மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?



கிம்சை வழியிலான போராட்டங்கள் வெற்றி பெறும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள் மகாராஷ்டிரா விவசாயிகள். தங்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத அரசுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆயுதம் ஏதும் இல்லாமல் இந்த வெற்றியை அவர்கள் அடைந்துவிடவில்லை. மிகவும் வலுவான ஆயுதத்துடன்தான் அவர்கள் போரிட்டனர். ஒற்றுமை என்பதுதான் அந்தப் பிரமாஸ்திரம்! 50 ஆயிரம் விவசாயிகள் ஒரு தெளிவான நீரோட்டம் போல, நாசிக் முதல் மும்பை வரை 180 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்திருக்கிறார்கள். இத்தனை பெரிய கூட்டத்தால் எந்த இடத்திலும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ சிறு இடையூறும் ஏற்படவில்லை. அத்தனை நேர்த்தியாகப் பேரணியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு பாதிக்கக் கூடாது என்பதற்காக அதிகாலையில் மும்பையை அடைந்த விவசாயிகளின் செயல் மும்பைவாசிகளை நெகிழ்வடைய வைத்துள்ளது. சரியான திட்டமிடல், நேர்த்தியான ஒருங்கிணைப்புடன் நடந்து முடிந்திருக்கிறது மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம். 

Sponsored


ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்னும் சில மணி நேரங்களில் சட்டசபையை முற்றுகையிடக்கூடும் என்ற நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அவசரம் அவசரமாக அறிவித்திருக்கிறது மாநில அரசு. அத்துடன் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் ஊர் திரும்புவதற்கு சிறப்பு ரயிலையும் ஏற்பாடு செய்துக்கொடுத்திருக்கிறது. ஒரு போராட்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளது மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம். இதிலிருந்து தமிழக விவசாயச் சங்கத் தலைவர்களும், விவசாயிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருக்கின்றன. மகாராஷ்டிராவில் சாத்தியமானது தமிழகத்தில் ஏன் சாத்தியமாகவில்லை என்பதை விவசாய அமைப்புகள் சிந்திக்க வேண்டும். 

Sponsored


மகாராஷ்டிரா விவசாயிகள் மாநில அரசிடம் முன்வைத்த அனைத்துப் பிரச்னைகளும் இங்கேயும் இருக்கின்றன. அதற்காகப் பல்வேறு போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பலன்? தமிழக விவசாயச் சங்கத் தலைவர்களிடமும், விவசாயிகளிடமும் போராட்ட குணம் இல்லையா? இருக்கிறது. ஆனால், ஏன் மகாராஷ்டிராவைப் போல் ஒரு வெற்றியை அடைய முடியவில்லை? உங்களிடம் எல்லாமும் இருக்கிறது. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும்தான் இல்லை. அதுதான் ஒற்றுமை. நாராயணசாமி நாயுடு நடத்திய மாட்டு வண்டிப் போராட்டம், எத்தனை பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அத்தனை அடக்குமுறைக்கும் இடையில் இலவச மின்சாரம் என்ற தங்கள் கோரிக்கைக்கு அரசை அடிபணிய வைத்தார்களே... அதற்குக் காரணம் விவசாயிகளின் ஒற்றுமைதானே? விவசாயமும், விவசாயிகளும் மாபெரும் சிக்கலில் சிக்கியுள்ள, கிட்டத்தட்ட ஊழிக்காலத்தை நினைவுபடுத்துகின்றன. இந்தச் சூழலிலும் ஒன்றிணையவில்லை என்றால் பிறகு எப்போது ஒன்றிணைவது? இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் விவசாயி என்ற வர்க்கமே இருக்காது. அதைத்தான் ஆள்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பது தனிக்கதை. 

Sponsored


ஐயா, தமிழக விவசாயச் சங்கத்தலைவர்களே, நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. ஊருக்குப் பத்து சங்கம் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை. பத்துச் சங்கமும் கலெக்டர் அலுவலகம் முன்பாக தனித்தனியாக நின்று போராடுவதால் எந்தப் பயனும் இல்லை. பத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து நின்று போராடுங்கள். அப்போதுதான் அதிகாரிகள் அசையவாவது செய்வார்கள். ஆனால், திசைக்கொருவராய் நின்றுகொண்டு போராடிக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது போராடுவதாக நினைத்துக்கொண்டு உங்களையும், உங்களை நம்பியுள்ள விவசாயிகளையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். 

இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாய தியாகிகள் நினைவாக ஜீலை 5-ம் தேதி விவசாய தியாகிகள் தினம் (உழவர் தினம்) கொண்டாடப்படுகிறது. அந்தத் தினத்தில் மாவட்டத்துக்கு ஓர் அமைப்பு கூட்டம் நடத்துகிறது. அந்த ஒருநாளிலாவது அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஏதாவது ஓரிடத்தில் மிகப்பெரிய பேரணி, பொதுக்கூட்டத்தை நடத்தலாமே? நாராயணசாமி நாயுடு காலத்தில் அப்படித்தானே நடந்தது! அப்போதே ஒரு லட்சம் விவசாயிகள் ஓரிடத்தில் கூடினார்களே... அதை மீண்டும் ஏன் செயல்படுத்திக்காட்டக்கூடாது? தமிழகத்தில் இதுவரை நடந்திராத அரசியல் நிகழ்வுகள் கூட நடக்கின்றன. முதலமைச்சரும் எதிர்கட்சித் தலைவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால், விவசாயச் சங்கத் தலைவர்களான நீங்கள் ஆளுக்கொரு திசையில் திருப்பிக்கொண்டு நிற்கிறீர்கள். விவசாயிகள் ஒன்றிணையத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், தலைவர்கள்தான் ஒன்றிணையத் தயாராக இல்லை. முன் எப்போதையும்விட, இளைஞர்கள், பொதுமக்களிடம் விவசாயிகளுக்கான மரியாதை உயர்ந்திருக்கிறது. எந்த ஒருங்கிணைப்பும் முறையான வழிகாட்டுதலும் இல்லாத நிலையிலும், மாணவர்கள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை மீட்டுக்கொடுத்தார்களே அதை நினைத்துப் பாருங்கள். உங்களிடம் தலைமையும் இருக்கிறது ஒருங்கிணைப்பு இருக்கிறது. ஆனாலும் ஏன் இணைய மறுக்கிறீர்கள் என்பதில்தான் உறைந்துக்கிடக்கிறது அரசியல். 

தலைவர்கள் ஆளுக்கொரு அரசியல் கட்சியிலும், நடிகர்கள் பின்னாலும் நின்றுகொண்டிருந்தால் எப்படி நிறைவேறும் உங்கள் கோரிக்கைகள்? நீங்கள் அரசியல்வாதிகள் போல ஆகிவிடாதீர்கள். இதே நிலை நீடித்தால் விவசாயிகளே உங்களைப் புறக்கணித்து விடுவார்கள். அதற்கு முன்பாக விழித்துக்கொள்ளுங்கள் தலைவர்களே. இல்லையென்றால் ஆயுளுக்கும் போராடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். தலைமேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது. இனியும் ஈகோ பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். குற்றுயிரும், கொலையுயிருமாக இறந்துகொண்டிருக்கும் சூழலில் ஈகோ எதற்கு? விவசாய சங்கத் தலைவர்கள் கூடிப்பேசுங்கள். நீங்கள் தனித்தனி அமைப்பாகச் செயல்பட்டுக்கொள்ளுங்கள். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், போராட்டங்களில் இணைந்து குரல் கொடுங்கள். அதற்கு முன்பாக உங்கள் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை மக்களுக்கும் புரிய வையுங்கள். வரும் உழவர் தினத்தில் ஒட்டு மொத்த விவசாய அமைப்புகள் ஓரிடத்தில் அணி திரளுங்கள். உங்கள் கோரிக்கைகளை அரசுக்குச் சொல்லுங்கள். ஒருமித்த குரலில் ஓங்கி ஒலிக்கும் உழவனின் குரலால் அரசாங்கம் அதிரட்டும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறட்டும். இது சாத்தியமா என நினைப்பவர்கள், மகாராஷ்டிரா விவசாயிகளின் வெற்றி போராட்டத்தை நினைவில் கொள்ளுங்கள். 



Trending Articles

Sponsored