சட்டசபைச் செயலாளர் பதவி... சபாநாயகர் தனபாலின் போக்கு... நீதிகேட்கும் அதிகாரிகள்! #VikatanExclusive



மிழக சட்டமன்றச் செயலாளர் பதவியைப் பிடிக்க நடக்கும் போட்டியில் அரசியல் விளையாடியிருக்கிறது. தனது தனிச் செயலாளரைச் சிறப்புச் செயலாளராகக் கொண்டு வர, சபாநாயகர் தனபால் முயற்சி செய்ய சட்டமன்ற ஊழியர்கள் போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையில் ஆளுநர் மாளிகை மௌனம் காப்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள் ஊழியர்கள். 

சட்டமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் தாக்குதல்கள், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் அவையைச் சுமுகமாக நடத்துவதற்கும் ஆளும் கட்சியைக் காப்பாற்றுவதற்கும் சட்டமன்ற விதிகளைச் சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு உதவுபவர் சட்டமன்றச் செயலாளர். மிகவும் அதிகாரமிக்க இந்தப் பதவியைக் கைப்பற்ற கடந்த ஓராண்டாகக் காய் நகர்த்தி வருகிறார் சட்டமன்றக் கூடுதல் செயலாளராக இருக்கும் கே.சீனிவாசன். இப்போது, சட்டமன்றச் செயலாளராக இருக்கும் கே.பூபதியின் பதவிக் காலம் பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தப் பொறுப்புக்கு அடிப்படைத் தகுதியே இல்லாத கே.சீனிவாசனை நியமிக்க முயற்சிகள் நடக்கின்றன; அதைத் தடுக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துக்குச் சட்டமன்றத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் கையெழுத்திட்டு பிப்ரவரி 2-ம் தேதி புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. அதனால், நீதிகேட்டு, நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கிறார்கள். 

தமிழகச் சட்டமன்றச் செயலகத்தில் பொது நிர்வாகம், நிருபர்கள் பிரிவு (சட்டமன்ற நடவடிக்கையைக் குறிப்பு எடுப்பவர்கள்) என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. பொது நிர்வாகப் பிரிவில், `உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர்களாகப் பணியில் சேர்ந்து வரிசையாகப் பதவி உயர்வு பெற்று, உச்சகட்டமாகச் சட்டமன்றச் செயலாளர் பதவியை அடையலாம். அதற்கு முன்னர், ஓய்வு பெற்றுவிட்டால் அந்த வாய்ப்புக் கிடைக்காது. இந்தப் பிரிவில் இருப்பவர்கள், சட்ட மசோதா தயாரிப்பு மற்றும் பல்வேறு சட்ட நுணுக்கங்களைக் கையாண்டு அனுபவம் பெறுவார்கள். இந்தப் பிரிவில், துணைச் செயலாளர் பதவிக்கு மேல், பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் கண்டிப்பாக, சட்டக் கல்வி (பி.எல்) அல்லது பொதுச் சட்டக் கல்வியில் (பி.ஜி.எல்) பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Sponsored


அதே நேரம் நிருபர்கள் பிரிவில் பணியாற்றுவோர், ``டைபிஸ்ட், ஸ்டெனோ - டைப்பிஸ்ட், தலைமை நிருபர், துணைச் செயலாளர் (ஆசிரியர்), இணைச் செயலாளர் (ஆசிரியர்-விவாதம்), கூடுதல் செயலாளர் (ஆசிரியர்-விவாதம்)'' என்று பதவி உயர்வு பெற்று உயர்ந்தபட்சமாகக் கூடுதல் செயலாளர் பதவி வரை வரலாம். இந்தப் பிரிவில், `நிருபர் முதல் கூடுதல் செயலாளர்' வரை இவர்களின் பதவி உயர்வுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் ஸ்டெனோ தேர்வு என்ற தொழில்நுட்பத் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பிரிவில் வேலை செய்கிறவர்கள், சட்டமன்றம் மற்றும் கமிட்டி கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதைக் குறிப்பெடுப்பார்கள். அதைச் சட்டமன்ற ஆவணங்களில் பதிவு செய்வார்கள். இதுதான் இவர்களின் முக்கியப் பணி. சட்ட மசோதா தாக்கல், சட்டமன்ற விதிகளைக் கையாண்ட சட்ட விதிமுறைகள் குறித்த அனுபவம் அவர்களுக்குக் கிடையாது.
 
