பி.ஜே.பி-யின் செல்வாக்கை உயர்த்துமா வடகிழக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள்?



Sponsored



நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த மாநிலங்களில் வரும் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. என்றாலும், இப்போது அந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, வடகிழக்கு மாநிலங்களில் எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது என்பதில் பெரிய மாநிலங்களில் ஆட்சி செய்பவர்களுக்கோ அல்லது பெரிய கட்சிகளுக்கோ அக்கறை இருந்ததில்லை. அந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பற்றி பெரிதாக யாரும் கண்டுகொள்ளாத நிலை, தற்போது மாறியிருக்கிறது. ஆனால், இதர வடகிழக்கு மாநிலங்களில் எல்லாம் கால்பதித்துவிட்ட பி.ஜே.பி-க்கு திரிபுரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் மிகப்பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

Sponsored


அண்மையில் சென்னை மற்றும் புதுச்சேரிக்குப் பயணமான பிரதமர் நரேந்திரமோடி, "வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு, காங்கிரஸ் முதலமைச்சர் என்று சொல்வதற்கு புதுச்சேரி முதல்வர் மட்டும்தான் இருப்பார்" என்றார். இப்போது நடைபெற்று முடிந்துள்ள திரிபுரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மோடியின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் இருக்குமா என்பதை ஒட்டுமொத்த நாட்டு மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Sponsored


திரிபுராவைப் பொறுத்தவரை, கடந்த 25 ஆண்டுகளாக இடதுசாரி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது மீண்டும் இடதுசாரியே ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது ஆட்சியை பி.ஜே.பி-யிடமோ, காங்கிரஸ் கட்சியிடமோ இழக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதேபோல், நாகாலாந்து, மேகாலயாவிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.

இந்தச் சூழலில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் திரிபுராவில் இடதுசாரி ஆட்சியை பி.ஜே.பி. கவிழ்க்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மேகாலயாவிலும், நாகாலாந்திலும் பி.ஜே.பி. கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்று பி.ஜே.பி. ஆட்சியமைத்துள்ள நிலையில், திரிபுராவில் கால் நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சியை பி.ஜே.பி. கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சூழல் உருவானால், திரிபுராவில் கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து பி.ஜே.பி. ஆட்சியமைக்கக்கூடும் என்று தெரிகிறது. 

நாகாலாந்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி மற்றும் அதன் கூட்டணிக்கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சி குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ளது. ஏற்கெனவே நாகா மக்கள் முன்னணியில் பி.ஜே.பி. பெற்ற இடங்களை விடவும் இம்முறை அதிக இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேகாலயாவில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, மிகவும் குறைந்த இடங்களிலேயே வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு இரண்டு கணிப்புகளும் இதே தகவலையே வெளியிட்டுள்ளன. 

இதன் மூலம் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது. மேகாலயாவைப் பொறுத்தவரை மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) அதிக இடங்களைப் பிடிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ள போதிலும், அங்கு எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமல், தொங்கு சட்டசபையே உருவாகும் என்று தெரிய வந்துள்ளது.

திரிபுரா, நாகாலாந்தில் பெரிய அளவில் பி.ஜே.பி.-க்கு வாக்கு வங்கி இல்லாத நிலையிலும் அக்கட்சி தனித்தோ, கூட்டணி சேர்ந்தோ ஆட்சியைப் பிடிப்பதுடன், மேகாலயாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்படும் என்ற தகவலாலும் பி.ஜே.பி. கருத்துக்கணிப்பு முடிவுகளாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. என்றாலும் கருத்துக்கணிப்புகள் உண்மையாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையே, பிரதமர் மோடி, காங்கிரஸ் முதல்வர் என்று புதுச்சேரியில் மட்டுமே இருப்பார் என்று சொல்லியிருந்தது பற்றி விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டதில், 56 விழுக்காட்டினர் அந்தக் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன?

திரிபுரா: மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. ஆக்ஸிஸ்-மை இந்தியா கருத்துக்கணிப்பில் இடதுசாரிக் கட்சிகள் அதிகபட்சம் 15 இடங்களைப் பிடிக்கும் என்றும், பி.ஜே.பி 44 முதல் 50 இடங்களைப் பிடிக்கும் என்றும் இதரக்கட்சிகள் மூன்று இடங்கள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூஸ்-எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பு வேறுவிதமான முடிவுகளைத் தெரிவிக்கிறது. இடதுசாரிக்கட்சிகள் அதிகபட்சம் 23 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று அது தெரிவிக்கிறது. ஆனால், சி-ஓட்டர் நிறுவன கருத்துக்கணிப்பில் இடதுசாரிக் கட்சிகள் 26 முதல் 34 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரிபுராவில் மீண்டும் இடதுசாரி ஆட்சியே தொடரும் என்று சி-ஓட்டர் கூறுகிறது. பி.ஜே.பி-க்கு 45 இடங்களை அளித்துள்ளது நியூஸ் எக்ஸ். ஆனால், சி ஓட்டர் கணிப்பின்படி, பி.ஜே.பி. 24 முதல் 32 இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேகாலயா: இம்மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 60 இடங்களில் 59 தொகுதிக்குத் தேர்தல் நடந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 20 இடங்களைக் கைப்பற்றும் என்று ஆக்ஸிஸ் மை இந்தியாவும், 17 இடங்களைப் பிடிக்கும் என நியூஸ் எக்ஸூம், சி ஓட்டர் நிறுவனத்தைப் பொறுத்தவரை 19 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும், மேகாலயாவில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழப்பது உறுதி என்றே கணிப்புகள் கூறுகின்றன. 

அதேவேளையில் மேற்கண்ட நிறுவனங்களின் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் என்.பி.பி. முறையே 14 இடங்களையும், 27 மற்றும் 23 இடங்களையும் வழங்கி தகவல்கள் வெளியாகியுள்ளன. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை 5 தொகுதிகள், 12 தொகுதிகள் மற்றும் 8 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக அந்த மூன்று நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, இதரக் கட்சிகள் சராசரியாக 20 இடங்களைக் கைப்பற்றும் என்று மூன்று கருத்துக்கணிப்புகளுமே தெரிவிக்கின்றன. 

நாகாலாந்து: இங்கும் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 25 இடங்களைப் பிடிக்கும் என்று நியூஸ் எக்ஸ் மற்றும் சி ஓட்டர் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை ஆட்சியமைப்பதற்கு போதுமானதல்ல என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

புதிதாக உருவான தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சியுடன், பி.ஜே.பி இணைந்த கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைக்கும் என நியூஸ் எக்ஸ் கணிப்பும், 31 தொகுதிகள் கிடைக்கும் என சி ஓட்டர் நிறுவனமும் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெறும் என்று அந்தக் கணிப்புகள் கூறுகின்றன. இதுபோன்ற கணிப்புகள் எல்லாமே வாக்களித்துவிட்டு வெளியே வரும் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளே என்பதால், இந்த முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பல தேர்தல் கருத்துக்கணிப்புகள் நேர்மாறாக மாறிய நிகழ்வுகளும் உண்டு. எனவே, எது எப்படியாகினும் இன்னும் சில தினங்களில் வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியமைக்கக்கூடிய அல்லது ஆட்சியைப் பிடிக்கக்கூடிய கட்சிகள் எவை என்பது தெரிந்துவிடும்..!



Trending Articles

Sponsored