''சபாநாயகர் தனபாலின் முடிவுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுவாரா..?''



Sponsored



தமிழகச் சட்டமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகாமல் அவையைச் சுமுகமாக நடத்துவதற்கு சட்டமன்ற விதிகளைச் சுட்டிக்காட்டிச் சபாநயகருக்கு உதவுபவர் சட்டமன்றச் செயலாளர். கோட்டையில் கோலோச்சும் இந்தப் பதவி உயர்ந்த அதிகாரமிக்கது. இந்தப் பதவியில் இருந்த கே.பூபதியின் பதவிக்காலம் பிப்ரவரி 28- ம் முடிவடைந்ததையடுத்து, அவர் அந்தப் பதவியிலிருந்து ஓய்வுபெற்று விட்டார். இந்தப் பதவிக்கு, சபாநாயகர் தனபாலின் தனிச் செயலாளராக இருக்கும் சீனிவாசனை நியமிக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. இது, சட்டத்துக்குப் புறம்பானது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று சட்டமன்றச் செயலக அதிகாரிகளான வசந்தி மலர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் ரிட் வழக்குப் பதிவு செய்தனர். அதற்கு முன்னதாக, கவர்னர் பன்வாரிலால் புரோகித், கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஆகியோருக்கு ஜனவரி 2- ம் தேதி கடிதம் அனுப்பினர். அதில், சிறப்புச் செயலாளர் நியமனத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர். அந்தக் கடிதத்தில் சட்டமன்றச் செயலகத்தில் பணியாற்றும் 11 அதிகாரிகள் கையெழுத்துப் போட்டிருந்தனர்.

அதில், “சட்டமன்றச் செயலாளராக இருந்த ஜமாலுதீன் 31-5-2017 அன்று ஓய்வுபெற்றார். இதையடுத்து, பதவி மூப்பு அடிப்படையில் பொது நிர்வாகப் பிரிவில் கூடுதல் செயலாளராக இருந்த கே.பூபதியைச்  சட்டமன்றச் செயலாளர் ஆக்கியிருக்க வேண்டும். ஆனால், அவரை சட்டமன்றச் செயலாளர் (பொறுப்பு ) என்று 3-6-2017 அன்று நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நிருபர்கள் பிரிவில் கூடுதல் செயலாளர் பதவியில் பி.ராமகிருஷ்ணன் என்பவர் இருக்கும்போது, 'கூடுதல் செயலாளர்' என்று மேலும் ஒரு பதவி 17.08.2017 அன்று  உருவாக்கப்பட்டது. அந்தப் பதவியில் இணைச் செயலாளர் அந்தஸ்த்தில் சபாநாயகரின் தனிச்செயலாளாராக இருக்கும் கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

Sponsored


 497 பணியாளர்களைக் கொண்ட பொது நிர்வாகப் பிரிவில் ஒரு கூடுதல் செயலாளர் மட்டுமே இருக்கும் நிலையில், வெறும் 52 பணியாளர்களைக் கொண்ட நிருபர்கள் பிரிவில் இரண்டு கூடுதல் செயலாளர்கள் பதவியை உருவாக்கிவிட்டார்கள். இந்நிலையில், தனக்கு வேண்டப்பட்ட கே.சீனிவாசனுக்கு 'கூடுதல் செயலாளர்' என்ற பதவியைக் கொடுத்துவிட்டு, பொறுப்புச் செயலாளராகப் பணியாற்றிய கே.பூபதிக்கு, 8.9.17 அன்றுதான் சட்டமன்றச் செயலாளர் என்று முழு அந்தஸ்து வழங்கினார் சபாநாயகர் தனபால். அதன் பிறகுதான், பொதுப்பிரிவில் கூடுதல் செயலாளர்  பதவி காலியாகிறது. அந்தப் பதவிக்கு இணைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருந்த வசந்தி மலர் 23.11.17 அன்று நியமிக்கப்பட்டார். 

