காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு டெல்லியில் குரல் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...



Sponsored



சிலைகள் உடைப்பு, ரத யாத்திரை என நாளொரு சிக்கல் தமிழகத்தைச் சூழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழக மக்கள் நிரந்தரமாகவே சந்தித்துவரும் காவிரி நதிநீர் பிரச்னையையும் எப்போதும் கவனத்தில் இருத்திக்கொள்வது அவசியம். கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழகம் கர்நாடகம் இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அதன்படி கர்நாடகம் தமிழகத்துக்கு வெறும் 177.5 டி.எம்.சி நீர் மட்டுமே அளித்தால் போதுமானது என்று கூறியது. இது காவிரி நதிநீர் தீர்ப்பாயம் குறிப்பிட்ட 192  டி.எம்.சியை விட 14.75 டி.எம்.சி குறைவானது. தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், தீர்ப்பாயம் தமிழகத்தின் நிலத்தடி நீர் அளவைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தது. கர்நாடகத்துக்கான நீர் அளவைப் பொறுத்தவரை வருடாந்திரமாக 284.75 டி.எம்.சி நீர் தரப்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதில் இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரமும் கர்நாடகத்தின் தலைநகரமுமான பெங்களூருவுக்கு மட்டும் 6.5 டி.எம்.சி நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தீர்ப்பாயத்தின் முடிவில் வெறும் 1.75 டி.எம்.சி மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றமோ நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் பெருகிவரும் பெங்களூருவுக்குத் தீர்ப்பாயம் குறிப்பிட்டிருக்கும் அளவு வெறும் சொற்பமே. அதனால், அதற்கான நீரின் தேவை அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலும் ``இந்தத் தீர்ப்பு அடுத்து வரும் 15 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்றும் இந்த இடைப்பட்ட காலத்தில் மாநிலங்களின் நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக தனிக்குழு ஒன்று அமைத்துக் கண்காணிக்கப்படவேண்டும்” என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார். 

Sponsored


நிற்க, பல ஆண்டுகாலமாகத் தொடரும் சிக்கல் என்றாலும் 2007ல்தான் காவிரி நதிநீர் விவகாரம் பெரிதானது. அன்று தொடங்கியே கூட இத்தனை காலமும் காவிரியிலிருந்து அதிக நீர் பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும் கர்நாடகம் நீர் பற்றாக்குறையால் தவித்துக்கொண்டு வறண்ட பூமியாகவே இருக்கிறதே ஏன்? என்பது ஒரு சாதாரண மனிதனுக்கும் எழக்கூடிய கேள்வி.  அண்மையில் கர்நாடக மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்ள வாய்த்தது. மாண்டியா உள்ளிட்ட காவிரி நதிநீர் பாயும் மாவட்டங்கள் வழியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதியான மாண்டியாதான் ஒவ்வொருமுறை காவிரிவிவகாரம் பெரிதாகும்போதும் கலவரபூமியாகும் களம். தலைநகரத்துக்கு அருகில் இருக்கும் மாவட்டம். ஆனால், இத்தனை ஆண்டுகாலத்திலும் அது வறண்ட நிலமாகவே காட்சியளிக்கிறது. ஆறுகள் சென்றுகொண்டிருக்க வேண்டிய தடங்கள் எல்லாம் வறண்டு புதர்களே மண்டிக்கிடந்தன. தமிழகம் காவிரி நதிநீர் பெற்றுக்கொள்வதை அதற்குக் காரணமாக நிச்சயம் கூறிவிட முடியாது.

Sponsored


அதே சமயம், கர்நாடக அரசால் நிர்வகிக்கப்படும் பெங்களூருவின் மெட்ரோ நீர் விநியோகக் குழுமம் தனது தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையை இதில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. காவிரியிலிருந்து அந்த நகரத்துக்குக் கிடைக்கும் மொத்த நீரில் 50% விழலுக்கு இரைத்ததாகவே இருக்கிறது. அதாவது பெங்களூருவின் நிலத்தடி நீர் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அந்த மெட்ரோ நகருக்காக குழாய்களில் வரும் நீர் மட்டுமே 50% வீணடிக்கப்படுகிறது. குழாய்கள் சேதமடைந்திருப்பது. சூழல் மாசு என அதற்கான பல்வேறு காரணங்களை முன்வைத்து அதன் மீது தனிக்குழு ஒன்றை அமைத்து நடவடிக்கை எடுத்துவருவதாகவே தனது தளத்தில் குறிப்பிட்டுள்ளது பெங்களூரு மெட்ரோ நீர் விநியோக வாரியம். அதாவது பெங்களூருவுக்கான நீர் அளவை உச்சநீதிமன்றம் உயர்த்தி இருப்பதற்கான பின்னணி பெங்களூருவின் இந்த நீர் மேலாண்மைப் பிரச்னைதான். 2001ல் 5.8 மில்லியன் இருந்த பெங்களூருவின் மக்கள் தொகை இன்றைய தேதியில் 10 மில்லியன். `பெங்களூரு நாட்டின் முக்கிய சர்வதேசத் தளமாக இருப்பதாலேயே அதற்கான நீர்த்தேவையும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தனது அதே தீர்ப்பில் தீபக் மிஸ்ரா கூறியிருக்கிறார்.பெங்களூருவுக்குத் தரப்படும் முக்கியத்துவம் அதன் மற்ற மாவட்டங்களுக்கும் தரப்படுவதில்லை. அதனாலேயே சிக்கல் இங்கே தமிழகம் வரை நீடிக்கிறது என்பதே தற்போதைய வாதம். 

