``உத்தரப்பிரதேசம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவு, பி.ஜே.பி-க்குப் பின்னடைவா?"



த்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் போட்டியிட்டு வென்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதி, துணை முதல்வர் கே.பி.மௌர்யா வென்றிருந்த புல்பூர் மக்களவைத் தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி தோல்வியைத் தழுவியது. இந்த இரு தொகுதியிலும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்றுள்ளது. 

Sponsored


மேலும், பீகார் மாநிலம் அராரியா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் வெற்றிபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் மூன்று தொகுதிகளிலும் பி.ஜே.பி தோல்வியடைந்திருப்பது அந்தக் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கோரக்பூர் தொகுதியில் இப்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐந்து முறை வெற்றி பெற்றிருந்தார். நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவில் இடதுசாரிகளிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி பி.ஜே.பி ஆட்சியமைத்ததுடன் நாகாலாந்திலும் மேகாலயாவிலும் பி.ஜே.பி கூட்டணி ஆட்சி அமைந்து, ஒருவார காலத்துக்குள், அக்கட்சிக்குக் கிடைத்துள்ள இந்தத் தோல்வி, மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Sponsored


தற்போது முடிந்த இடைத்தேர்தலில் கோரக்பூரில் பி.ஜே.பி.-யின் உபேந்திர தத் சுக்லாவைவிட சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன் நிஷாத் 21,961 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். மற்றொரு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பி.ஜே.பி வேட்பாளர் கௌஷலேந்திர சிங் படேலைவிட 59,460 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 

Sponsored


பீகாரின் அராரியா தொகுதியில் ஆர்.ஜே.டி வேட்பாளர் சர்பராஸ் ஆலம், பி.ஜே.பி வேட்பாளர் பிரதீப் குமார் சிங்கை 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதன்மூலம் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பி.ஜே.பி கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பி.ஜே.பி-க்கான ஒரே ஓர் ஆறுதல், பீகார் மாநிலத்தின் பபுவா சட்டசபைத் தொகுதியை அக்கட்சி தக்கவைத்துக் கொண்டதுதான். மற்றொரு சட்டசபைத் தொகுதியான ஜெகனாபாத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆர்.ஜே.டி வெற்றிபெற்றது. 

இந்தத் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "அதீத நம்பிக்கை மற்றும் மெத்தனமே தோல்விக்குக் காரணம். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணியை எதிர்த்து, வியூகம் வகுக்கத் தவறிவிட்டோம். மாநிலங்களவைத் தேர்தலின் ஒருகட்டமாக, இரு கட்சிகளும் அவர்களுக்குள் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதும் பி.ஜே.பி-யின் தோல்விக்குக் காரணம்" என்றார்.

உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் நடந்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பி.ஜே.பி-யின் பின்னடைவு குறித்து, எதிர்காலத்தில் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் மோடி தலைமையிலான மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதன் எதிரொலியாகவே இந்த முடிவு வந்துள்ளது என்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பீகார் இடைத்தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசினோம்.

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை..!

"பாரதிய ஜனதா கட்சியின் சரிவையே இந்தத் தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது. இதற்குக் காரணம், மத்தியில் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் கடந்த நான்காண்டு காலத்தில் நிறைவேற்றவில்லை என்பதுதான். விவசாயிகள் பிரச்னை உட்பட எந்தவொரு பிரச்னைக்கும் அவர்களால் தீர்வுகாண முடியவில்லை. அதை நோக்கி அவர்கள் பயணிக்கவும் இல்லை. குறிப்பாக, 'வெளிநாடுகளிலிருந்து கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்பதுதான் மிக முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டது. அதேபோல 'ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம்' என்று சொன்ன வாக்குறுதி, 'காங்கிரஸ் ஆட்சியில் வானளவுக்கு விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது; நாங்கள் ஆட்சியமைத்தால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம்' என்று சொன்ன வாக்குறுதி, 'விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்' என்ற வாக்குறுதி என எந்தவொரு வாக்குறுதியையும் இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசு அனைத்திலும் தோல்விகண்டுள்ளது. 

அந்தத் தோல்வியை மறைப்பதற்கு வேறுபல பிரச்னைகளை, குறிப்பாக மத மோதல்களைத் தூண்டிவிடுதல் போன்ற செயல்களில் பி.ஜே.பி ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ள கருத்திலேயே, 'மத மோதல்கள் உத்தரப்பிரதேசத்தில்தான் மிக அதிகம்' என்கிறார். எனவே, மத மோதல்களை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலமாக அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதும் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆதரவைப் பெறலாம் என்பதும் திட்டம். மேலும், பசுவதைப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில், பசுக்களை பாதுகாப்பது நாங்கள்தான் என்று அறிவிப்பது போன்ற மத்திய பி.ஜே.பி அரசின் செயல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் ஏற்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி, அதை நிரூபிக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. 