Sponsored


இந்நிலையில், நிருபர்கள் பிரிவில் கூடுதல் செயலாளராக இருந்த பி.ராமகிருஷ்ணன், 30.11.2017 அன்று ஓய்வு பெற்றவுடன், ஒட்டுமொத்த சட்டமன்றச் செயலகத்தில் கே.சீனிவாசன் மட்டுமே கூடுதல் செயலாளர் அந்தஸ்த்தில் மூத்த அதிகாரி ஆகிறார். மேலும், கூடுதல் செயலாளராக இருந்த பி.ராமகிருஷ்ணன் 30.11.2017 அன்று ஓய்வுபெற்றதும் அடுத்த நாளே, அதாவது 1.12.17 அன்று, 'சிறப்புச் செயலாளர்' என்று ஒரு பதவி உருவாக்கப்பட்டு அதில், கே.சீனிவாசன் நியமிக்கப்படுகிறார். நான்கு மாத இடைவெளியில் மூன்று பதவி உயர்வு கே.சீனிவாசனுக்குக் கொடுக்கப்பட்டது. 

சீனியாரிட்டி அடிப்படையில் வசந்தி மலர் என்ற அதிகாரியை மட்டுமல்ல, 6 அதிகாரிகளை ஓவர்டேக் செய்துவிட்டு கே.சீனிவாசனை முதல் இடத்துக்குக் கொண்டுவந்துள்ளார் தனபால். மேலும், இதுவரை நிருபர் பிரிவிலிருந்து யாரும் சட்டமன்றச் செயலாளர் ஆனது இல்லை. அதுவும் சட்டம் (பி.எல்.,) படித்தவர்கள் மட்டுமே சட்டமன்றச் செயலாளர் ஆகியிருக்கிறார்கள். முறைப்படி, சட்டமன்றச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்றால், சட்டம் படித்த துணைச் செயலாளர் பாண்டியன், ஆதிஷேசன், பத்மகுமார் ஆகிய மூவரில் ஒருவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும். சிறப்புச் செயலாளர் என்ற பதவியை உருவாக்கியது செல்லாது. இந்தப் பதவியை, கவர்னர் அங்கீகரிக்கக் கூடாது'' என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், கூடுதல் செயலாளர் வசந்தி மலர், இணைச் செயலாளர் பி.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனு, பிப்ரவரி 21- ம் தேதி நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. ''பொதுப்பிரிவில் இருக்கும் மூத்த அதிகாரிகள்தான், இதுவரை சட்டமன்றச் செயலாளர் ஆகியிருக்கிறார்கள். அந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டும்தான் சிறப்புச் செயலாளர் என்று பதவியும் கொடுக்க முடியும். ஆனால், நிருபர்கள் பிரிவில் உள்ள சீனிவாசன் என்பவருக்குச் சிறப்புச் செயலாளர் என்று 2017- ம் ஆண்டு, டிசம்பர் 14- ம் தேதி உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நியமனம் சட்டத்துக்குப் புறம்பானது. குரூப் - 1 அதிகாரி நிலையில் உள்ள இந்த நியமனத்துக்குத் தமிழகக் கவர்னர் ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே, மனு கொடுத்துள்ளோம். நீதிமன்றமும் அதுகுறித்து உத்தரவிட வேண்டும். பிப்ரவரி 28- ம் தேதி காலியான சட்டமன்றச் செயலாளர் பதவிக்குப் பதவி மூப்பு அடிப்படையில் மூத்த அதிகாரியான வசந்தி மலரை நியமிக்க வேண்டும் '' என்று கூறியிருந்தனர்.  

இந்த ரிட் மனு குறித்து மார்ச்  1- ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும் ஆளுநரின் செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார். ''விதிகளை மீறி சீனிவாசனை சிறப்புச் செயலாளர் என்ற புதிய பதவியில் நியமித்துள்ளனர். அவரையே சட்டமன்றச் செயலாளராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளனர். சீனிவாசனுக்கு நிர்வாகப் பொறுப்பில் முன் அனுபவம் இல்லை. எனவே, அவரை சட்டமன்றத்தின் சிறப்புச் செயலாளராக  நியமிக்கக் கூடாது. அவரை தேர்வு செய்யத் தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார். 

இதற்கு தமிழக அரசின் அட்வகேட் ஜெனரால் விஜய்நாராயணன் எதிர்ப்புத் தெரிவித்தார். ''சட்டமன்றச் செயலாளர் பதவி மிக முக்கியமானது. புதிய செயலாளரை நியமிக்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. எனவே, செயலாளர் நியமனத்துக்குத் தடை விதிக்கக் கூடாது'' என்று வாதிட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 6- ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மேலும், இந்த வழக்கில் கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

சபாநாயகர் தனபால் முடிவுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுவாரா அல்லது அதை ஏற்றுக்கொள்வாரா என்பது செயலாளர் ராஜகோபால் பதிலில் தெரிந்துவிடும்.



Trending Articles

Sponsored