எனவே, சட்டமன்றச் செயலகத்தில், சட்ட அறிவு பெற்ற பொது நிர்வாகப் பிரிவு அதிகாரிகள்தான் சட்டமன்ற நிர்வாகத்தை நடத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். எனவே, பொது நிர்வாகப் பிரிவில் இருந்துதான், பதவி மூப்பு அடிப்படையில் `சட்டமன்றச் செயலாளர்' நியமிக்கப்படுகிறார். தமிழகச் சட்டமன்றத்தில், 1952-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது. நிருபர்கள் பிரிவில் இருப்பவர்களைச் சட்டமன்றச் செயலாளர்களாக இதுவரை நியமித்தது இல்லை. ஆனால், ''சட்டமன்றச் செயலக நடைமுறைகளை, விதிமுறைகளை மீறி, அடிப்படைத் தகுதியே இல்லாத கே.சீனிவாசன் என்ற அதிகாரியைச் சட்டமன்றச் செயலாளர் ஆக்கும் வேலைகள் நடக்கின்றன. இதற்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது'' என்று ஆளுநர் பன்வாரிலல் புரோஹித்துக்கு 9 பக்க புகார் கடிதம் போனது. 

அந்தக் கடிதத்தில், “சட்டமன்றச் செயலாளராக இருந்த ஜமாலுதீன் 31.5.2017 அன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து, பதவி மூப்பு அடிப்படையில் பொது நிர்வாகப் பிரிவில் கூடுதல் செயலாளராக இருந்த கே.பூபதி என்பவரை சட்டமன்றச் செயலாளராக்கியிருக்க வேண்டும். ஆனால், அவரைச் சட்டமன்றச் செயலாளர் (பொறுப்பு) என்று 3.6.2017 அன்று நியமித்தார்கள். 17.08.2017 அன்று நிருபர்கள் பிரிவில் கூடுதல் செயலாளராகப் பி.ராமகிருஷ்ணன் என்பவர் இருக்கும்போதே கூடுதலாக இன்னொரு கூடுதல் செயலாளர் என்ற ஒரு பதவியை உருவாக்கினார்கள். நிருபர்கள் பிரிவில் இணைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருக்கும் சபாநாயகரின் தனிச் செயலாளரான கே.சீனிவாசன், கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டார். 497 பணியாளர்களைக் கொண்ட பொது நிர்வாகப் பிரிவில் ஒரு கூடுதல் செயலாளர் மட்டுமே இருக்கும் நிலையில், வெறும் 52 பணியார்களைக் கொண்ட நிருபர்கள் பிரிவில் இரண்டு கூடுதல் செயலாளர்கள் வந்துவிட்டார்கள்.
 
தனக்கு வேண்டப்பட்ட கே.சீனிவாசனுக்குக் கூடுதல் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துவிட்டு, பொறுப்புச் செயலாளராக பணியாற்றிய கே.பூபதிக்கு 8.9.2017 அன்றுதான் சட்டமன்றச் செயலாளர் என்று முழு அந்தஸ்து வழங்கினார் சபாநாயகர் தனபால். அதன் பிறகுதான், பொதுப்பிரிவில் கூடுதல் செயலாளர் பதவி காலியாகிறது. அந்தப் பதவிக்கு இணைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருந்த வசந்தி மலர் 23.11.2017 அன்று கொண்டு வரப்படுகிறார். இந்நிலையில், நிருபர்கள் பிரிவில் கூடுதல் செயலாளராக இருந்த பி.ராமகிருஷ்ணன், 30.11.2017 அன்று ஓய்வு பெற்றவுடன், ஒட்டுமொத்த சட்டமன்றச் செயலகத்தில் கே.சீனிவாசன் மட்டுமே கூடுதல் செயலாளர் அந்தஸ்த்தில் மூத்த அதிகாரியாகிறார். மேலும், கூடுதல் செயலாளராக இருந்த பி.ராமகிருஷ்ணன் 30.11.2017 அன்று ஓய்வு பெற்றதும் அடுத்த நாளே, அதாவது, 1.12.17 அன்று, `சிறப்புச் செயலாளர்' என்று ஒரு பதவி உருவாக்கப்பட்டு அதில், கே.சீனிவாசன் நியமிக்கப்படுகிறார். நான்கு மாத இடைவெளியில் மூன்று பதவி உயர்வு கே.சீனிவசனுக்குக் கொடுக்கப்பட்டது. இதெல்லாம், சட்டமன்றச் செயலாளர் பதவியைக் குறி வைத்து, சபாநாயகர் தனபால் செய்த தில்லாலங்கடி வேலைகள்.

