``கட்சியில் பெரிய பதவிக்கு வர ஹெச்.ராஜா இப்படிப் பேசுகிறார்!” - கொதிக்கும் கு.ராமகிருட்டிணன்



கால் நூற்றாண்டுக்குப் பிறகு திரிபுராவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது பி.ஜே.பி. நீண்ட தோல்விக்குப் பிறகு கிடைத்த வெற்றி அங்குள்ள பி.ஜே.பி-யினரை முழுவதும் மாற்றியிருக்கிறது என்றே சொல்லலாம். வெற்றி போதையில் உள்ள பி.ஜே.பி-யினர் தோற்றுப்போன மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள், அந்தக் கட்சித் தலைவர்களின் படங்கள், சிலைகள் போன்றவற்றை அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்திருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக அவர்களால் லெனின் சிலை அகற்றப்பட்டிருப்பது இந்தியஅளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், `திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப்போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலையும் அகற்றப்படும்’ என்று பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவால், தமிழகமும் இப்போது கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. 

Sponsored


ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான கு.ராமகிருட்டிணன், ``ஹெச்.ராஜா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

Sponsored


``ஹெச்.ராஜாவின் இந்தப் பதிவு எதைக் குறிக்கிறது?'' 

Sponsored


``திரிபுராவில் ஏதோ சூழ்ச்சி செய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அங்கு தேர்தல் நியாயமாக நடந்ததா... இல்லையா  என்பதே தெரியவில்லை.  அங்கு அமைச்சரவையே இன்னும் பதவி ஏற்கவில்லை. அமைச்சரவை பதவியேற்காத நிலையில்,  உலகத் தலைவர்களில் ஒருவரான லெனின் சிலையை ரோட்டில் போட்டு உடைக்கும் காட்சி உலகம் முழுக்க இருக்கக்கூடிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், பெரியாரைக் குறிவைத்து ஹெச்.ராஜா எழுதிய பதிவு, அவர்களின் பாசிச மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியா முழுக்க அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைதான் இருக்கும். மற்ற எந்தத் தத்துவமும் இந்தியாவில் இருக்கக் கூடாது என்ற நோக்கில் ஒரு சர்வாதிகார ஆட்சியைத்தான் அவர்கள் நடத்துவார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதற்காகத்தான் இப்படியான செயல்களை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்''.

``இப்படியான பதிவுகளால் தமிழகத்தில் வேரூன்றியிருக்கும் பெரியாரின் கொள்கைகளை வீழ்த்திவிட முடியுமா?''

``எந்தக் கொம்பனாலும் அது முடியாது. `பெரியார் ஒரு சாதிவெறியர்' என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார். ஆனால், பெரியாருடைய கொள்கையே சாதி ஒழிப்புதான். தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளரவிடாமல் தடுப்பது அ.தி.மு.க-வோ, தி.மு.க-வோ கிடையாது. மதவாத கட்சிகளையும், சாதியக் கட்சிகளையும் தமிழகத்தில் இன்றுவரை வளரவிடாமல் தடுத்துவைத்திருப்பது பெரியாருடைய கொள்கைகள் மட்டும்தான். பெரியாரை, தமிழகத்திலிருந்து அகற்றும்வரை நம்மால் தமிழகத்தில் ஒரு இன்ச் கூட வளரமுடியாது என்பதை அவர்கள் கண்டுகொண்டுவிட்டார்கள். அதனால்தான் இதுவரை அ.தி.மு.க-வையும், தி.மு.க-வையும் மட்டுமே எதிரியாகப் பார்த்து வந்தவர்கள் இப்போது வேரைத்தேடி வந்திருக்கிறார்கள். அவர்கள் இப்போது பெரியாரைத்தான் தங்கள் எதிரியாக நினைக்கிறார்கள். பெரியாரை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டுமென்று துடிக்கிறார்கள். ஆனால், அது நடக்கவே நடக்காது. ஏனென்றால், பெரியார் ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இல்லை. தமிழகத்தின் தலைவர். பெரியார் மேல் கைவைப்பது, தமிழகத்தின் தகப்பன் மேல் கை வைப்பதற்குச் சமம்.  தன் தகப்பன் மேல் கை வைத்தால் எந்தத் தமிழனும் பொறுத்துக்கொள்ள மாட்டான். பெரியாரை வீழ்த்த நினைத்தால் ஹெச்.ராஜாவுக்கும் பி.ஜே.பி-க்கும் கடைசியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்''.

``ஹெச்.ராஜாதான் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டுவருகிறார். அதற்கு என்ன காரணம்?''

``கட்சித் தலைமை சொல்லிதான் அவர் இப்படியெல்லாம் செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. வன்முறைகளைத் தூண்டி அமைதியைச் சீர்குலைப்பதன் மூலம் கட்சியில் பெரிய பதவிக்கு வந்துவிடலாம் என்று ஹெச்.ராஜா நினைக்கலாம். ஆனால், எப்படியாவது வளர வேண்டும் என்ற எண்ணத்தில் தன் சமுதாயத்து மக்களுக்கே அவர் துரோகம் செய்துகொண்டிருக்கிறார். பெரியார் நாத்திகவாதி என்றாலும் ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் மகத்தான தலைவர் அவர். காரணம், அவருடைய உழைப்பில் எல்லாத் தரப்பு மக்களும் பயனடைந்திருக்கிறார்கள். பெரியார் சிலையில் சிறு கீறல் விழுந்தாலும் பெரியாரிஸ்ட்களும், முற்போக்குவாதிகளும் மட்டும்தான் கொதிப்பார்கள் என்று இல்லை. ஒவ்வொரு தமிழனும் கொதித்தெழுவான். தமிழகத்தில் எப்படியாவது வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஹெச்.ராஜாவை கிரிமினல் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். மக்கள் அமைதிக்கு எதிராகச் செயல்படும் ஒவ்வொருவரும் மிகப்பெரிய கிரிமினல்தான்''.



Trending Articles

Sponsored