அன்னா ஹசாரே அமைப்பின் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ரவி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘காவிரி நீர் அதிகம் கிடைத்தாலும் கர்நாடகம் தொடர்ந்து இந்தச் சிக்கலைச் சந்திக்கும். அதற்கு பெங்களூரு மட்டும் காரணமில்லை. கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் அழிக்கப்பட்டுவருவதுதான் அதற்கான முக்கியக் காரணம்’ என்கிறார்.  

மேலும் அவர் தொடர்கையில்,`` மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான சாஹியாத்ரி தொடர்ந்து காடுகளை அழிப்பதால் பாதிக்கப்பட்டுவருகிறது. இதில் காவிரி பெருக்கெடுக்கும் குடகு மலையும் காவிரியின் பாதையும் அடக்கம். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என நீளும் இந்த மலைத்தொடர்ச்சியில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் மழையும் மொத்தமாக இங்கே பொய்த்துவிட்டது. மாண்டியா வறண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறீர்கள். அப்படியே இன்னும் கொஞ்சம் உள்ளே பயணித்து வந்தால் அதே சாலைகளில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வெட்டி எடுத்துச் செல்லப்படும் மரங்களை லாரிகளில் காணலாம். காவிரியைப் போன்று கர்நாடகத்தின் மற்றொரு முக்கிய நதியான நேத்ராவதி இப்படியான அழிவுகளால் மிகவும் சுருங்கிவிட்டது. ஆகையால், இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் இல்லாமல் உண்மைப் பிரச்னை என்ன என்பதை அறிந்து அதற்கான தீர்வுக்கு மத்திய அரசிடம் தொடர்ந்து குரல்கொடுப்பதில்தான் இருக்கிறது” என்றார்.

வறண்டிருக்கும் கர்நாடகத்தின் குடிநீர்ப்பிரச்னையைத் தீர்க்க அதே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எட்டினஹோலே திட்டம் என்னும் பெயரில் அணை அமைக்கும் திட்டத்தை அரசே செயல்படுத்தி வருகிறது. கர்நாடகத்தின் முக்கிய நதியான நேத்ராவதிக்குக் குறுக்கே செயல்படுத்தப்படும். இதனால், அரசே மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை அழித்து வருவதாக அண்மையில்தான் கர்நாடகத்தின் மங்களூருவில் மக்களும் சூழலியலாளர்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நிகழ்த்தினார்கள். இது அல்லாமல் மற்றொருபக்கம் மலைக்காடுகளில் கார்ப்பரேட்டுகள் தனி நகரங்களை நிர்மானித்து வருகின்றன. இதற்கு அரசும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அவர்களும் அங்கிருக்கும் காடுகளை அழித்து வருகின்றனர். நீரின் ஆதாரங்களை அழித்துவிட்டு வாரியம் அதன்மீது எப்படிச் செயல்பட முடியும் என்கிற சிந்தனை இங்கே தேவையாக இருக்கிறது. 

நாடாளுமன்றத்தின் முன்பு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த எம்.பி-க்கள் இந்த அடிப்படைச் சிக்கலையும் சேர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆளும் அ.தி.மு.க. அரசின் எம்.பிக்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில், கர்நாடகத்தில் நிகழும் இதுபோன்ற பேரழிவுகளுக்கும் அதன் பின்னணியிலான அரசியல் குறித்தும் வெளிச்சத்துக்கும் கொண்டுவர வேண்டியது அவசியம். கூடவே கர்நாடகத் தரப்பில் இந்தச் சிக்கல்கள் தொடர்பான விளக்கத்தைக் கேட்டுப்பெறுவதும் அவசியம்.

வாழி காவிரி! 



Trending Articles

Sponsored