் சொல்கிறர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஓ.பி.எஸ் - எடப்பாடி அணிகள் இணைப்புக்குப் பின், மீண்டும் நடத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடா பல்வேறு ரூபங்களில் நடைபெற்றது. 'இரண்டாவது தடவையாக, ஆர்.கே.நகர் தேர்தல் நிறுத்தப்படலாம்' என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தேர்தல் நடந்து முடிந்தது.

தனது பணி மாறுதல் முடிவில் லக்கானி உறுதியாக இருந்ததால், தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக யாரை நியமிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனமான டிட்கோ தலைவர் ரமேஷ் சந்த் மீனா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை செயலாளர் கார்த்திக், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சத்ய பிரதா சாகு ஆகிய மூன்று பேரின் பெயர்களை தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்தது. இவர்களில் ரமேஷ் சந்த் மீனா, கார்த்திக் பெயரை முதல்கட்ட பரிசீலனையிலேயே டிஸ்மிஸ் செய்துவிட்டனர். சத்ய பிரதா சாகு பெயரை  ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது அடுத்த வேறு லிஸ்ட் கேட்கலாமா? என்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்படிக் கேட்டால், தமிழக அரசுடன் மோதல்போக்கு இருப்பதாக வெளியே செய்திகள் வரும் என்றும் ஆலோசனை சொல்லப்பட்டு இருக்கிறதாம். எனவேதான் முதல் லிஸ்டோடு வேலையை முடித்துக் கொண்டார்கள். இதையடுத்தே சத்ய பிரதா சாகு, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி இப்போது விடுவிக்கப்பட்டு விட்டார். இதனால், தற்போது அவருக்கு 'மன அழுத்தம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு' எல்லாம் நார்மல் ஆகி இருக்கும்..!Trending Articles

Sponsored