மத்தியில் பி.ஜே.பி அரசுக்கு மக்கள் வாக்களித்தது, வகுப்புவாதக் கொள்கைகளைப் பின்பற்றுவதற்காக அல்ல; மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி சரியாக நடைபெறவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை. விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை என்பதற்காகவே பி.ஜே.பி-க்கு ஆதரவளித்தார்கள். 2014 தேர்தல் பிரசாரத்தின்போது, தான் ஒரு சாமான்ய குடும்பத்தில் இருந்து வந்தவர், தேநீர் விற்றவர். ஏழை எளியவர்களின் வலியை உணர்ந்தவர் என்றெல்லாம் பேசி மோடி வாக்குக் கேட்டார். ஆகவே, தன்னைத் தேர்ந்தெடுத்தால் நாடு வளர்ச்சியை அடையும் என்று தெரிவித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். மக்களும் பி.ஜே.பி-க்கு வாக்களித்தார்கள். ஆனால், அவர் தெரிவித்த வாக்குறுதிகள் நடைமுறையில் இல்லை என்பதால், பி.ஜே.பி.-க்கு எதிரான ஒரு தீர்ப்பை உத்தரப்பிரதேசத்திலும் பீகாரிலும் இப்போது மக்கள் வழங்கியுள்ளனர். பி.ஜே.பி-யின் கோட்டையாக வர்ணிக்கப்பட்ட கோரக்பூர் தொகுதியிலேயே பி.ஜே.பி படுதோல்வியைத் தழுவியுள்ளது. துணை முதலமைச்சர் தொகுதியிலும் அக்கட்சி தோல்வியடைந்துள்ளது. ஆக, முன்பு வளர்பிறையாக இருந்த பி.ஜே.பி இப்போது தேய்பிறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்கிறீர்கள். வரப்போகிற தேர்தல்களில், வகுப்புவாதத்துக்கு எதிராக, மதச்சார்பற்றக் கட்சிகள் மற்றும் ஜனநாயகக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான், எங்களின் நிலை. அதை நோக்கியே எங்கள் கட்சியின் மாநாட்டில் அறிக்கையை முன்வைக்கிறோம். இப்போதுள்ள மோடி அரசாங்கம், வெறும் பொருளாதாரக் குற்றங்களை மட்டும் செய்யவில்லை. வகுப்புவாத வெறியர்களைக் காப்பாற்றுகிற, ஒரு பாசிசத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிற ஓர் அரசாங்கமாக இருக்கிறது. ஆகவே, இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என்பதற்காக, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுடன் இடதுசாரிகள் ஒருங்கிணைந்து செயலாற்றும். அதே நேரத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத மூன்றாவது அணி என்பது, இப்போதைக்கு நடைமுறைச் சாத்தியமல்ல. காங்கிரஸ் கட்சியையும் பி.ஜே.பி-யையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது என்பது எங்களின் கருத்து" என்றார்.

பி.ஜே.பி-க்கான சவால்...!

பி.ஜே.பி-யின் தோல்வி குறித்து அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், "இந்தத் தோல்வி பி.ஜே.பி-க்கு இப்போதைய சூழலில், உண்மையிலேயே எங்கள் கட்சி சந்திக்க வேண்டிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உத்தரப்பிரதேச முதல்வரின் சொந்தத் தொகுதி என்கிறபோது, பி.ஜே.பி இதை முக்கியப் பிரச்னையாக, அதிதீவிரமாக எடுத்து, எந்த இடத்தில் சரிசெய்வது, எதற்காக இந்தத் தோல்வி என்பதையறிந்து, யோசிக்க வேண்டியநிலை உருவாகியுள்ளது. பி.ஜே.பி-க்கான பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக, அந்தத் தொகுதிகளில் மிகக் குறைந்த அளவு வாக்குப்பதிவு என்பதையும் பார்க்க வேண்டும். குறிப்பாக, இடைத்தேர்தல் நடைபெற்ற நகர்ப்பகுதிகளில் 21 சதவிகித வாக்குப்பதிவு என்பது, பி.ஜே.பி-யின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டதாக நாங்கள் பார்க்கிறோம். குறைந்த வாக்கு சதவிகிதம் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டது என்ற இரண்டு காரணிகளும் தோல்விக்குக் காரணம் எனலாம். தவிர, வாக்குகள் வித்தியாசத்தை எடுத்துக் கொண்டாலும், மிக அதிகளவு எல்லாம் கிடையாது. சமாஜ்வாதியின் வெற்றியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேவேளையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்தும்கூட 50,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட அங்கு இல்லாமல் ஆக்கப்பட்ட சூழல்தான். ஏறக்குறைய காங்கிரஸ் கட்சிக்கு 20,000 வாக்குகள்கூட பெற முடியாத நிலைதான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவை மிகப்பெரிய வீழ்ச்சியாகப் பார்க்கத் தேவையில்லை. அதேசமயம் எங்களுக்கு மிக முக்கிய ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கிறோம். 

உத்தரப்பிரதேச மாநில அரசின் மீதான அதிருப்தியா என்று கேட்கிறீர்கள். பி.ஜே.பி-யை அடியோடு வெறுப்பவர்கள், அவர்களின் கற்பனைக்கு எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதிருப்தியா வீழ்ச்சியா என்பதெல்லாம் அவரவர்களின் பார்வையைப் பொறுத்தது. எனவே, இந்தத் தேர்தல் முடிவுகளை, நாங்கள் இன்னும் எச்சரிக்கையாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கும் 2019-ல் எங்களின் தேர்தல் பணிகளை, எதிரிக்கட்சிகள் ஒன்றாக இணைந்தால், அதைச் சந்திப்பதற்கான வியூகங்களோடு நாங்கள் களமிறங்க வேண்டும் என்பதற்கும் முதல்பாடமாக இருக்கும்" என்றார்.

எப்படி இருப்பினும் பி.ஜே.பி தன் நிலைப்பாட்டை உணர்ந்து, எதிர்காலத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். மக்கள் இப்போதே தேர்தல் குறித்த சூழலுக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.



Trending Articles

Sponsored