Sponsored


Sponsored


சீனியாரிட்டி அடிப்படையில் வசந்தி மலர் என்ற அதிகாரியை மட்டுமல்ல, 6 அதிகாரிகளை ஓவர்டேக் செய்துவிட்டு கே.சீனிவாசனை முதல் இடத்துக்குக் கொண்டு வந்துள்ளார் தனபால். மேலும், இதுவரை நிருபர் பிரிவில் இருந்து யாரும் சட்டமன்றச் செயலாளர் ஆனதில்லை. அதுவும் சட்டம் (பி.எல்) படித்தவர்கள் மட்டுமே சட்டமன்றச் செயலாளராகி இருக்கிறார்கள். முறைப்படி, சட்டமன்றச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்றால், சட்டம் படித்த துணை செயலாளர் பாண்டியன், ஆதிசேசன், பத்மகுமார் ஆகிய மூவரில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும். ஆனால், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனபால் தனக்கு வேண்டியவரை இந்தப் பதவிக்குக் கொண்டுவரத் துடிக்கிறார். சட்டமன்ற மரபுகளையும் ஜனநாய மாண்புகளையும் தனபால் குழிதோண்டி புதைக்கிறார். ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் புகார் வாசிக்கிறார்கள்.
 
இந்நிலையில், கூடுதல் செயலாளர் வசந்தி மலர், இணைச் செயலாளர் பி.சுப்பிரமணியம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு, பிப்ரவரி 21-ம் தேதி நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. ''பொதுப்பிரிவில் உள்ளவர்களில் மூத்த அதிகாரிதான், இதுவரை சட்டமன்றச் செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார்கள். அந்தப் பிரிவில்  உள்ள அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்புச் செயலாளர் என்று பதவி கொடுக்க முடியும். ஆனால், நிருபர்கள் பிரிவில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சிறப்புச் செயலாளர் என்று 2017-ம் ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நியமனம் சட்டத்துக்குப் புறம்பானது. குரூப் 1 அதிகாரி நிலையில் உள்ள இந்த நியமனத்துக்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே, மனு கொடுத்துள்ளோம். நீதிமன்றமும் அதுகுறித்து உத்தரவிட வேண்டும். நீதியை நிலைநாட்ட வேண்டும். பிப்ரவரி 28-ம் தேதி காலியாகும் சட்டமன்றச் செயலாளர் பதவிக்கு, பதவி மூப்பு அடிப்படையில் மூத்த அதிகாரியான வசந்தி மலர் நியமிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.  

இந்த ரிட் மனு குறித்து மார்ச் 1-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும் ஆளுநரின் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

சீனிவாசன் யார்?

சட்டமன்றம் நடைபெறும்போது சபாநாயகர் அருகிலேயே நின்றிருப்பார் சீனிவாசன். அவையை நடத்த சபாநாயகருக்குத் தேவையான உதவிகளைச் சீனிவாசன் செய்வார். அவையில் உறுப்பினர்கள் யாராவது பேச விரும்பினால் கையைத் தூக்குவார்கள். அவர்களின் பெயர் விவரங்களைச் சீனிவாசன்தான் சபாநாயகருக்குச் சொல்லுவார். அதன்பிறகுதான் அந்த உறுப்பினரை சபாநாயகர் அறிவிப்பார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாசனைத் தாங்கிப்பிடிப்பார்கள். சட்டமன்ற உறுப்பினர்களிடம் அவருக்கு பசையான ஆதரவு உண்டு. சமீபத்தில் சென்னை பெரம்பூர் அருகில் புதிய வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார் சீனிவாசன். சீனிவாசனின் அசூர வளர்ச்சியைக் கண்டு சட்டமன்றச் செயலகமே வாய்பிளந்து நிற்கிறது.

''குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது..!' என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன.



Trending Articles

Sponsored